அனு வர்தன் (Anu Vardhan) ஓர் இந்திய ஆடை வடிவமைப்பாளரும் தொழில்முனைவோரும் ஆவார்.[1][2] அறிந்தும் அறியாமலும் (2005),பட்டியல் (2006) பில்லா (2007) போன்ற பெரும் வெற்றி பெற்ற படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இவரது கண்வராவார். இவர்கள் திருமணத்துக்குப் பிறகு பல படங்களில் இணைந்து பணியாற்றுகின்றனர். தனது கணவர் படங்களில் இவர் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவைப்பாளாராக இருக்கிறார். இவர், நடிகர் ரசினிகாந்து நடித்த கபாலி, கபாலி போன்ற படங்களில் ஆடை வடிமைப்பாளராக இருந்தார்.
சென்னை, இலயோலா கல்லூரியின் காட்சி தொடர்பாடல் பட்டதாரியான இவர் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான மாநில விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். தனது குடும்ப நண்பர் சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் வெளிவந்த தி டெரரிஸ்ட் (1997) என்ற திரைப்படத்தின் மூலம் அனு வர்தன் திரையுலகில் முதலில் ஈடுபட்டார். இதில் இவர் ஆடை வடிவமைப்பு, திரைக்கதை உரையாடல் ஆகியவற்றிலும் பங்கு கொண்டிருந்தார். மேலும், ஆயிஷா தர்கர் என்ற படத்தின் முன்னணி கதாபாத்திரத்தின் நண்பராக படத்தில் தோன்றினார்.[3] அசோகா (2001) என்ற திரைப்படத்தில் முதன்மை ஆடை வடிவமைப்பாளராக மீண்டும் சிவனுடன் பணிபுரிந்தார். வரலாற்று காலம் குறித்த விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு, இவர் 3ஆம் நூற்றாண்டு கால ஆடைகளை முன்னணி நடிகர்களான சாருக் கான் , கரீனா கபூர் ஆகியோருக்கான ஆடைகளைத் தயாரிக்க உதவினார்.[4][5][6] இயக்குநர்களான விஷ்ணுவர்தன், சிவா ஆகியோரது இயக்கத்தில் அவர்களுடன் ஒருங்கிணைந்து நடிகர் அஜித்குமாருடன் விரிவாக பணியாற்றியுள்ளார்.[7][8]
2016 ஆம் ஆண்டில், அனு வர்தன் கபாலியில் (2016) பணியாற்றினார், இவர் ரஜினிகாந்தை உயர்குடும்ப உடைகள் அணிந்த ஒருவராகவும் 1980களில் தோற்றமளிக்கும் தொழிலாளியாகவும் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் வடிவமைத்தார். இத்திரைப்படம் மூலம் பெரும் பாராட்டுதல்களையும் ஏராளமான விருதுகளையும் பெற்றார்.[9] படத்தின் வெற்றி இயக்குநர் பா. ரஞ்சித் இரசினிகாந்துடனான தனது அடுத்த படமான காலாவில் (2018) இவரை ஒப்பந்தம் செய்ய தூண்டியது. இந்த படத்தில், அனு முதன்மையாக ஒரு கருப்பு கருப்பொருளுடன் குர்தாக்கள் மற்றும் லுங்கிகள் அணிந்து நடிகர்களை நடிக்க வைத்தார்.[10]
அனு தனது வேலையில் கைத்தறி தயாரிப்புகளை தவறாமல் பயன்படுத்துகிறார். குறிப்பாக விசுவாசம் (2019) படத்தில் நயன்தாராவுக்காக பட்டு-பருத்தி புடவைகளை வடிவமைத்தார். இவரது பாணியின் புகழ் இதேபோன்ற தயாரிப்புகளுக்கான தேவையைத் தூண்டியது. பிகில் (2019), தர்பார் (2020) ஆகிய படங்களில் நயன்தாராவுக்கு ஒத்த பொருட்களைக் கொண்ட ஆடைகளை இவர் தொடர்ந்து வடிவமைத்தார்.[11][12]
இவரும் இவரது கண்வர் விஷ்ணுவர்தனும் சேர்ந்து "விஷ்ணு வர்தன் பிலிம்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். இந்நிறுவனம் மூலம் பிங்கர்டிரிப் என்ற ஒரு வலைத் தொடரை தயாரித்தனர். இதில் அக்சரா ஹாசன், அஸ்வின் ககுமனு, சுனைனா, காயத்ரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் ஜீ5இல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.[13][14][15] இது சமூக வலை தளங்களை பயன்படுத்துவோர் எதிகொள்ளும் பிரச்சனைகளை பேசியது.
அனு வர்தன் மூத்த தமிழ் நடிகர் என். எஸ். கிருஷ்ணனின் பேத்தி ஆவார். திரைப்பட இயக்குநர் விஷ்ணுவர்தன் இவரது கணவராவார். இவர்கள் சென்னை இலயோலா கல்லூரியில் சந்தித்து திருமணம் செய்து கொண்டனர். சந்தோஷ் சிவனின் "தி டெரரிஸ்ட்" (1997)படத்திலும் இணைந்து பணியாற்றினார்கள்.[16]