எஸ். மாருதி இராவ் | |
---|---|
பிறப்பு | தஞ்சாவூர், தமிழ்நாடு, பிரித்தானிய இந்தியா | 25 ஏப்ரல் 1921
இறப்பு | 2000 (அகவை 78–79) |
பணி | ஒளிப்பதிவாளர், புகைப்படக் கலைஞர் |
செல்கி மாருதி இராவ் (S. Maruti Rao, 25 ஏப்பிரல் 1921 – 2000 ) ஒரு இந்திய ஒளிப்பதிவாளராவார். இவர் முக்கியமாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றினார்.[1][2][3]
இராவ் 1921ஏப்பிரல் 25 அன்று தஞ்சாவூரில் பிறந்தார். மாணவராக இருந்தபோதே புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் தனது புகைப்படக் கருவியை தவறாமல் பள்ளிக்கு எடுத்துச் சென்றார். புகைப்படக் கலையில் இவருக்கு இருந்த ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட இவரது பக்கத்து வீட்டுக்காரர், பிஃளாசு பத்திரிகையின் அப்போதைய ஆசிரியரான என். சி. பிள்ளை, திரைப்படத்துறையில் சேர ஆர்வமாக உள்ளீர்களா என்று கேட்டார். தனது பெற்றோரின் அனுமதியுடன், இராவ் 1940 இல் பிராகஜோதி பிலிம்சில் சூடாமணி என்ற தெலுங்குப் படத்திற்காக பயிற்சியாளராகச் சேர்ந்தார். படத்தின் முக்கிய ஒளிப்பதிவாளர் மாமா சிண்டே ஆவார்.[2]
இராவின் அடுத்த படம் எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கிய காளமேகம் என்ற தமிழ்த் திரைப்படம். இவர் மார்கசு பர்ட்லியின் உதவியாளராகப் பணியாற்றினார். பின்னர் கிண்டியிலுள்ள வேல் பிக்சர்சுக்குச் சென்று பக்திமாலா படத்தில் பணியாற்றினார். ஒளிப்பதிவாளர் மார்கஸ், இவரின் பணியைக் கண்டு ஈர்க்கப்பட்டதால், இவரை முதல் உதவியாளராக ஏற்றுக்கொண்டு மிட்செல் புகைப்படக் கருவியைக் கையாளும் பொறுப்பை இவருக்கு வழங்கினார்.[2]
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இராவ் பிரகதி சுடுடியோவில் சேர்ந்தார். ஏ. வி. மெய்யப்பன் தயாரித்த ஸ்ரீ வள்ளி படத்திற்கு நிலையான புகைப்படக் கலைஞராக இருந்தார். மெய்யப்பன் காரைக்குடிக்கு குடிபெயர்ந்தபோது, ஆர். என். நாகேந்திர இராவின் மகாத்மா கபீர் படத்தில் நிலையான புகைப்படக் கலைஞராகவும் முதல் புகைப்படக் கலைஞராகவும் இராவ் பணியாற்றினார். படத்தின் ஜெர்மன் புகைப்படக்காரர் வெளியேறியபோது, இராவ் படத்தை முடித்தார்.[2]
காரைக்குடியிலிருந்து திரும்பி வந்தபோது, இராவ் இரண்டாவது புகைப்படக் கலைஞராகவும், நிலையான புகைப்படக் கலைத் துறையின் மேலாளராகவும் பணியாற்றினார். பி. நீலகண்டனின் ஓர் இரவு தயாரிப்பின் போது, இராவ் முதல் முறையாக முக்கிய ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இவரது ஒளிப்பதிவு பரவலான பாராட்டைப் பெற்றது. இவர் தமிழில் 34, இந்தியில் 13, கன்னடத்தில் எட்டு, தெலுங்கில் ஐந்து என 60 திரைப்படங்களில் பணியாற்றினார். சிவாஜி கணேசன், எஸ். வி. சுப்பையா, வைஜெயந்திமாலா, ஹேம மாலினி போன்ற கலைஞர்கள் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன்பு ஒப்பனை சோதனைப் புகைப்படக் கலைஞராக இருந்தார்.[2]
ஒளிப்பதிவைத் தவிர, இராவ் பல தொலைக்காட்சித் தொடர்கள், ஆவணப்படங்களைத் தயாரித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கௌரவ உறுப்பினராகவும், இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தேர்வுக் குழுத் தலைவராகவும் பணியாற்றினார்.[2]