சத்ய நாராயண் கௌரிசாரியா (Satya Narayan Gourisaria) இந்தியாவில் பிறந்த பிரித்தானிய நிறுவனச் செயலர் ஆவார். காந்தியவாதியாகவும் [1] வே.கி. கிருட்டிண மேனனால் நிறுவப்பட்ட இந்திய சுதந்திர இயக்க அமைப்பான இந்தியக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளருமாக [2][3] சத்ய நாராயண் இருந்தார்.[4] பீகார் மாநிலத்தின் தன்பாத் நகரத்தில் 1929 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஆனால் கிழக்கு வங்காளத்திற்கு இடம் பெயர்ந்தார். பின்னர் கிழக்கு பாக்கித்தானிலிருந்து 1948 ஆம் ஆண்டில் சுதந்திரத்திற்கு ஓராண்டு கழித்து இந்தியா திரும்பினார்.[5] கொல்கத்தாவில் உள்ள இசுகாட்டிசு பேராலயக் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். 1950 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு 61 ஆண்டுகள் தங்கினார்.[5] டக்ளசு பிரேசர் அண்ட் சன்சு (லண்டன்) லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் நிறுவன செயலாளரான கௌரிசாரியா தற்போது செயல்படாத அசோகா பிரசுரத்தின் இயக்குனராகவும் இருந்துள்ளார்.[1] இலண்டனில் தங்கியிருந்த காலத்தில், இந்தியத் திரைப்படங்களைக் காண்பிக்க திரையரங்குகளை வாடகைக்கு அமர்த்தியதன் மூலமும், இந்தியத் திரைப்படப் பிரமுகர்களை நிகழ்ச்சிகளுக்காக இலண்டனுக்கு வரவழைப்பதன் மூலமும் கலாச்சாரப் பரிமாற்றங்களுக்கு உதவியுள்ளார். 1974 ஆம் ஆண்டில் இராயல் ஆல்பர்ட் அரங்கில் லதா மங்கேசுகர் நடத்திய ஒரு நிகழ்ச்சி இவ்வகையில் குறிப்பிடத்தக்கது ஆகும்.[5] 2013 ஆம் ஆண்டு சத்ய நாராயண் இந்தியா திரும்பினார். இந்திய அரசு நான்காவது உயர் விருதான பத்மசிறீ விருதை 2000 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.[6]