சிகுவனாபா ( Siguanaba ) என்பது நடு அமெரிக்க நாட்டுப்புறக் கதைகளில் தோன்றும் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட பாத்திரமாகும். இருப்பினும் இது மெக்சிகோவிலும் கதை வடிவில் கூறப்படுகிறது. தனது வடிவத்தை மாற்றிக்கொள்ளும் ஆவியான இது பொதுவாக பின்னால் இருந்து பார்க்கும்போது ஒரு கவர்ச்சியான, நீண்ட முடி கொண்ட பெண்ணின் வடிவத்தை எடுக்கும். இவள் தன் முகத்தை குதிரையின் முகமாகவோ அல்லது மண்டையோடாகவோ மாற்றிக்கொண்டு ஆண்களை ஆபத்தில் ஆழ்த்துவாள்.
சிகுவனாபா பற்றிய கதைகள் காலனித்துவ காலத்தில் எசுப்பானியாவில் இருந்து இலத்தீன் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம். இது பழங்குடியினர் மற்றும் மெஸ்டிசோ மக்கள் மீது கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்கான வழிமுறையாக காலனித்துவவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. [1]
சிகுவனாபா நிர்வாணமாகவோ அல்லது மெலிந்த வெள்ளை அல்லது கருப்பு ஆடைகளை அணிந்த ஒரு அழகான பெண்ணாக தோன்றுவாள். அவள் வழக்கமாக ஒரு பொது நீர் ஏரி, ஆறு அல்லது பிற நீர் ஆதாரங்களில் குளிப்பது போல் தோன்றுவாள். [2] மேலும் சில சமயங்களில் துணி துவைப்பதையும் காணலாம். [3] இருண்ட, நிலவு இல்லாத இரவுகளில் தனிமையில் இருக்கும் ஆண்களை முதலில் தன் முகத்தைப் பார்க்க விடாமல் கவர்ந்து இழுக்க அவள் விரும்புவாள். [4] ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் இருண்ட காடுகளில் அவர்களை அழைத்துச் செல்ல அத்தகைய ஆண்களை அவள் தூண்டுவாள். [4]
குவாத்தமாலாவில், சிகுவனாபா மிக நீண்ட கூந்தலுடன் அழகான, கவர்ச்சியான பெண்ணாகத் தோன்றுவதாக கதைக் கூறப்படுகிறது. குதிரையின் முகமாகவோ அல்லது மனித மண்டை ஓடாகவோ வெளிப்படும் அவள் கடைசி தருணம் வரை தன் முகத்தை வெளிப்படுத்த மாட்டாள். [5] அவளால் பாதிக்கப்பட்ட ஒருவன் (பொதுவாக ஒரு விசுவாசமற்ற மனிதன்) பயத்தால் இறக்கவில்லை என்றால், அவன் அவளது பார்வையால் பைத்தியம் பிடிக்கிறான். [6] சிகுவனாபா ஒரு ஆணின் காதலியின் தோற்றத்தைப் போல தோன்றி அவனை வழிதவறச் செய்யலாம். [6]
குழந்தைகளுக்குத் தோன்றும் போது, சிகுவனாபா குழந்தையின் தாயைப் போலத் தோன்றுவாள். அவள் குழந்தையை தொட்டவுடன், அதற்கு பைத்தியம் பிடித்து விடும். பின்னர் பாதிக்கப்பட்ட குழந்தையை காட்டுக்குள் அழைத்துச் செல்வாள். [7]
பாரம்பரிய முறைகள் சிகுவனாபாவை விரட்டுவதாக கூறப்படுகிறது. குவாத்தமாலாவிற்கும் எல் சால்வடோருக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில், சிகுவனாபாவைப் பார்ப்பவர்கள் சிலுவையின் அடையாளத்தை அவள் மீது வைப்பார்கள் அல்லது தங்கள் கத்தியைக் கடிப்பார்கள். அதே நேரத்தில் தீய ஆவி தன்னை பிடிப்பதிலிருந்தும் பயம் இரண்டையும் விரட்டுகிறார்கள். [8]
குவாத்தமாலாவில் சிகுவனாபா லா சிகுவனாபா என்று அழைக்கப்படுகிறாள். அவள் ஒண்டுராசில் சிகுவா என்றும், எல் சால்வடாரில் சிகுவனாபா என்றும், கோஸ்ட்டா ரிக்காவில் செகுவா என்றும் அழைக்கப்படுகிறாள். பெயர் இடத்துக்கு இடம் மாறினாலும், சிகுவனாபாவின் தோற்றமும் செயல்களும் மாறாமல் இருக்கின்றன. [9]