இலங்கைத் தமிழர் வரலாற்றுப் பகுதி |
இலங்கைத் தமிழர் வரலாறு |
---|
கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு தமிழீழ வலைவாசல் தமிழர் வலைவாசல் இலங்கை வலைவாசல் |
கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு உள்ளூர்க் கதைகளாலும், உள்ளூர் இலக்கியங்களினாலும், குடியேற்றக் கால ஆவணங்கள் மூலமாகவும் அறியப்படுகிறது[1]. கிழக்கிலங்கைத் தமிழர்கள் எனப்படுவோர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பிரதேசங்களில் வாழும் இலங்கைத் தமிழர்களைக் குறிக்கின்றது[2]. இவர்களின் கலாசாரம், பேச்சுத் தமிழ் மற்றும் ஏனைய பிரதேச பழக்கவழக்கங்கள் மூலமாக தனித்துவமாக நோக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டிலும் வட இந்தியாவிலும் காணப்படும் பிரேத அடக்க முறைக்கு ஒப்பான செயற்பாடுகள் கிழக்கிலங்கைக் கரையோரத்திலுள்ள கதிரவெளி பிரதேச அகழ்வாராட்சியின்போது கண்டுபிடிக்கப்பட்டன[3]. அவை கி.மு. 2 தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு காலப்பகுதிக்கு உரியதாகும். இது தமிழர்கள் எப்போது இலங்கையில் குடியேறினார்கள் என்பதை குறிப்பிடாத போதும் தொடர்ச்சியான தென்னிந்தியப் படையெடுப்பின் பின் கி.பி. 1 தொடக்கம் 13ம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் குடியேற்றம் நடந்தது[4]. இக்காலப்பகுதியில், தமிழ் அரச ஆட்சியில் தமிழ் சைவக் கலாசாரம் கிழக்கில் பேணப்பட்டு சமூக வளர்ச்சியோடு ஒன்றாக வளர்ந்தது. 6ம் நூற்றாண்டு காலப்பகுதியில் திருகோணமலை கோணேசுவரர் கோயிலுக்கும் மட்டக்களப்பு (தற்போதைய அம்பாறை மாவட்டத்திலுள்ள) திருக்கோவிலுக்கும் படகு மூலம் சிறப்பான கடல்வழி காணப்பட்டது. யாழ்ப்பாண இராசதானி 13ம் நூற்றாண்டில் உருவாகி தமிழ் இந்து சமூக அமைப்பு உருவாகு முன்னமே, கி.பி. 11ம் 12ம் நூற்றாண்டுகளில் கிழக்கு மாகாணத்தில் பெரும் தமிழ் சமூகம் காணப்பட்டது.
கிழக்குத் தமிழர்களிடையே கிராம மட்டத்தில் 'ஊர் போடியார்' வழக்கமும்[5] 'குடி' முறையானது சமூக இடையூடாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நிறுவனப்படுத்தப்பட்டுக் காணப்பட்டது. அத்தோடு, கண்டி இராச்சியம் மூலம் அறிமுகமான வன்னிமை அதிகார முறையும் அரசியலை வரையறுத்துக் காணப்பட்டது[6]. முக்கிய சமூக குழுவாக முக்குவர் காணப்பட்டனர். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து தொடர்ச்சியாக இலங்கை மீது படையெடுத்தனர். உள்ளூர் பாரம்பரிய ஆவனமான மட்டக்களப்பு மான்மியம் கிழக்கிலங்கை குடியேற்றம் பற்றி குறிப்பிடுகிறது[7].
மட்டக்களப்பு மான்மியமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்குவர் குடியேற்றம் பற்றி அவர்களுடைய பார்வையில் குறிப்பிடுகிறது. இருப்பினும் கிழக்குத் தமிழர்கள் எல்லோரும் முக்குவர் அல்ல.
இது வரலாற்று ரீதியான கதைகளை உள்வாங்கி முக்குவ பார்வையில் இடங்களுக்குரிய பெயர்களை விளக்குகிறது. முக்குவர் குடியிருப்பை அமைத்ததும் மற்றொரு மீன்பிடியுடன் தொடர்புபட்ட சாதியான திமிலருடன் முரண்பட்டனர். திமிலர் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் காணப்பட்டனர். அவர்களின் ஆரம்ப குடியேற்ற இடம் திமிலைதீவு ஆகும். மட்டக்களப்பு மான்மியம் இங்கு துறைமுகம் காணப்பட்டதாக குறிக்கிறது. திமிலரால் அதிகம் மீன்கள் பிடிப்பப்பட்ட இடமாகிய வலையிறவிலும் அவர்கள் குடியேற்றம் அமைந்தது. மீன்பிடி மூலமான முரண்பாடு எவ்வாறு சிறிய படுகொலையாக திமிலருக்கு மாறியது என்பதை மான்மியம் விபரிக்கின்றது.[8]
இந்தியாவிலிருந்து மட்டக்களப்பிற்கு வியாபார நோக்கோடு வந்த முஸ்லிம்கள் என நம்பப்படும் இன்னுமொரு குழுவாகிய பட்டாணியர் உதவியுடன் திமிலர் தோற்கடிக்கப்பட்டு, மட்டக்களப்பு - திருகோணமலை எல்லையாகிய வெருகல் வரை துரத்தப்பட்டனர்.[8]
சில கிராமங்களின் பெயர்கள் போரின் நினைவுச் சின்னங்கள் போன்று காணப்படுகிறது. மட்டக்களப்பு நகரை அண்மித்துக் காணப்படும் சத்துருக்கொண்டான் என்னும் கிராமமானது 'சத்துரு கொல்லப்பட்டான்' என்ற அர்த்தத்தில் அமைந்துள்ளது. திமிலரை விரட்டிவிட்டு வெற்றியுடன் திரும்பிய வீரர்கள் சந்தித்த இடம் சந்திவெளி எனப்படுகிறது. இன்று கிழக்குப் பல்கலைக்கழகம் காணப்படும் இடமாகிய வந்தாறுமூலை (வந்து ஆறிய மூலை), வெற்றி வீரர்கள் இளைப்பாறிய இடமாக அர்த்தப்படுகிறது.[9]
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் காணப்படும் இடமாகிய ஏறாவூர், திமிலரைத் தோற்கடிக்க உதவிய முஸ்லிம்களுக்கு முக்குவர் குடியேற அளித்த இடமாகும்.[9]
இன்னுமொரு சமூகக் குழுவாகிய வெள்ளாளர் தங்கள் சாதி அமைப்புடன் கிழக்கில் குடியேறினார்கள். இந்தியாவின் இன்றைய ஒரிசாவிலிருந்து, கலிங்க மாகன் தென்னிந்திய வீரர்களைக் கொண்டு படையெடுத்திருந்தான். இவனுடைய படையெடுப்பு இலங்கை இலக்கியங்களில், சிங்கள உலர்நில நாகரீகம் வீழ்ச்சியடைய முக்கிய காரணங்களில் ஒன்று எனக் குறிப்பிடப்படுகிறது.
பாரம்பரிய மற்றும் புகழ்பெற்ற ஆதாரங்களின்படி, இலங்கை மற்றும் கிழக்கில் முதல் தமிழ் குடியேற்றங்களை உருவாக்கியவர்கள் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல, கேரளா கடற்கரையோரங்களிலிருந்தும் வந்தனர் என்பதை திட்டவட்டமாகக் கூற முடியும்.[10][11]