ஐந்தாம் தப்புலன்

ஐந்தாம் தப்புலன், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களில் ஒருவன். நான்காம் தப்புலன் காலமான பின்னர் இவன் அரியணையில் அமர்ந்தான். கி.பி. 924 இல் அரசனான இவன் கி.பி. 935 வரை ஆட்சி நடத்தினான்.

இவன் காலத்தில் சோழர்களுக்குப் பயந்த பாண்டிய மன்னன் இலங்கைக்கு வந்தான். அவனை வரவேற்று நகருக்கு வெளியே அவன் தங்குவதற்கு இடமும், பிற வசதிகளையும் ஐந்தாம் திப்புலன் செய்து கொடுத்ததாகவும், பாண்டியன் தன்னுடைய நாட்டைத் திரும்பப் பெறுவதற்கு உதவ அவன் எண்ணியிருந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது. இந்த நேரத்தில், ஏதோ காரணத்தால் இலங்கையில் இளவரசர்களிடையே பெரும் சச்சரவுகள் உருவாகின. இலங்கையில் தங்கியிருப்பதில் பயன் எதுவும் இல்லை என்று கண்ட பாண்டியன், சேரநாட்டுக்குச் சென்றுவிட்டான்.[1]

சச்சரவுகள் ஓய்ந்த பின்னர், மன்னன் மகாமேகவண்ணவில் இருந்த போதியகத்தின் பேணலுக்காக ஒரு ஊரைக் கொடையாகக் கொடுத்தான். தனது முன்னோர்களைப் பின்பற்றி நாட்டை ஆண்டுவந்த ஐந்தாம் தப்புலன் தனது 12 ஆவது ஆட்சியாண்டில் காலமானான், அவனைத் தொடர்ந்து துணை அரசனாக இருந்த உதயன் அரசனானான்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Mahavansa, translated in to Eglish by L. G. Wijesinha, Part II, Asian Educational Services, New Delhi, 1996 (First Published 1889), p. 81, 82

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]