அம்பாங் Ampang | |
---|---|
ஆள்கூறுகள்: 3°9′38″N 101°44′9″E / 3.16056°N 101.73583°E | |
நாடு | மலேசியா |
கூட்டரசு பிரதேசம் | கோலாலம்பூர் |
தொகுதி | அம்பாங் |
அரசு | |
• உள்ளாட்சி | கோலாலம்பூர் மாநகராட்சி |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 68000 |
தொலைபேசி எண் | +603-2, +603-4, +603-9 |
அம்பாங் அல்லது அம்பாங் இலீர் (ஆங்கிலம்: Ampang அல்லது Ampang Hilir; மலாய்: Ampang Hilir) என்பது மலேசியா, கோலாலம்பூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநகர்ப்பகுதி ஆகும். தித்திவாங்சா மக்களவை தொகுதியின் கீழ் ஒரு பகுதியாக உள்ளது.[1]
கோலாலம்பூரில் உள்ள அம்பாங் சாலை மற்றும் அம்பாங் இலீர் ஆகியவற்றில் அம்பாங் எனும் பெயர் இருப்பதை அதன் அடையாளமாகக் காணலாம்.[2][3]
அம்பாங்கின் வரலாறு கோலாலம்பூரின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது. 1857-இல், சிலாங்கூர் சுல்தானகத்தின் அப்போதைய பிரதிநிதியான ராஜா அப்துல்லா, கிள்ளான் பள்ளத்தாக்கை ஈயச் சுரங்கத் தொழில்களுக்காக திறந்து விட்டார்.[4]
நெகிரி செம்பிலான் லுக்குட் பகுதியில் இருந்து 87 சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் கிள்ளான் ஆறு வழியாகச் சென்று கோலாலம்பூரில் தரை இறங்கினர். பின்னர் அம்பாங்கிற்கு ஒரு காட்டுப் பாதை வழியாக சில மைல்கள் நடந்து சென்றனர். அம்பாங் பகுதியில் ஈயக் கனிமத்தைத் தேடத் தொடங்கினர்.
இருப்பினும், அங்கு சென்ற 87 சுரங்கத் தொழிலாளர்களில் 69 பேர்; ஒரு மாதத்திற்குள் மலேரியா காய்ச்சலினால் இறந்தனர். அதன் பின்னர் ராஜா அப்துல்லா மேலும் 150 பேரை ஈயக் கனிம தேடல் பணியைத் தொடர அங்கு அனுப்பினார். முதல் ஈயச்சுரங்கம் 1859-இல் தோற்றுவிக்கப்பட்டது.
அம்பாங்கில் ஈயச் சுரங்கங்களின் தோற்றம்; கோலாலம்பூரின் துரித வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ’அம்பாங்’ ("Ampang") என்ற பெயர் மலாய் மொழியில் ’அணை’ என்று பொருள்படும்; மற்றும் இந்த இடம் சுரங்கத் தொழிலாளர்கள் உருவாக்கிய அணைகளைக் குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.[5]
வரலாற்றின் படி, 1857-ஆம் ஆண்டில், லும்பூர் ஆறு மற்றும் கிள்ளான் ஆறு சங்கமத்தில் அம்பாங் நகரம் நிறுவப்பட்டது. லும்பூர் ஆறு இப்போது கோம்பாக் ஆறு என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் அம்பாங் உருவான இடத்தில் இப்போது கோலாலம்பூர் ஜமேக் பள்ளிவாசல் (Kuala Lumpur Jamek Mosque) உள்ளது.
ஈயச் சுரங்கங்களில் வேலை செய்வதற்காகச் சீனர்கள் வருவதற்கு முன்னர், கோலாலம்பூர் நகரம் சில கடைகள் மற்றும் சில வீடுகளைக் கொண்ட ஒரு சிறிய குக்கிராமமாக இருந்தது. அம்பாங்கை கோலாலம்பூருடன் இணைக்க ஒரு சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலைதான் இன்றைய அம்பாங் சாலையாகும் (Jalan Ampang').[6]
1857-ஆம் ஆண்டில், அப்போதைய கிள்ளான் சுல்தானின் பிரதிநிதியான ராஜா அப்துல்லா, அம்பாங்கில் ஈயச் சுரங்கங்களைத் திறப்பதற்காக நெகிரி செம்பிலான் லுக்குட் பகுதியில் இருந்து 87 சீன சுரங்கத் தொழிலாளர்களை அனுப்பினர். இதன் பின்னர்தான் கோலாலம்பூர் வளர்ச்சி அடையத் தொடங்கியது.
கிள்ளான் பள்ளத்தாக்கின் தொடக்கக் காலத்தில், ஈயச் சுரங்கங்கள் திறக்கப்பட்ட முக்கியமான இடங்களில் அம்பாங் ஒன்றாகும். "அம்பாங்" என்ற பெயர் மலாய் சொல்லான எம்பாங்கான் (அல்லது அம்பாங்கன்) எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. எம்பாங்கான் (Empangan) என்றால் அணை என்று பொருள்படும்.[7][8]