கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரம் (Cryogenic rocket engine) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.[1] அதிக எடையுடைய செயற்கைக் கோள்களையும், செலுத்து வாகனத்தையும் விண்வெளியில் அதிக உயரத்தில் செலுத்த இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.[2] இவ்வியந்திரத்தில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன. பல்வேறு வகையான வாயுக் கலவைகள் எரிபொருட்களாகப் பரிசோதிக்கப்பட்டபின் இந்த இரு வாயுக்கள் சிறந்தவை என முடிவெடுக்கப்பட்டது. சாடர்ன் V செலுத்து வாகனம் சந்திரனை அடைந்ததற்கு இந்த இயந்திரமே முக்கியக் காரணமாகும்.[1]
முதலில் இவ்வியந்திரத்தின் தொழில் நுட்ப உதவிகளை பெற ஐக்கிய அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அமெரிக்கா உதவிகளை வழங்கத் தயாராக இருந்தாலும், அதற்காக அதிக அளவு பணமும் கேட்டது.[2] 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தியதி இந்த இயந்திரத்தின் தொழில்நுட்ப உதவிகளைப் பெற உருசியாவுடன் உடன்படிக்கை செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யாவின் இச்செயலானது ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பின் (Missile Technology Control Regime) நெறிமுறைகளை மீறும் செயல் என எதிர்ப்புத் தெரிவித்ததால் அவ்வுதவிகளைப் பெற முடியவில்லை.[2][3] இது தொடர்பாக உருசியாவின் நிகோலாய் சிமியோனாவ் (Nikolai Semyonov) அமெரிக்காவானது ரஷ்யாவின் விண்வெளித் திட்டங்களைத் அழிக்க நினைக்கிறது எனக் குற்றம் சாட்டினார்.[2] மேலும் இந்தியாவானது, அமெரிக்கா இதே தொழில்நுட்பத்தை 1988-92 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவிற்குத் தர இருந்ததைச் சுட்டிக் காட்டியது.[2]
இவிவியந்திரத்தை வடிவமைப்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். ஆக்சிஜன் வாயுவை (LOX) மைனஸ் 183 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தாலும் மற்றும் ஹைட்ரஜன் வாயுவை (LH2) மைனஸ் 253 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தாலும் அவை திரவமாகிவிடும்.[4] அதன் பின் இவை எரிபொருளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இவ்விரு எரிபொருட்களும் எரியும் இயந்திரத்தின் உட்புறச் சுவரை வடிவமைப்பது மிகவும் சிக்கலானதாகும். இத்தகைய கடும் குளிரைத் தாங்கும் உலோகங்கள் உருவாக்குவதற்கு அதிக ஆராய்ச்சியும், பணமும் தேவையான ஒன்று. எனவே உலகில் மிகக் குறைந்த நாடுகளே இவ்வியந்திரத்தை வடிவமைத்துள்ளன.
ஜி. எஸ். எல். வி செலுத்து வாகனத்தில் கடுங்குளிர் இயந்திரம் பயன்படுத்தப்படடு 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி செலுத்தப்பட உள்ளது. மேலும் ஜி.எஸ்.எல்.வி - மார்க் 3 ராக்கெட் உருவாக்கப்பட்டுவருகிறது. இது இன்னும் சோதித்துப் பார்க்கும் கட்டத்தை எட்டவில்லை. இது நான்கு முதல் ஐந்து டன் எடைகொண்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்குச் செலுத்தும் திறன் கொண்டது. இந்த கடுங்குளிர் இயந்திரத்தைச் சோதித்துப் பார்க்க தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்ட எல்லையில் நாகர்கோவில் நகருக்கு அருகே மகேந்திரகிரியில் திரவ இயக்கத் திட்ட மையம் உள்ளது.
தற்போது கீழ்கண்ட ஆறு இடங்கள் மட்டுமே இந்த இயந்திரத்தைக் கொண்டுள்ளன.