இந்திய மொழியியல் ஆய்வு (Linguistic Survey of India) என்பது, பிரித்தானிய இந்தியாவின் மொழிகள் தொடர்பான விரிவான ஆய்வு ஆகும். இது 364 மொழிகளையும் கிளைமொழிகளையும் உள்ளடக்கியது. அக்காலத்து இந்திய அரசாங்கம் 1894க்கும் 1928 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் செயற்படுத்திய இத்திட்டத்துக்கு, இந்தியக் குடிமைப் பணியைச் சேர்ந்த ஜார்ஜ் ஏ. கிரியெர்சன் பொறுப்பாக இருந்தார். கிரியெர்சனின் வெளியீட்டில் இருந்த ஒவ்வொரு சொல்லுக்குமான விபரங்களைப் பெறக்கூடியதாக தேடும் வசதியோடு கூடிய இணையத்தளம் ஒன்று உள்ளது. தவிர, பிரித்தானிய நூலகத்தின் ஒலி ஆவணக்காப்பகத்தில் இது தொடர்பான ஒலித்தட்டுப் பதிவுகள் உள்ளன.
1984ல் புதிய இந்திய மொழியியல் ஆய்வு ஒன்று, தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் மொழிப் பிரிவினால் தொடங்கப்பட்டது. இது இன்னும் தொடர்ந்து நடைபெறுகின்றது. 2010 ஆம் ஆண்டு முடிவில், 40% வேலைகள் நிறைவுற்றிருந்தன. கிரியெர்சனின் ஆய்வுக்குப் பின்னர் மொழியியல் நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆராயும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நோக்கத்தையே இது கொண்டிருந்தது.[1] மொழியியல் தரவுகளைச் சேகரிப்பதற்கு சாதாரண மக்களைப் பயன்படுத்தாமல், மொழி ஆசிரியர்களையும், அரசாங்க அலுவலர்களையும் பயன்படுத்தும் கிரியெர்சனின் தவறான முறையையே புதிய ஆய்வும் பின்பற்றுவதைப் பல தொழில்ரீதியான மொழியியலாளர்கள் குறைகூறியுள்ளனர்.
1991 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து, இந்தியாவில் தனியான இலக்கண அமைப்புடன் கூடிய 1576 தாய்மொழிகளும், பிற தாய்மொழிகள் என வகைப்படுத்தப்பட்ட 1796 மொழிகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, முழுமையானதும், துல்லியமானதுமான ஆய்வு ஒன்றின் தேவையை உணர்த்துகின்றது. கிரியெர்சனின் ஆய்வு பயிற்சி பெறாத களப் பணியாளர்களில் தங்கியிருந்ததுடன், பழைய மாநிலங்களான, பர்மா, மதராஸ் ஆகியவற்றையும், ஐதராபாத், மைசூர் போன்ற சமஸ்தானங்களையும் ஆய்வுக்குள் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால், தென்னிந்தியாவின் பெரும்பகுதி அந்த ஆய்வுக்குள் அடங்கவில்லை.[2][3]
2007 முதல் 2012 வரையான காலப்பகுதிக்கான பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தில் விரிவான இந்திய மொழியியல் ஆய்வொன்றைச் செய்வதற்காக 2.8 பில்லியன் இந்திய ரூபா ஒதுக்கப்பட்டது. புதிய ஆய்வு இரண்டு பகுதிகளாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஒன்று புதிய இந்திய மொழியியல் ஆய்வு. மற்றது சிறிய மற்றும் அழிவை எதிர்நோக்கும் மொழிகள் குறித்த ஆய்வு. மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனத்தின் ஆதரவுடன்,[4] உதய நாராயண சிங் என்பாரின் வழிகாட்டுதலின்கீழ் 54 பல்கலைக்கழகங்கள், 2,000 ஆய்வாளர்கள், 10,000 மொழியியலாளர் மற்றும் மொழி வல்லுனர் ஆகிய நிறுவனங்களையும், தனியாட்களையும் 10 ஆண்டுகளுக்குப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டது.[2]
2010 ஏப்ரலில், டைம்ஸ் ஆஃப் இன்டியாவில் வந்த செய்தியொன்றின்படி[5] மேற்படி ஆய்வு கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக, கிரியெர்சனின் ஆய்வின் தொடர்ச்சியாக இந்திய மக்கள் மொழியியல் ஆய்வு என்னும் பெயரில் ஒரு ஆய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொழி ஆய்வு மற்றும் பதிப்பு மையம் எனப்படும் அரசுசார்பற்ற நிறுவனமொன்றின் ஆதரவுடன், கணேஷ் என். தேவி என்பவரைத் தலைவராகக் கொண்டு இடம்பெறும். இத்திட்டத்தை இமலாய மொழிகளுடன் தொடங்க எண்ணியுள்ளனர். மொழி அடிப்படையிலான பாகுபாட்டையும், மொழி ஆதிக்கவாதத்தையும் தூண்டக்கூடும் என்று அரசாங்கம் அச்சம் கொண்டிருந்ததாலேயே, முன்னர் திட்டமிடப்பட்ட விரிவான ஆய்வு கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.[6]
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)