உத்தரப் பிரதேசத்தின் வரலாறு என்பது வட இந்திய மாநிலமான இந்த மாநிலம் 1937 ஏப்ரல் 1 அன்று உருவாக்கப்பட்டது, ஆனால் இப்பகுதியானது 85,000 மற்றும் 73,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித இனம் வாழ்ந்ததுள்ளது.
தொல்லியல் கண்டுபிடிப்புகளானது உத்திரப்பிரதேசத்தில் கற்கால ஓமோ சப்பியன்சு வேட்டைக்காரர்கள் வாழ்ந்ததை காட்டுகின்றன.[1][2][3] இவர்கள் ஏறக்குறைய[4] 85 மற்றும் 73 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இவர்கள் வாழ்ந்துள்ளனர்.[5] மேலும் இடைக் கற்காலம்/குறுனிக்கல் கால வேட்டைக் காரர்களின் குடியேற்றமானது கி.மு. 10550-9550 காலகட்டத்தில் பிரதாப்கர் அருகே இருந்துள்ளது. செம்மறி, வெள்ளாடுகள் போன்ற கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்துடன் கூடிய கிராமங்கள் குறித்த ஆதாரங்கள் கி.மு. 6000 ஆம் ஆண்டளவில் இருந்து தொடங்கி, கி.மு 4000 மற்றும் 1500 இல் சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் சிந்துவெளி நாகரிகம் தொடங்கி வேதகாலம் வரை; இரும்புக் காலம் விரிவடைகிறது.[6][7][8]
மகாஜனபாத காலத்திய, கோசல நாடு தற்கால உத்தரப் பிரதேசத்தின் எல்லைகளுக்குள் அமைந்துள்ளது.[12] இந்து புராணத்தின் படி, இராமாயண இதிகாசத்தின் தெய்வீக அரசனான இராமன் கோசலையின் தலைநகரான அயோத்தியில் இருந்து ஆட்சி செய்தான்.[13] மற்றொரு இதிகாசமான மகாபாரதக் கதையின் ஒரு முக்கிய பாத்திரத்திரமும் இந்து புராணத்தின் மற்றொரு தெய்வீக மன்னும், இந்து கடவுளான விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் என மதிக்கப்படும் கிருஷ்ணன், உத்திரப்பிரதேசத்தில் மதுரா நகரில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. மகாபாரத இதிகாசக் கதையில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடந்த குருச்சேத்திரப் போரானது நட்த இடமானது மேல் தோவாப்புக்கும் தில்லிக்கும் இடையில் நடந்தது என்று நம்பப்படுகிறது.
பெரும்பாலான தென்னிந்திய படையெடுப்பாளர்கள் இன்றைய உத்தரப்பிரதேசத்தின் கங்கைச் சமவெளிகளை கடந்து சென்றுள்ளனர். இந்த பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை இந்தியாவின் பிரதான பேரரசுகளான மௌரியர் (கி.மு. 320-200), குசானர் (கி.பி. 100-250), குப்தர் (கி.பி.350-600) கூர்ஜரா-பிரதிகர்ர்கள் (கி.பி.650-1036) போன்ற பேரரசுகள் கொண்டிருந்தன.[14] ஹூணர்களின் படையெடுப்பையடுத்து குப்தப் பேரரசு வீழ்ச்சியுற்றது. கங்கை-யமுனை டோப் கன்னோசியின் எழுச்சியைக் கண்டது.[15] ஹர்ஷவர்த்தனரின் ஆட்சியின் போது (590-647), கன்னோசிப் பேரரசு அதன் உச்சநிலையை அடைந்தது. இது வடக்கில் பஞ்சாப் மேற்கில் குஜராத் கிழக்கில் வங்காளம் தெற்கில் ஒடிசாவரை பரவியிருந்தது. இது நர்மதை ஆற்றின் வடக்கே முழு சிந்து-கங்கை சமவெளியை உள்ளடக்கி முழுமையாக நடு இந்தியப் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல சமூகங்கள் கான்னோசியிலிருந்து குடியேறியவர்களிடமிருந்து வந்தவை. ஹர்ஷவர்தனின் மரணத்துக்குப்பிறகு விரைவிலேயே, அவருடைய பேரரசு பல பகுதிகளாக சிதைந்து போனது. அதன் பின்னர் இப்பகுதியானது கர்ஜார-பிரத்திகரா சாம்ராஜ்ஜியத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது என்றாலும் இப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு வங்காளத்தின் பாலப் பேரரசு பெரும் சவாலாக இருந்தது.[16] தென்னிந்தியாவின் இராஷ்டிரகூடப் பேரரசானது கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் கன்னோசிமீது பல முறை படையெடுத்தது.[17][18]
தைமூர் மற்றும் ஜென்னிஸ் கான் ஆகியோரின் வம்சத்தை சேர்ந்த பாபர் 16 ஆம் நூற்றாண்டில், பெர்கானாப் பள்ளத்தாக்கில் (நவீனகால உஸ்பெகிஸ்தான்) இருந்து கைபர் கணவாயைக் கடந்து வந்து முகலாய சாம்ராஜ்ஜியத்தை தோற்றுவித்தார், இவரின் மரபினர் தற்கால இந்தியா, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்டப் பகுதிகளை ஆண்டனர்.[19] இந்த மொகலாயர்கள் பாரசீகமயமான மத்திய ஆசிய துருக்கியர்களிடமிருந்து (குறிப்பிடத்தக்க மங்கோலிய குருதிக் கலப்போடு) வந்தனர். முகலாயர் காலத்தில், உத்தரப்பிரதேசம் பேரரசின் மையப்பகுதியாக மாறியது.[20] முகலாய பேரரசர்களான பாபர் மற்றும் ஹுமாயூன் ஆக்ராவில் இருந்து ஆட்சி செய்தனர்.[21][22] 1540-ல் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சேர் சா சூரி முகலாய அரசான உமான்யூனை தோற்கடித்தது உத்திரப்பிரதேசத்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.[23] சேர் சா சூரி மற்றும் அவரது மகன் இஸ்லாம் ஷா ஆகியோர் உத்திரப் பிரதேசத்தை குவாலியரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.[24] இஸ்லாம் ஷா சூரி இறந்த பிறகு, அவருடைய முதலமைச்சரான ஹெமு, உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், வங்காளத்தின் மேற்கு பகுதி ஆகியவற்றின் ஆட்சியாளராக ஆனார். தில்லியில் உள்ள புராணா கிலாவில் விக்ரமாதித்யன் என்ற பட்டத்துடன் முடிசூட்டிக் கொண்டார். ஹெமு இரண்டாம் பானிபட் போரில் இறந்த பின்னர், உத்தரப் பிரதேசம் அக்பர் ஆட்சியின் கீழ் வந்தது.[25] அக்பர் ஆக்ரா மற்றும் ஃபதேபூர் சிக்ரி ஆகியவற்றிலிருந்து ஆட்சி செய்தார்.[26] 18 ஆம் நூற்றாண்டில், முகலாயர்களின் வலிமை குன்றிய காலகட்டத்தில், அதிகார வெற்றிடத்தை மராத்தியப் பேரரசு நிரப்பப்பியது. 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில், மராத்தா படைகள் உத்தரப்பிரதேசத்தின் மீது படையெடுத்தன, இதன் விளைவாக ரோகில்கண்டின் கட்டுப்பாட்டை ரோஹிலாக்கள் மராத்திய ஆட்சியாளர்களான ரகுநாத் ராவ் மற்றும் மல்கர் ராவ் ஓல்கர் ஆகியோரிடம் இழந்தனர். மராட்டிய தளபதி மகாதாஜி சிந்தியாவால் நஜீப்-உத்-துளையின் பேரனான குலாம் காடிர் 1788 திசம்பர் 18 அன்று தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் ரோஹிலாஸுக்கும் மராட்டியர்களுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்தது. 1803 ஆம் ஆண்டு இரண்டாம் ஆங்கில மராத்தா போரைத் தொடர்ந்து, பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி மராட்டியப் பேரரசை தோற்கடித்தபின்னர் அப்பகுதியில் பெரும்பகுதி பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்தது.[27]
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காளத்திலிருந்து தொடங்கி, தொடர்ச்சியான போர்களின் வழியாக இறுதியில் வட இந்திய நிலப்பரப்புக்குள் வந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி மாநிலத்தின் எல்லைகளுக்குள் நுழைந்தது.[28] அஜ்மீர் மற்றும் ஜெய்ப்பூர் ராஜ்யங்களும் இந்த வடக்குப் பிராந்தியத்தில் சேர்க்கப்பட்டன, அவை "வட மேற்கு மாகாணங்கள்" (ஆக்ராவின்) என பெயரிடப்பட்டன. வட மேற்கு மாகாணங்கள் பகுதியானது பிரித்தானிய இந்தியப் பேரரசின் மிகச் சிறிய மாநிலங்களில் ஒன்றாக இருந்தது.[29] ஆனால் பிறகு உத்திரப் பிரதேசமானது இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமாக உருவெடுத்தது. அதன் தலைநகரம் ஆக்ரா மற்றும் அலாகாபாத் இடையே இரண்டு முறை மாறியது.[சான்று தேவை]
பிரித்தானிய ஆட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய கிளர்ச்சி வெடித்தது; வங்காள ரெஜிமென்டின் சிப்பாயான மங்கள் பாண்டே என்பவர்தான் அதன் ஆரம்ப புள்ளி என பரவலாக அறியப்படுகிறது. இது சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 என அறியப்படுகிறது.[30] கிளர்ச்சி தோல்வியடைந்த பிறகு, பிரித்தானிய பகுதியில் உள்ள நிர்வாக எல்லைகளை மறுசீரமைப்பதன் வழியாக, கிளர்ச்சிப் பகுதிகளை பிரிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டன. வட மேற்கு மாகாணங்கள் பகுதியில் இருந்து சில பகுதிகளை பிரித்து, பஞ்சாபுடன் இணைக்கப்பட்டன. அஜ்மீர்-மார்வர் பகுதி இராஜபுதனம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. ஔத் மாநிலமாக இணைக்கப்பட்டது. புதிய மாநிலமாக 'ஆக்ரா மற்றும் ஔத் என்ற வடமேற்கு மாகாணங்கள்' என்று அழைக்கப்பட்டது, இப்பெயர் 1902 ஆம் ஆண்டில் ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் என்று மாற்றப்பட்டது.[31] இது பொதுவாக ஐக்கிய மாகாணங்கள் அல்லது அதன் சுருக்கமான UP என குறிப்பிடப்பட்டது.[32][33]
1920 இல், மாகாணத்தின் தலைநகரானது அலகாபாத்திலிருந்து லக்னோவிற்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்றம் அலகாபாத்திலேயே தொடர்கிறது, ஆனால் லக்னோவில் ஒரு பெஞ்ச் நிறுவப்பட்டது. அலகாபாத் தற்போதும் உத்தரபிரதேசத்தின் முதன்மையான நிர்வாக மையமாக விளங்குகிறது. இங்கு பல நிர்வாக தலைமையகங்கள் உள்ளன.[34] இந்திய அரசியலில் உத்தரப்பிரதேசத்தின் முக்கியமான இடமானது தற்போதுவரை தொடர்கிறது. குறிப்பாக இந்திய சுதந்திர இயக்கத்தின் மையமாக நவீன இந்திய வரலாற்றில் முக்கியத்துவமாக இடத்தைக் கொண்டுள்ளது. இத்திரப் பிரதேசமானது பனாரசு இந்து பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் தாருல் உலூம் தேவ்பந்த் போன்ற நவீன கல்வி நிறுவனங்களை நடத்தியது. தேசிய அளவில் அறியப்பட்ட முக்கியப் புள்ளிகளான சந்திரசேகர ஆசாத்,. மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, மதன் மோகன் மாளவியா, கோவிந்த் வல்லப் பந்த் ஆகிய தலைவர்கள் உத்திரப் பிரதேசத்திலிருந்து வந்த இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தேசிய தலைவர்கள் ஆவர். 1936 ஏப்ரல் 11 இல் காங்கிரஸ் கட்சியின் லக்னோ கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஏ.ஐ.கே.எஸ்) அமைக்கப்பட்டது. தேசியவாத சுவாமி சஹஜானந்த் சரஸ்வதி இதன் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,[35] விவசாயிகளின் நீண்டகால வேதனைகளுக்கு காரணமான, ஜமீந்தார் நிலப்பிரபுக்களிடமிருந்து தங்கள் உரிமைகளை மீட்க இந்தியாவில் விவசாயிகளின் புகழ்மிக்க இயக்கம் உருவானது.[36] 1942 ஆம் ஆண்டின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது , பல்லியா மாவட்டமானது காலனிய அதிகாரத்திலிருந்து கைப்பற்றப்பட்டு சிட்டு பாண்டேயின் கீழ் ஒரு சுயாதீன நிர்வாகம் நிறுவப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு "பாஹி பல்லியா" ( பல்லியா கலகம்) என அறியப்பட்டது.[37]
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, ஐக்கிய மாகாணங்கள் 1957 இல் உத்தரப் பிரதேசமாக மறுசீரமைக்கப்பட்டது. உத்திரப் பிரதேசமானது இந்தியப் பிரதமர்களில் 7 பேரை வழங்கியுள்ளது. மக்களவையில் அதிக எண்ணிக்கையிலான இடங்களையும் மாநிலம் கொண்டுள்ளது. உத்திரப் பிரதேசமானது அரசியல் செல்வாக்கு கொண்ட மாநிலமாக இருந்தாலும், அதன் குறைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் மோசமான நிர்வாகம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஊழல்கள் போன்றவற்றால் இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. மாநிலமானது சாதி மற்றும் இனவாத வன்முறைகள் மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய பகுதியாக உள்ளது.[38] 1999 இல், மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களைக் கொண்டு உத்தரகண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டது.[39]