இலாய் தெக் Lai Teck | |
---|---|
பொதுச்செயலாளர், மலாயா பொதுவுடைமை கட்சி | |
பதவியில் ஏப்ரல் 1939 – 6 மார்ச் 1947 | |
பின்னவர் | சின் பெங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1901[3] நிகே தின் மாநிலம், அன்னாம்[4] |
இறப்பு | 1947 (அகவை 45–46) பாங்காக், தாய்லாந்து |
காரணம் of death | மூச்சுத் திணறல் |
இளைப்பாறுமிடம் | சாவோ பிரயா ஆறு |
தேசியம் | வியட்நாமியர் |
அரசியல் கட்சி | மலாயா பொதுவுடைமை கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் |
வேலை | அரசியல்வாதி, உளவாளி |
மற்ற பெயர்கள் | லாய் டெக், லோய் தக், லீ சூங்,[3] Wong Kim Geok,[5] சாங் ஆங், திரு. ரைட்[6] |
இலாய் தெக் (மலாய்: Lai Teck; ஆங்கிலம்: Lai Teck வியட்நாமிய மொழி: Phạm Văn Đắc); என்பவர் மலாயா பொதுவுடைமை கட்சி (Communist Party of Malaya); மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் (Malayan People's Anti-Japanese Army) ஆகிய அமைப்புகளின் தலைவராகப் பதவி வகித்தவர். சீன-வியட்நாமிய (Sino-Vietnamese) கலப்பு வம்சாவளியைச் சேர்ந்தவர்.[6][7]
அவர் மலாயாவுக்கு வருவதற்கு முன்பு, அவருடைய பெயர் துருவோங் புவோக் தாட் (Truong Phuoc Dat) என இருந்ததாக நம்பப்படுகிறது. அதன் பின்னர் 1934-இல் இருந்து இவர், இலாய் தெக் எனும் பெயரில் அறியப்படுகிறார்.[8]
இலாய் தெக்கின் உண்மையான பெயர் மற்றும் பின்னணி தெரியவில்லை. இருப்பினும் அவர் 1901-ஆம் ஆண்டில் ஒகோங் ஆ நாக் (Hoang A Nhac) அல்லது பாம் வான் தாக் (Phạm Văn Đắc) எனும் பெயரில் பிறந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[2]
இந்தோசீனாவில் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஒரு உளவாளியாகச் (French Spy in Indochina) சேவை செய்ததாக நம்பப்படுகிறது. மலாயா பொதுவுடைமை கட்சிக்குள் ஊடுருவல் செய்வதற்காக, 1934-இல் அவர் பிரித்தானிய பாதுகாப்புப் பிரிவினரால் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.[9]
பிரித்தானியக் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டு மலாயா பொதுவுடைமை கட்சிக்குள் இருந்த தன் போட்டியாளர்களை அப்புறப் படுத்தியதாகவும்; அதன் மூலமாக அவர் பதவி உயர்ந்ததாகவும் அறியப்படுகிறது. அந்த வகையில் அவர் ஏப்ரல் 1939-இல் மலாயா பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் எனும் தலைமைத்துவத்தை அடைந்தார்.[10]
பிரித்தானிய மலாயாவில் பிரித்தானியருடன் பகைமை பாராமல் மலாயா பொதுவுடைமை கட்சியை வழிநடத்தினார். பொதுவுடைமை கொள்கையின் புதிய ஒத்துழைப்பை (Communist International's New Line of Co-operation) முழுமையாக ஏற்றுக்கொண்டார். நாட்சி ஜெர்மனி (Nazi Germany) மற்றும் சப்பானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் நட்புறவு பாராட்டினார்.
சிங்கப்பூர் சப்பானியர்களின் கரங்களில் விழுவதற்கு முன்பே மலாயா பொதுவுடைமை கட்சியின் உயர்மட்டப் பணியாளர்கள் பலர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஆனால் இலாய் தெக் மட்டும் அவ்வாறு செய்யவில்லை. இருப்பினும், அவர் மார்ச் 1942-இல் சப்பானியர்களால் கைது செய்யப்பட்டார்.
பெரும்பாலான பொதுவுடைமைவாதிகள் சப்பானியர்களால் தூக்கிலிடப் பட்டாலும், இலாய் தெக் மட்டும் சில நாட்களுக்குப் பிறகு சுதந்திரமாகத் திரும்பி வந்தார். சப்பானிய காப்பகங்களில் (Japanese Archives) உள்ள ஆவணங்கள்; மற்றும் பிற்காலச் சான்றுகளின் அடிப்படையில், சப்பானிய உளவாளியாகச் (Japanese Agent) செயல்பட உறுதியளித்து, இலாய் தெக் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கலாம் எனத் தெரிய வருகிறது.
1942 செப்டம்பர் 1-ஆம் தேதி கோலாலம்பூருக்கு வடக்கே 10 மைல் தொலைவில் இருக்கும் பத்துமலை குகைகளில் ஒன்றில், மலாயா பொதுவுடைமை கட்சித் தலைவர்கள் (CPM's Central Executive Committee); மற்றும் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத் தலைவர்களின் இரகசியக் கூட்டம் நடைபெற்றது. குகைகளுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் இலாய் தெக்,
ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட பொதுவுடைமைத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். யாரோ ஒருவர் மூலமாகச் சப்பானியர்களுக்கு அந்த இரகசியக் கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிய வந்தது.
அதிகாலையில் அந்தக் கூட்டத்தின் மீது சப்பானியர்கள் அதிரடித் தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தாக்குதலில் பொதுவுடைமை தலைவர்கள் பெரும்பாலோர் கொல்லப் பட்டார்கள். கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய இலாய் தெக் மட்டும் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய கார் பழுது அடைந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என்று காரணம் கூறினார்.[11]
1946-இல், இலாய் தெக்கின் விசுவாசமின்மை குறித்து கட்சிக்குள் வதந்திகள் பரவின. அதன் விளைவாகத் தீவிர விசாரணை நடவடிக்கைகளுக்கு உள்ளனார். சில முக்கியப் பதவிகளில் இருந்து இலாய் தெக் அகற்றப்பட்டார். பின்னர் அவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை தொடங்கியது.
இலாய் தெக்கிற்கு எதிராக 6 மார்ச் 1947-இல் மத்திய செயற்குழுவின் (Central Executive Committee) விசாரணைக் கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. இருப்பினும் அந்தக் கூட்டத்தில் இலாய் தெக் கலந்து கொள்ளவில்லை. மாறாக மலாயா பொதுவுடைமை கட்சியின் பொது நிதியின் (Party's Funds) பெரும்பகுதியுடன் தலைமறைவானார்.
முதலில் அவர் சிங்கப்பூரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பின்னர் ஆங்காங்கிற்குச் சென்று, அதன் பின்னர் தாய்லாந்து நாட்டிற்குச் சென்றார்.[12]
இலாய் தெக் தலைமறைவான பிறகு, மலாயா பொதுவுடைமை கட்சி, சின் பெங் என்பவரைப் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தது. 1947-இல் சின் பெங் பாங்காக் மற்றும் ஆங்காங் சென்றார். அங்குள்ள பொதுவுடைமை கட்சி அமைப்புகளைத் (Communist Party Organizations) தொடர்பு கொண்டார். இலாய் தெக்கைக் கண்டுபிடித்துக் கொன்று விடுமாறு கேட்டுக் கொண்டார். வியட்நாம் மற்றும் தாய்லாந்து பொதுவுடைமைவாதிகளும் சின் பெங்கிற்கு உதவுவதாக வாக்கு அளித்தனர்.[12]
பின்னர் இலாய் தெக் பாங்காக்கில் தற்செயலாகக் கொல்லப் பட்டதாக தாய்லாந்து பொதுவுடைமை தலைவர்கள் சின் பெங்கிடம் அறிவித்தார்கள். தாய்லாந்து பொதுவுடைமைவாதிகள் மூவர், அவரைப் பிடிக்க முயன்றதாகவும்; அப்போது நடந்த போராட்டத்தில் இலாய் தெக் மூச்சுத் திணறி இறந்ததாகவும்; அதன் பிறகு அவரின் உடல் ஒரு சாக்கு பையில் கட்டப்பட்டு சாவோ பிரயா ஆற்றில் (Menam River) வீசப் பட்டதாகவும் அறியப்படுகிறது.[12][13]
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)