மொத்த மக்கள்தொகை | |
---|---|
20,833,116 (2011)[1] இந்திய மக்கள்தொகையில் 1.7% | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சண்டிகர் · தில்லி · அரியானா · சம்மு காசுமீர் · மத்தியப் பிரதேசம் · மகாராட்டிரம் · பஞ்சாபு · இராசத்தான் · உத்தரப் பிரதேசம் · உத்தராகண்டம் · தெலங்காணா · ஆந்திரப் பிரதேசம் | |
மொழி(கள்) | |
பஞ்சாபி |
சீக்கியம் இந்தியாவின் நான்காவது பெரிய சமயம் ஆகும்; இதை நிறுவிய குரு நானக்கின் காலத்திலிருந்து 546 ஆண்டுகள் பழமையானது. சீக்கியர்கள் முதன்மையாக பஞ்சாபில் வாழ்கின்றனர்; இந்தியாவின் பல பகுதிகளிலும் விரவியுள்ளனர். உலகில் மிகப்பெரிய சமயங்களில் ஐந்தாவதாகவும் விளங்குகின்றது.[2][3] 2010ஆம் ஆண்டில் உலகளவில் 25 மில்லியன் பற்றாளர்களைக் கொண்டிருந்தது.[4]
2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2.08 கோடி (20.8 மில்லியன்) சீக்கியர்கள் வாழ்கின்றனர். பஞ்சாபில் பெரும்பான்மையினரின் சமயமாக உள்ள சீக்கியம் குறிப்பிடத்தக்க அளவில் அரியானா, தில்லி, இராசத்தான், உத்தராகண்ட மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது.[5]
சீக்கியர்கள் இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பினும் நாட்டில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளனர். இந்தியாவின் முன்னாள் இந்தியப் பிரதமர் முனைவர் மன்மோகன் சிங்[6] முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் ஆகியோர் புகழ்பெற்ற சீக்கியர்களாவர். இந்தியாவின் ஒவ்வொரு அமைச்சரவையிலும் சீக்கியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியப் படைத்துறையின் மூன்று பிரிவுகளிலும் தலைமையிடங்களை எட்டியுள்ளனர். பிரித்தானிய பேரரசுக் காலத்திலிருந்தே சீக்கியர்கள் இந்தியப் படைத்துறையின் முதன்மை படைப்பிரிவாக இருந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு விளையாட்டுத் துறைகளிலும் சீக்கியர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். ஒலிம்பிக்கில் தனிநபர் விளையாட்டொன்றில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள ஒரே அபினவ் பிந்த்ரா சீக்கியராகும். அரசுத் துறை அமைப்புகளிலும் முதன்மையான பதவிகளில் இருந்துள்ளனர்: கலைக்கப்பட்டுள்ள திட்டக் கமிசனின் துணைத் தலைவர், மான்டெக் சிங் அலுவாலியா;[7] தமிழக ஆளுநர் சுர்சித் சிங் பர்னாலா போன்றோர் ஒருசிலராவர். தொழில்துறையிலும் தொழில் முனைவிலும் சீக்கியர்கள் முத்திரை பதித்துள்ளனர். மனமகிழ்வு துறைகளிலும் பாடகர் தலேர் மெகந்தி, தில்ஜித் தோசஞ்சி, ராபி செர்கில் போன்றோர் புகழ்பெற்று விளங்குகின்றனர். இந்திய விடுதலை இயக்கத்திலும் முதன்மை பங்காற்றியுள்ளனர். இளைஞர்களுக்கு பகத் சிங் ஒரு முன்மாதிரி நாயகராக உள்ளார்.[8]
சீக்கியர்களின் வழிபாட்டிடம் குருத்துவார் எனப்படுகின்றது. சீக்கியத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று வழிபாட்டிடங்களைக் காண்பது ஆதரிக்கப்படவில்லை; கடவுள் எங்கும் உள்ளதால் குறிப்பிட்ட இடங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்பது தேவையில்லை.[9] இந்தியாவில் உள்ள சீக்கியர் குருத்துவாராக்களில் பஞ்சாபின் அமிருதசரசில் உள்ள பொற்கோயில் முதன்மையானதாகும்.
சென்னையில் 300 சீக்கியக் குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தானுந்து உதிரிப் பாகங்ளின் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.[10] முதன்மையான குருத்துவாரா சென்னையின் தியாகராய நகரில் உள்ளது. துடுப்பாட்ட விளையாட்டில் ஏ.ஜி. கிருபால் சிங் சென்னைக்காக இரஞ்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளார்; இந்தியத் துடுப்பாட்ட அணியில் 1955க்கும் 1964க்கும் இடையே 14 தேர்வுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.[11]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)