அண்டனோம் அல்லது ஒந்தரோசு அண்டனோம் (1885-1915) (ஆங்கிலம்: Antanom அல்லது Ontoros Antanom; மலாய்: Ontoros bin Endoi @ Antanom) என்பவர் மலேசியா, வடக்கு போர்னியோ, சபா மாநிலத்தின் மூருட்டு பழங்குடி இனத்தைச் சார்ந்த ஒரு போர்வீரர் (Murut Warrior) ஆவார்.
இவர் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு (North Borneo Chartered Company) (NBCC) எதிராக ஒரு பெரிய கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.[1]
தன்னிடம் அமானுசய சக்திகள் இருப்பதாகக் கூறிக் கொண்ட இவர், கெனிங்காவு மாவட்டம் (Keningau), தெனோம் மாவட்டம் (Tenom), பென்சியாங்கான் மாவட்டம் (Pensiangan) மற்றும் உராண்டும் மாவட்டம் (Rundum) ஆகிய மாவட்டங்களின் மூருட்டு தலைவர்கள் (Murut Chiefs) பலரை ஒன்றிணைத்தார். பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தில் இறங்கினார்.
வடக்கு போர்னியோவில் வணிகம் செய்து வந்த பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் கொள்கைகள் போர்னியோ பழங்குடி மக்களுக்கு எதிரானவை என்று உள்ளூர் பழங்குடி மக்களிடம் பரப்புரைகள் செய்தார்.
1915-ஆம் ஆண்டில் உராண்டும் கிளர்ச்சியைத் தொடக்கினார். அந்தக் கிளர்ச்சி பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தால் உடனடியாக ஒடுக்கப்பட்டது. இருப்பினுன் அந்த மோதல் மூருட்டு மக்களிடையே பெரும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்தது.
1890-ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (North Borneo Chartered Company), வடக்கு போர்னியோவை (இப்போதைய சபா மாநிலம்) நிர்வாகம் செய்யத் தொடங்கியது. அந்தக் கட்டத்தில் 1891-ஆம் ஆண்டு கிராமச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
சபாவில் இருந்த கிராம ஊராட்சி நிர்வாகங்கள், 1891-ஆம் ஆண்டின் கிராமச் சட்டத்தின் (Village Ordinance of 1891) மூலம், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அந்தக் கிராமச் சட்டம் அப்பகுதியில் உள்ள தலைவர்கள் மற்றும் பாரம்பரியப் பழங்குடித் தலைவர்களின் அடிப்படை நிர்வாக நிலைப்பாட்டை மாற்றி அமைத்தது.
அந்தப் புதிய கிராமச் சட்டத்தின் அமலாக்கத்தைத் தொடர்ந்து, பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் நியமித்த சமூகத் தலைவர்களை மட்டுமே கிராமத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டது. முந்தைய தலைமுறைகளில் முக்கிய பங்கு வகித்த மற்ற பழங்குடித் தலைவர்கள் (Chieftains) புறக்கணிக்கப்பட்டனர்.
அத்துடன் அந்தப் பழையத் தலைவர்களில் பெரும்பாலோர் குற்றவாளிகள் என்றும்; பிரச்சினை செய்பவர்கள் என்றும் முத்திரை குத்தப்பட்டனர். அந்தப் பாரம்பரிய தலைவர்களுக்கு ஏற்பட்ட அவமரியாதையினால், நிறுவனத்திற்கு எதிராக கிளர்ச்சிகள் செய்ய அந்தானோம் முடிவெடுத்தார்.
தன்னிடம் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருப்பதாக அறிவித்த அண்டனோம், கெனிங்காவு, தெனோம், சியாங்கான், உராண்டும் போன்ற மாவட்டங்களின் மூருட்டு தலைவர்களை ஒன்றிணைத்தார். பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு எதிரான 1915-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், உராண்டும் கிளர்ச்சியைத் (Rundum Rebellion 1915) தொடக்கினார்.
நூற்றுக்கணக்கான மூருட்டு கிளர்ச்சியாளர்கள் நிறுவனத்தின் நிர்வாக கட்டிடத்தைத் தாக்கினர்கள். கிளர்ச்சியின் போது தன் சக கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதற்கு நிலத்தடி சுரங்கங்களை அமைக்க அண்டனோம் உத்தரவிட்டார். இதற்குப் பதிலடியாக, ஏப்ரல் 1915 தாக்குதலை எதிர்கொள்வதற்காக 400 போர் வீரர்களை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் அனுப்பியது.
மூருட்டு கிளர்ச்சிக்காரர்கள் தங்களின் பழமையான ஆயுதங்களான ஊது கணைக்குழல்கள் (Blowguns), வாள் மற்றும் ஈட்டிகளை மட்டுமே பயன்படுத்தினர். இருப்பினும் நிறுவனத்தின் போர் வீரர்களால் மூருட்டு கிளர்ச்சிக்காரர்களைத் தோற்கடிக்க முடியவில்லை.
அதைத் தொடர்ந்து, அண்டனோமை பிடிப்பதற்கு பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் முடிவு செய்தது. அவரை உராண்டும் என்ற இடத்தில் ஓர் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
அவரும் அவருடைய சீடர்களும் பேச்சுவார்த்தை நடக்கும் இடத்திற்குச் சென்று கொண்டு இருந்தபோது, அவர்களை நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான போர் வீரர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். அண்டனோம் இறுதியில் தூக்கிலிடப்பட்டார். அண்டனோமின் பிரித்தானிய எதிர்ப்புகளுக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.