கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021),[3][4]கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், மாயமான், நாட்டுப்புற கதை களஞ்சியம் ஆகியவை இவரது பிரபலமான படைப்புகளில் சில. இவர் 1991 இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். டைம்ஸ் ஆஃப் இந்தியா இவரை "தமிழ் வாய்மொழி பாரம்பரியத்தின் காவலர்" என்று அழைத்தது.[5]
ராஜநாராயணன் அவர்கள் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் சிற்றூரில் பிறந்தார்.[6] இவர் ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளையாவார்[7] உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், சிறுவயதிலேயே காசநோயால் பாதிக்கப்பட்டார். ஏழாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திக்கொண்டார்.[6][8]இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (சிபிஐ) உறுப்பினரானார். 1947 மற்றும் 1951 க்கு இடையில் சிபிஐ-யால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் கிளர்ச்சிகளில் கலந்து கொண்டு, ஆதரவளித்த காரணங்களுக்காக இரண்டு முறை சிறைக்குச் சென்றார்.[9] 1952 ஆம் ஆண்டு நெல்லை சதி வழக்கிலும் இவர் பெயர் சேக்க்கப்பட்டது இருப்பினும் குற்றச்சாட்டுகள் பின்னர் கைவிடப்பட்டன.[8]
ராஜநாராயணன் 30 வயதில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதையான "மாயமான்"
1959 இல் சரஸ்வதி இதழில் வெளியானது.[8] அது வரவேற்பைப் பெற்றது.[10][11] அதைத் தொடர்ந்து இன்னும் பல சிறுகதைகள் வெளிவந்தன. கி. ரா.வின் கதைகள் வழக்கமாக அவரது சொந்தப் பகுதியான கோவில்பட்டியைச் சுற்றியுள்ள கரிசல் காட்டைச் சர்ந்தவை. கதைகள் பொதுவாக கரிசல் நாட்டு மக்கள், அவர்களின் வாழ்க்கை, நம்பிக்கைகள், போராட்டங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை, ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளை மையமாக கொண்டவை.[12][13]கோபல்ல கிராமம் மற்றும் அதன் தொடர்ச்சியான கோபல்லபுரத்து மக்கள் ஆகியவை இவரது மிகவும் பாராட்டப்பட்ட புதினங்களில் ஒன்றாகும், பிந்தைய புதினம் இவருக்கு 1991 இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது.[14] ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு தென்னிந்தியாவில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த பலரின் கதைகளை இந்த புதினம் கையாள்கிறது. தமிழ்நாட்டின் வடக்கே இருந்த கொடூரமான இராச்யங்களிலிருந்து தப்பித்து தெலுங்கு மக்கள் தெற்கே தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து குடியேறுவதை விவரிக்கிறது.[14][15] இந்த புத்தகங்களுக்கு அடுத்த பகுதியாக அந்தமான் நாயக்கர் புதினம் வந்தது.[8]
ஒரு நாட்டுப்புறவியலாளராக, கி. ரா. பல தசாப்தங்கள் கரிசல் வட்டாரத்தில் இருந்து நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து பிரபல பத்திரிகைகளில் வெளியிட்டார். 2007 ஆம் ஆண்டில், தஞ்சாவூரைச் சேர்ந்த அன்னம் என்ற பதிப்பகம் இந்த நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து நாட்டுப்புற கதைக் களஞ்சியம் என்ற பெயரில் 944 பக்க புத்தகமாக வெளியிட்டது. 2009 வரை, இவர் சுமார் 30 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகங்களில் சிலவற்றை ஆங்கிலத்தில் பிரித்தம் கே. சக்ரவர்த்தி மொழிபெயர்த்து 2009 இல் Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu என்ற பெயரில் வெளியிட்டார். கி. ரா. நாட்டுப்புறங்களில் நிலவும் பாலியல் கதைகளை நேர்மையாக சேகரித்து எழுதுவதற்கும்,[15][16] அவரது கதைகளில் இலக்கிய மொழிவழக்கைக் காட்டிலும் தமிழ் வட்டார வழக்கைப் பயன்படுத்துவதற்கும் நன்கு அறியப்பட்டவர்.[17] அவர் பேச்சுவழக்கை மொழியின் 'சரியான' வடிவமாகக் கருதினார்.[8] வட்டார வழக்குகளில் கதைகளை எழுதுவதோடு மட்டுமல்லாமல், கரிசல் வட்டார அகராதி என்று அழைக்கப்படும் என்று மக்கள் தமிழுக்கு அகராதியின் ஆசிரியராகவும் இருந்தார். இந்தப் பணி தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வட்டாரவழக்குகளுக்கும் இதே போன்ற அகராதிகள் உருவாக முன்னோடியாக இருந்தது.[18]
கி. ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., நல்ல இசை ஞானம் கொண்டவர் ,கவியரசு நா.காமராசன் அவர்கள் நடத்திய இலக்கிய பத்திரிகையான" சோதனை"யின் ஆலோசகர் ஆக இருந்துள்ளார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் பல்கலைக்கழகத்தின் ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு மையத்தில் நாட்டுப்புறக் கதைகளின் இயக்குநர் பதவியை வகித்தார்.[17][19][20] 1998 மற்றும் 2002 க்கு இடையில் இவர் சாகித்திய அகாதமியின் பொதுக்குழுவிலும் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றினார்.[21]
16, செப்டம்பர், 1954 இல், ராஜநாராயணன் கணவதி அம்மாளை (கி.ரா தங்கை எத்திராஜத்தின் வகுப்புத் தோழி; முறைப் பெண்ணும் கூட) மணந்தார். இணையருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.[5] கணவதி 25 செப்டம்பர் 2019 அன்று 87 வயதில் இறந்தார். 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 98ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். இவரது உடல் இவரது சொந்த ஊரான இடைசெவலில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[22]
↑Rajanarayanan, Ki.; Chakravarthy, Pritham K (2009). Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu. Chennai, India: Blaft Publications. p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-81-906056-4-9.