அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி என்பது உலகில் நிகழும் மிகக் குறைவான விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சிகளுள் ஒன்றாகும். இது ஆண்டு தோறும், நியூ யார்க் நகரில் 23 ஆம் தெருவில் உள்ள விளையாட்டுப் பொருட்கள் மையத்திலும்[1], ஜேக்கப் கே. ஜாவிட்சு மாநாட்டு மையத்திலும் இடம்பெறுகிறது. விளையாட்டுப் பொருட்கள் தொழில் துறைக் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்படும் இந்தக் கண்காட்சியில் விளையாட்டுப் பொருட்கள் தொழில் துறையினர் மட்டுமே கலந்து கொள்கின்றனர்]].[2]
புவிக்கோளத்தின் மேற்குப் பகுதியில் இடம்பெறும் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட் கண்காட்சி இதுவே என இதனை ஒழுங்கு செய்பவர்கள் கூறுகின்றனர். 2006 ஆம் ஆண்டில், 30 நாடுகளைச் சேர்ந்த 1,500க்கு மேற்பட்ட உற்பத்தியாளர்களும், வழங்குனர்களும், இறக்குமதியாளர்களும், விற்பனையாளர்களும் தமது பொருட்களை 300,000 சதுர அடிகள் (28,000 சதுர மீட்டர்) பரப்பளவில் காட்சிக்கு வைத்ததனர்.[3]
ஜாவிட்சில் இடம்பெறும் கண்காட்சி ஒரு திறந்த வணிகக் கண்காட்சி அமைப்புக் கொண்டதாக இருக்கும். இங்கே பொருட்களைக் காட்சிக்கு வைப்பதுடன், அவைபற்றிய விளக்கங்களும் இடம்பெறும். அதஏ வேளை விளையாட்டுப் பொருட்கள் காட்சியகப் பகுதிகளில் முக்கியமான விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியாளர்களை விற்பனை முகவர்கள் அமைதியான சூழலில் சந்திப்பதற்கு உகந்த வகையில் அமைந்திருக்கும்.
காட்சிக்கு வைக்கப்படும் பொருட்கள், ஏற்கெனவே வெளியான பொருட்களூடன் இன்னும் வெளியாகாத பொருட்களின் மாதிரிகளும் அடங்கியிருக்கும். பல உற்பத்தியாளர்கள், கண்காட்சிக்கு முன்னதாக, வாடிக்கையாளர்களையும், ஊடகத்துறையினரையும், விளையாட்டுப் பொருட்கள் தொடர்பில் ஆர்வமுள்ல பெருமக்களையும் அழைத்து வரவேற்பு நிகழ்வுகளை நடத்துவதும் வழக்கம்.
பொருட்களை வாங்கும் விளையாட்டுப் பொருட் தொழில் துறையினருக்கு அனுமதி இலவசம். ஆனால் அவர்கள் விளையாட்டுப் பொருட்கள் தொழில் துறை சார்ந்தவர்கள் என்பதற்குச் சான்று வழங்கவேண்டும். ஊடகத்தினட்ருக்கும், உற்பத்தி நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் கட்டணம் உண்டு. பல உற்பத்தியாளர்கள் இக் கண்காட்சியின்போது விளம்பரம் செய்வதில் பெருமளவு முயற்சியெடுக்கிறார்கள். அருகில் உள்ள படத்திற்காணும் அலங்கரிக்கப்பட்ட பேருந்து இதற்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். சிறிய உற்பத்தியாளட்களுடைய மொத்த விற்பனையின் கணிசமான பகுதி இக் கண்காட்சியின் போது இடம்பெறுகிறது.