ஈசுவரன் கோவில் ( Ishvara Temple ) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்திலுள்ள அரசிகெரே நகரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இது பொ.ஊ. 1220இல் போசளர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது. வரலாற்று நகரமான மைசூருக்கு வடக்கே 140 கி.மீ தூரத்திலும், ஹாசன் நகரிலிருந்து கிழக்கே 41 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது.[1] இக்கோயில் இந்து மதக் கடவுளான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிற்பங்களின் அளவு மிதமானதாக இருந்தாலும், அதன் தரைத் திட்டத்தின் காரணமாக எஞ்சியிருக்கும் போசளர் கட்டிடக்கலை]]களுக்கு ஒரு சிறப்பான எடுத்துகாட்டாகும். ஒரு மேடை மீது அமைந்துள்ள மண்டபத்தை கொண்டுள்ளது. மேலும், 16 முனைகளைக் கொண்ட நட்சத்திர வடிவில் அமைந்துள்ளன. மேலுள்ள விமானமும் அதே வடிவத்தையே பின்பற்றுகின்றன. 16 முனைகளைக் கொண்டிருப்பதால் இது வட்டமான வடிவம் கொண்டதுபோல் தெரிகிறது.[2]
இந்த கோயில் அனைத்து போசள கட்டுமானங்களைப் போலவே கிழக்கு நோக்கியே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் செய்வதற்கு உகந்த சோப்புக்கல் எனப்படும் ஒருவகைக் கல்லாலேயே இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.[3] மேலும் இது இரண்டு மண்டபங்களால் இணைக்கப்பட்டுள்ளது.[4] இரண்டு அலகுகளும் ஒரு ஒற்றுமையை உருவாக்க இணைக்கப்பட்டுள்ளன.[5] கருவறைகளில், சிவனைக் குறிக்கும் எளிமையான இலிங்க வடிவங்கள் உள்ளன.[6][7] பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும் நுழைவாயில் இரண்டு மண்டபங்களுக்கு இடையில் ஒரு பாதையாக[8] உள்ளது.