அருண் சாது (ஆங்கிலம்: Arun Sadhu) ( தேவநாகரி : अरुण साधु) (17 ஜூன் 1941 - 25 செப்டம்பர் 2017) இவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த எழுத்தாளரும் ஒரு சுதந்திரமான பகுதிநேர பத்திரிகையாளருமானவார். இவர் மராத்தி, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில்எழுதியுள்ளார். " சிம்காசன் " மற்றும் " மும்பை தினங்க்" என்ற புதினங்களின் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர்
மகாராட்டிராவின் விதர்பா பிராந்தியத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள அச்சல்பூரில் (பரத்வாடாவின் இரட்டை நகரம்) பிறந்து அங்கேயே வளர்ந்துள்ளார்.
தனது ஆரம்ப வாழ்க்கையில், சாது ஒரு சில தேசிய ஆங்கில செய்தித்தாள்களின் ஊழியராக வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். பின்னர் புனே பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராகவும், தகவல் தொடர்பு மற்றும் பத்திரிகைத் துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு அரசியல் நிருபராக, 1960களில் புனேவின் மராத்தி நாளேடான 'கேசரி'யில் தனது பத்திரிகைத் தொழிலைத் தொடங்கினார். தனது முப்பதாண்டு கால பத்திரிகை வாழ்க்கையில், தி ஸ்டேட்ஸ்மேன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பையில் உள்ள ஃப்ரீ பிரஸ் ஜர்னல் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் டைம் பத்திரிகைக்கு அடித்தளமாக இருந்துள்ளார். [1]
சாது தனது இலக்கியப் பணிகளுக்காக பல விருதுகளை வென்றுள்ளார். 2007இல் நாக்பூரில் மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தலைமை வகித்தார். இவர் சீனா, உருசியா பற்றிய தனது எழுத்துக்கள் மூலம் நகரத்தில் ஒரு காலணி மெருகேற்றும் ஒரு சிறுவனைப் பற்றிய கதையை சித்தரித்தார். இவரது எழுத்துக்கள் சர்வதேச, தேசிய விவகாரங்கள் பற்றிய நுண்ணறிவைத் தருகின்றன. [2]
இவர் ஒரு சில படங்களில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். சூனி தாராபொரேவாலா மற்றும் தயா பவார் ஆகியோருடன் இணைந்து முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் (2000) என்றத் திரைப்படத்தின் இணை திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்துள்ளார். [3]
சாங்லியில் நடைபெற்ற 2008 மராத்தி சாகித்யா சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகவிருந்த சாது, சம்மேளனத்தின் மேடையில் சில அரசியல்வாதிகளுடன் அமர்ந்திருந்த மராத்தி எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் காரணமாக தொடக்க அட்டவணையில் மேடையில் பேசவுள்ள எழுத்தாளர்களுக்கான நேரத்தை சம்மேளனத்தின் தலைவர் என்ற முறையில் குறைத்ததற்காக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அதன் தொடக்க விழாவைவிட்டு வெளியேறினார்.
சாது பல புதினங்கள், [4] சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் சமகால வரலாறு குறித்த ஒரு சில புத்தகங்களையும், வன்முறையை எதித்து சில தலையங்கங்களையும் எழுதியுள்ளார். [5] 1970களில் தயாரிக்கப்பட்ட சிம்காசன் என்றத் திரைப்படத்தின் திரைக்கதை சாதுவின் புதினங்களான மும்பை தினங்க் மற்றும் சிம்காசனன் என்பதிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது.
இதயநோயால் பாதிக்கப்பட்டு சியோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் சாது 2017 செப்டம்பர் 25 திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு மும்பையில் காலமானார். இவரது மரணம் குறித்து மகாராட்டிரா முதல்வர் தேவேந்திர பத்னாவிசு கூறுகையில், “அருண் சாதுவின் நாவலான சின்காசன் மற்றும் மும்பை தினங்க் ஆகியவை மராத்தி இலக்கியத்தில் மைல்கல். சமகால பிரச்சினைகள், பெருநகர வாழ்க்கையின் பிரச்சினைகள் குறித்து அவர் மிகவும் திறம்பட எழுதினார். அவர் அடுத்தத் தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டினார். அவரது மறைவு சோகமானது. எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.” என்ற இரங்கல் செய்தியை வழங்கினார். [6]
அருண் சாது: முனைவர் வியாக்தி அனி வாங்மாயாதர்சன், முனைவர் இராகுல் கண்டே மற்றும் சாங்ம்னர் ஆகியோர் எழுதிய ஆய்வறிக்கை