கரீம் லாலா Karim Lala | |
---|---|
کریم لالا | |
தாய்மொழியில் பெயர் | کریم لالا |
பிறப்பு | அப்துல் கரீம் சேர்கான் 1911 குனர் மாகாணம், ஆப்கானித்தான் அமீரகம் (நவீன ஆப்கானித்தான்) |
இறப்பு | 19 பெப்ரவரி 2002 மும்பை, இந்தியா | (அகவை 90–91)
மற்ற பெயர்கள் | படே பாபா |
பணி | கடத்தல், போதை மருந்து வணிகம், மிரட்டி பணம் பறித்தல், ஒப்பந்த கொலை, சட்ட விரோத சூதாட்டம், கட்டாய சொத்து வெளியேற்றம் |
கரீம் லாலா (Karim Lala) (1911 – 19 பிப்ரவரி 2002), ஆப்கானித்தானின் குனர் மாகாணத்தின் செகல் மாவட்டத்தின் சமலம் கிராமத்தில் அப்துல் கரீம் சேர்கான் என்ற பெயரில் பிறந்த இவர், அறுபதுகளிலிருந்து எண்பதுகளின் ஆரம்பம் வரையிலான காலகட்டங்களில் மும்பையின் மிகப்பிரபலமான மூன்று “நிழல் உலக மாஃபியா கும்பல்களில்” ஒருவராக பிரபலமடைந்தார்.[1] ஹாஜி மசுதான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோர் மற்ற இருவர்.[2] [3]
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, தெற்கு மும்பையின் டோங்க்ரி, நாக்பாடா, பேண்டி பஜார் மற்றும் முகமது அலி சாலை போன்ற பகுதிகளில் முஸ்லிம் பகுதிகளில் செய்ல்பட்ட "பதான் கும்பலில்" சேர்ந்த கரீம் லாலா விரைவில் கும்பலின் தலைவராக உயர்ந்தார். சட்டவிரோத சூதாட்டம் (சட்டவிரோத பணம் மீட்பு, சட்டவிரோத நில வெளியேற்றங்கள், கடத்தல், பாதுகாப்பு மோசடி (ஒப்பந்தக் கொலை) (போதைப்பொருள் மற்றும் கள்ள நாணய விநியோகம்) ஆகிய குற்றச் செயல்களில் பதான் கும்பல் ஈடுபட்டு வந்தது.
மும்பையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவந்த மற்ற இரண்டு மாஃபியாக்களான ஹாஜி மசுதான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோருடன் சேர்ந்து ஒருவருக்கொருவர் எந்த மோதலும் இல்லாமல் தங்கள் குற்றச் செயல்களை சுதந்திரமாக நடத்த முடிவு செய்து 1970களில், மும்பையை மூன்று பகுதிகளாக பிரிக்க ஒரு ஒப்பந்தத்திற்கு லாலா ஒப்புக்கொண்டார்.
எழுபதுகளின் பிற்பகுதியில் உடல்நலக்குறைவு காரணமாக, லாலா படிப்படியாக பதான் கும்பலின் தலைமைப் பொறுப்பை தனது மருமகன் சமத் கானுக்கு மாற்றினார். பின்னர் தனது விடுதி மற்றும் போக்குவரத்து வணிகத்தை நிர்வகித்தார். லாலா பல முறைகேடான வணிகங்களைக் கொண்டிருந்தாலும், இவரது சட்டப்பூர்வ வணிகத்தில் இரண்டு விடுதிகள் (அல் கரீம் விடுதி மற்றும் நியூ இந்தியா விடுதி) மற்றும் நியூ இந்தியா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற பயண ஏற்பாடு நிறுவனம் ஆகியவை அடங்கும்.
லாலா தனது மற்ற சகாக்களாகிய ஹாஜி மசுதான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோருடன் எப்போதும் நட்பாக இருந்தார். சிவ சேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேவுடனும் நெருக்கமாக இருந்த லாலா, 1980 ஆம் ஆண்டில் தனது மருமகன் சமத் கான் மற்றும் அவருக்கு போட்டியாக செயல்பட்டு வந்த சபீர் இப்ராகிம் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோருக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்தார்.[4]
கரீம் லாலா வாராந்திர தர்பார் ஒன்றையும் நடத்தினார். அங்கு பல்வேறு தரப்பு மக்கள் தங்கள் குறைகளை லாலாவிடம் முறையிட்டனர். மேலும் இவர் அவர்களுக்கு நிதி ரீதியாகவோ அல்லது தனது சக்தியைப் பயன்படுத்தி நீதியைப் பெறவோ உதவினார்.
இவர் தனது 90வது வயதில் பிப்ரவரி 19,2002 அன்று இறந்தார்.