சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா

சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா

சாலிக்ஸ் டெட்ராஸ்பெர்மா (Salix tetrasperma), பொதுவாக Indian willow) என்று அழைக்கப்படுவது ஒரு மரமாகும். இது சங்க காலத்தில் வஞ்சி என அழைக்கப்பட்ட மரமாக கருதப்படுகிறது. இதை மலையாள மொழியில் தற்போதும் வஞ்சி (വഞ്ചി) என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது ஈரமான மற்றும் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய நடுத்தர அளவிலான மரமாகும், இது பொதுவாக பருவ மழைக்காலத்தின் முடிவில் அதன் இலைகளை உதிர்க்கும். இதன் இலைகள் துளிர்த்தப் பிறகு பூக்கள் தோன்றும்.

இது இந்தியா, பாகித்தான், நேபாளம்,[1] லாவோஸ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் வளர்கிறது.[2]

இந்தியாவின், மணிப்பூரில், இத்தாவரத்தின் புதிய பூக்களானது, உள்ளூரில் ঊযুম ( ooyum ) என அழைக்கப்படுகின்றன, இவை சுவையானதாக கருதப்படுகின்றன.

மகாராட்டிராவில், இந்த மரம் வாலுஞ்ச் என்று அழைக்கப்படுகிறது. இதை புனே, சதாரா, சாங்லி மற்றும் கோலாப்பூர் ஆகிய பகுதிகளில் காணலாம்.

விளக்கம்

[தொகு]

இந்த மரமானது பூக்கும் இரு வித்திலைத் தாவரமாகும். இது பெரும்புதர் அல்லது சிறுமரமாக கருதப்படுகிறது. இது 8000 அடி உயரம் வரையில் ஆற்றோரத்தில் வளரும. பட்டைகள் கரடுமுரடானவையாக, நீண்ட பிளவுகளுடன் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். மரம் செந்நிறமானது; மிருதுவானது; இதனைச் சுட்டுக் கரியாக்கி, துப்பாக்கி மருந்துக்குப் பெரிதும் பயன்படுத்துகின்றனர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=38 என சோப்தி, சிங் (1961) என்போர் கணித்துள்ளனர். மேலும் இதன் இளம் தளிர்கள் இலைகள் மென்மையாக இருக்கும். இதன் இலைகள் நீளமானதாக நுனி குத்துவாள் போன்று கூரியதாக இருக்கும். இலையடி அகன்று உருண்டிருக்கும்; 2-6 அங்குல நீளமும், 4-2.25 அங்குல அகலமும் உடையது. இலை வரம்பு வாள் போன்ற பற்களை உடையது. இலைக் காம்பு, ஒரு அங்குல நீளமானது.

மலர்கள்

[தொகு]

இதன் மலர்கள் காம்பற்ற மலர்களாக கொத்தாக தோன்றும். இந்த மலர்கள் பால் வேறுபட்டது: பளபளப்பானது: மெல்லியது: இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்திருக்கும். ஆண்மலரில் இரண்டு தாதிழைகளே உள்ளன. பெண்மலரில் ஒரு செல் உள்ள சூலகம். பல 4-8 சூல்கள் உள்ளன.

இலக்கியங்களில்

[தொகு]

பகைவரிடம் போருக்குச் செல்வோர் வஞ்சிப்பூவைச் சூடுவர். இது ஒரு போர் மலர் ஆகும். 'வஞ்சி' என்பது ஒரு கொடி என்போருளர். அவர்கள் பிரம்பின் கொடியை வஞ்சி என குறிப்பிடுகின்றர். 'வஞ்சி' என்பது பற்றிப் புலவர்கள் கூறுவன:

மென்பாலான் உடன் அணைஇ
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை -புறநா. 384: 1-2

வஞ்சி ஓங்கிய யாணர் ஊர -ஐங். 5 O : 3

இவற்றைக் கொண்டு பார்க்குமிடத்து வஞ்சி என்பது ஒரு மரமென்றும், இதன் கிளையில் நாரை தன் பெடையோடு துயில் கொள்ளும் என்றும் அறியலாம்.

பகைவர் மேல் படையெடுத்துப் போருக்குப் போம்போது சூடுவதும், 'புதலும், மங்கையும், ஒர்பதியும், மாற்றார் குடையும் வஞ்சி ஆகும்' என்று பிங்கல நிகண்டு[3] கூறுகின்றது. இவற்றுள் வஞ்சி என்பது ஒரு புதர் என்று கொள்ளக் கிடக்கின்றது.

'வஞ்சியில் மரமும் உண்டு, வஞ்சிக் கொடியும் உண்டு. எதன் பூவைப் புறப்பூவாகக் கொண்டனர்? இலக்கண இலக்கியங்களில் எது என்று குறிக்கப்படாததால் இது வினாவில் இடம் பெறுகின்றது'. என்கிறார் கோவை இளஞ்சேரனார்.[4] தவிர, மரஞ்செடி கொடிகளின் தமிழ்ப் பெயர்களையும், தாவரப் பெயர்களையும் தொகுத்துப் பட்டியலிட்ட லவிங்டன் (1915) என்பார் (பக்.140) வஞ்சி என்பது சாலிக்ஸ் டெட்ராஸ் பர்மா என்ற சிறு மரம் எனக்குறிப்பிட்டுள்ளார். இங்ஙனமே சென்னை மாநிலத் தாவரங்களைப் பற்றிப் பெருநூல் எழுதிய காம்பிள் (1928) என்பாரும் வஞ்சி என்பது இதே தாவரம் என்று குறிப்பிடுவதுடன், இதன் மலையாளப் பெயரும் வஞ்சி என்று கூறுவா ராயினர்.

ஆதலின் வஞ்சி என்பது ஒரு சிறுமரமெனவும், சங்கப் புலவர்கள் கூறுவதும் இம்மரத்தையே எனவும், பிங்கலம் கூறும் 'புதல்' என்பதும் ஒருசிறு மரமாகலாம் எனவும் கொண்டு இதன் தாவரப் பெயர் சாலிக்ஸ் டெட்ராஸ்பர்மா எனக் கோடலே அமையும்.

இனி, போர்த் தொடர்பான அறிவிப்புகளின் போதும், விழாக் காலங்களிலும் 'கிணை' எனப்படும் பறை ஒன்று முழங்கப்படும். இப்பறையை அடித்துப் பாடலும் பாடப்படும். இப்பாடல் இசை வஞ்சிப்பெயர் பெற்றது.

பனிக்கயத்து அன்ன நீள் நகர் கின்று என்
அரிக்கூடு மாக் கினை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட -புறநா. 37 8 7-9

இவ்விசையை மருத பாழ்த்திறத்து ஓர் ஓசையாக வகுத்தனர் இசைநூலார். மேலும் வஞ்சிப்பா என்ற பாடல் வகையினை யாப்பிலக்கணத்தில் காணலாம்.[5]

குறிப்புகள்

[தொகு]
  1. Jackson, J.K. Manual of afforestation in Nepal. Kathmandu: Forest Research and Survey Center, 1994
  2. Gardner, Simon, Pindar Sidisunthorn, and Vilaiwan Anusarnsunthorn. A Field Guide to Forest Trees of Northern Thailand. Bangkok: Kobfai Publishing Project, 2000.
  3. பிங். நி. 4015
  4. இலக்கியம் ஒரு பூக்காடு. பக். 277
  5. சங்க இலக்கியத் தாவரங்கள், டாக்டர் கு. சீநிவாசன், பக்கம், 652-655