கினபாத்தாங்கான் மாவட்டம் Kinabatangan District Daerah Kinabatangan | |
---|---|
ஆள்கூறுகள்: 5°25′0″N 117°35′0″E / 5.41667°N 117.58333°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | சண்டக்கான் |
தலைநகரம் | கினபாத்தாங்கான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,605 km2 (2,550 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,43,112 |
• அடர்த்தி | 22/km2 (56/sq mi) |
அஞ்சல் குறியீடு | 91XXX |
வாகனப் பதிவெண்கள் | SS (1980-2018) SM (2018-) |
கினபாத்தாங்கான் மாவட்டம்; (மலாய்: Daerah Kinabatangan; ஆங்கிலம்: Kinabatangan District) என்பது மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் (Sandakan Division) உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கினபாத்தாங்கான் (Kinabatangan Town) நகரம்.
இந்த நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து வட கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும்; வடமேற்கே சண்டக்கான் நகரத்தில் இருந்து 77 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1]
சபா மாநிலத்தின் சண்டக்கான் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
கினபாத்தாங்கான் (Kinabatangan) எனும் பெயர் முதலில் சினபாத்தாங்கான் (Cinabatangan) என்று அழைக்கப்பட்டது. நீண்ட ஆறு என்று பொருள். இதற்கு ஓங் சம் பிங் (Ong Sum Ping) எனும் சீனக் குடியேற்ற ஆளுநர் பெயரிட்டதாகவும் அறியப் படுகிறது.
அந்தச் சீனக் குடியேற்ற ஆளுநர் 16-ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்கு வருகை தந்தார். கினபாத்தாங்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள கம்போங் முமியாங் (Kampung Mumiang), சுகாவ் (Sukau) மற்றும் பிலிட் (Bilit) ஆகியவற்றின் பெயர்களும் சீன மொழியில் இருந்து வந்ததாக நம்பப் படுகிறது.
கினபாத்தாங்கான் என்ற சொல் ஏற்கனவே உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் தகவல் 1782 மற்றும் 1837-இல் பிரெஞ்சு எழுத்தாளர்களின் புத்தகங்களில் பதிவு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சீன குடியேற்றவாசிகள் இப்பகுதிக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கினபாத்தாங்கான் எனும் சொல் உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், 1408 -1426ஆம் ஆண்டுகளில் கினபாத்தாங்கான் நிலப்பகுதியை ஆட்சி செய்த கினபாத்தாங்கான் இளவரசியை (Princess Kinabatangan) புரூணை சுல்தான் அகமான் (Sultan Ahman) திருமணம் செய்து கொண்டதை, புரூணை பதிவுகள் (Bruneian Records) உறுதி செய்கின்றன. சீன குடியேற்றவாசிகள் அங்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இது நடந்துள்ளது.
நிலை | இனம் | மொத்தம் |
---|---|---|
மலேசியர் | மலாயர் | 3,376 |
சபா பூமிபுத்ரா | 35,880 | |
சீனர் | 316 | |
இந்தியர் | 91 | |
இதர இனத்தவர் | 3,095 | |
மலேசியர் அல்லாதவர் | - | 100,354 |
மொத்தம் | 143,112 |
இப்போதைய கினபாத்தாங்கான் மாவட்டம் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் (North Borneo Chartered Company) நிர்வாகத்தின் போது நிறுவப்பட்டது. ஆரம்பத்தில், கினபாத்தாங்கான் மாவட்ட அலுவலகம் பிரித்தானிய காலனி அதிகாரிகளால் 1905-இல் நிறுவப்பட்டது.
அந்த மாவட்டம் லமாக் மாவட்ட அலுவலகம் (Lamag District Office) என்று அறியப்பட்டது. அப்போது நிர்வாக மையம் லமாக்கில் அமைந்திருந்தது. இருப்பினும், அப்போதைய மாவட்ட அலுவலகம் நிர்வாகம் மற்றும் நீதிமன்ற விவகாரங்களில் மட்டுமே சேவைகளை வழங்குகியது.
பின்னர் இந்த அலுவலகம் கினபாத்தாங்கான் மாவட்ட அலுவலகம் (Kinabatangan District Office) என்று அழைக்கப்பட்டது. இப்போது அது பரந்த அளவிலான சேவைகளை வழங்கி வருகிறது; மாவட்ட வளர்ச்சி திட்டமிடல், சமூக-பொருளாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனித மூலதனம் போன்ற சேவைகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
கினபாத்தாங்கான் ஆற்று படுகையில் 270 ச.கி.மீ. (104 சதுர மைல்) பரப்பளவு மழைக்காடுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. இங்குதான் கினபாத்தாங்கான் வனவிலங்கு சரணாலயம் (Kinabatangan Wildlife Sanctuary) உள்ளது.[3]
இந்தச் சரணாலயத்தில், பத்து வகையான ஓராங் ஊத்தான் (Orangutan) மனித குரங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் 50 வகையான பாலூட்டிகள் (Mammals); 200 வகையான போர்னியோ பறவைகள் (Borneo Birds); தும்பிக்கை குரங்குகள் (Proboscis Monkeys); சபா குள்ள யானைகள் (Sabah Pygmy Elephants); சுமத்திரா காண்டாமிருகங்கள் (Sumatran Rhinoceros); நீள்மூக்கு கொக்குகள் (Storm’s Stork); பாம்புத் தாராக்கள்; இருவாய்ச்சி பறவைகள்; இந்தச் சரணாலயத்தில் பாதுகாக்கப்படுகின்றன.[4]
கினபாத்தாங்கான் மாவட்டத்தில் கோமந்தோங் (Gomantong Forest Reserve) எனும் பெயரில் ஒரு வனக் காப்பகம் உள்ளது. அந்த மலையில் மிகப்பெரிய சுண்ணங்கல் குகைகள் உள்ளன. அவற்றின் பெயர் கோமந்தோங் குகைகள் (Gomantong Caves). கோமந்தோங் குகைகளைச் சுற்றியுள்ள பகுதிகள், ஒராங் ஊத்தான் மனிதக் குரங்குகளின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல நூற்றாண்டுகளாக, கோமந்தோங் குகைகள் அவற்றின் கூட்டு உழவாரன் பறவைகளின் (Swiftlets) கூடுகளுக்கு புகழ்பெற்றவை. இந்தக் கூடுகளைக் கொண்டு, பறவை கூடு ரசம் தயாரிப்பிற்காக, கூட்டு உழவாரன் பறவை கூடுகள் அறுவடை செய்யப் படுகின்றன.[5]