சிங்கப்பூர் வரலாறு |
---|
சிங்கப்பூர் |
சிங்கப்பூரின் தொடக்க வரலாறு ஆங்கிலம்: Early history of Singapore; மலாய்: Sejarah awal Singapura; சீனம்: 新加坡早期歷史) என்பது சிங்கப்பூரின் 1819-ஆம் ஆண்டு காலனித்துவ காலத்திற்கு முந்தைய காலத்தை குறிக்கும் வரலாறு ஆகும்.
1819-ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்த சர் இசுடாம்போர்டு இராபிள்சு (Sir Thomas Stamford Raffles) என்பவர் ஜொகூர் சுல்தானகத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு சிங்கப்பூர் தீவில் ஒரு வர்த்தக குடியேற்றத்தை நிறுவினார்.
இதுவே 1824-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் பிரித்தானியக் குடியேற்ற நாடாக உருவாவதற்கு வழி அமைத்தது. இந்தக் குடியேற்றத்திற்கு முந்தைய காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தான் சிங்கப்பூரின் தொடக்க கால வரலாறு என்று அழைக்கிறார்கள்.
கிரேக்க-உரோமானிய (Greco-Roman) வானியலாளர் தொலெமி (Ptolemy), இரண்டாம் நூற்றாண்டில், சிங்கப்பூர்ப் பகுதியில் சபானா (Sabana) என்னும் ஓர் இடம் தீபகற்ப மலேசியாவின் தெற்கு முனையில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[1]
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனக் காலச்சுவடு ஒன்றில் பு லுவோ சுங் (ஆங்கிலம்: Pu Luo Chung; சீனம்: 蒲羅中) எனும் தீவு பற்றி சொல்லப் படுகிறது. இதுவே சிங்கப்பூரைப் பற்றிய மிகப் பழைமையான வரலாற்று ஆவணமாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது.[2]
அதே சமயத்தில், சிங்கப்பூரில் அந்த இடம், மலாய் மொழியில் புலாவ் உஜோங் (Pulau Ujong) என்று சொல்லப் படுகிறது. புலாவ் உஜோங் என்பது பு லுவோ சுங் என ஒலிமாற்றம் அடைந்து இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.
1330-ஆம் ஆண்டில், சீனப் பயணி வாங் தயான் (Wang Dayuan) என்பவர் சிங்கப்பூர் தீவுக்கு பயணம் செய்தார். சிங்கப்பூருக்கு தான்மாக்ஸி (Danmaxi) என்று பெயர் சூட்டி இருக்கிறார். அந்தச் சீனப் பயணி டாயோய் ஷிலீ (Daoyi Zhilüe) எனும் வரலாற்று நூல் எழுதி இருக்கிறார். அதில் சிங்கப்பூரின் இரண்டு தனித்துவமான குடியேற்றங்கள் இருந்ததாக விவரித்து இருக்கிறார்.[3]
முதலாவது லாங் யா மென் (Long Ya Men) குடியேற்றம். இரண்டாவது பான் ஜூ (Ban Zu) குடியேற்றம். இந்தக் குடியேற்றங்கள் சிங்கப்பூர் மேரு மலையில் இருந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அடுத்ததாக பான் ஜூ மக்கள் தங்கள் தலைமுடியை கட்டையாக வைத்து இருந்தார்கள் என்றும்; தங்கம் கலந்த சந்தன நிறத் தலைப்பாகையுடன்; சிவப்பு நிறத் துணிமணிகளை அணிந்து இருந்தார்கள் என்றும் சீனப் பயணி வாங் தயான் எழுதி இருக்கிறார்.
1365-இல் சாவக மொழியில் எழுதப்பட்ட நகரகிரேதாகமம் (Nagarakretagama) எனும் காவியத் தொகுப்பில் துமாசிக் எனும் தீவில் உள்ள ஒரு குடியிருப்புப் பற்றிய குறிப்பும் வருகிறது. துமாசிக் என்பது "கடல் நகரம்" அல்லது "கடல் துறை" என்னும் பொருளுடைய சொல்லாக இருக்கக்கூடும்.[4]
மார்கோ போலோவின் பயணப் பதிப்பில், மலையூர் தீவு (Malayur) இராச்சியம் தொடர்பாக சியாமாசி (Chiamassie) எனும் பெயர் தெமாசிக் (Temasek) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[2] 14 ஆம் நூற்றாண்டின் வியட்நாமிய பதிவுகளில் சச் மா டிச் (Sach Ma Tich) என்றும் தெமாசிக் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.[5]
கி.பி 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிங்கபுரம் (Singha Pura) (சமசுகிருதம்: சிங்க நகரம்) என மாறியது. நீல உத்தமன் 1299-இல் இந்தத் தீவுக்குச் சென்ற போது சிங்கம் என்று நினைத்த ஒரு விலங்கைப் பார்த்த பின்னர், சிங்கபுரம் எனும் பெயர் சூட்டப் பட்டதாகக் கூறப்படுகிறது.
துமாசிக் என்னும் பெயர் செஜாரா மெலாயு (Sejarah Melayu) எனும் மலாய் இலக்கிய வரலாற்றுப் படைப்பிலும் காணப் படுகின்றது. இதில் உள்ள ஸ்ரீ விஜய இளவரசனின் கதைப்படி, சிறீ திரி புவன எனும் நீல உத்தமன் எனவும் அறியப் படுகின்றது. 13-ஆம் நூற்றாண்டில் துமாசிக்கில் நீல உத்தமன் கரை இறங்கினார். அவர் அங்கே சிங்கம் என அறியப்பட்ட வித்தியாசமான விலங்கு ஒன்றைக் கண்டார்.[6]
இளவரசர் நீல உத்தமன் அதை ஒரு நல்ல சகுனமாக் கருதி "சிங்கபுர" அல்லது "சிங்கபுரம்" என்னும் பெயரில் ஒரு குடியிருப்பை உருவாக்கினார். ஆனாலும், அறிஞர்களின் கருத்துப்படி சிங்கபுர என்னும் பெயரின் தோற்றம் குறித்து, சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.[7]
1403-இல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக நியமனம் செய்தார். அதைச் சீனா ஏற்றுக் கொண்டது. நீல உத்தமனுக்கு ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேசுவரா பத்தாரா ஸ்ரீ திரி புவானா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) எனும் சிறப்புப் பெயரும் வழங்கப் பட்டது.
நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ பராக்கிரம வீர ராஜா என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1372-இல் இருந்து 1386 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். அந்தச சமயத்தில் சிங்கப்பூர் ஆட்சியில் சில திருப்பங்கள் ஏற்பட்டன. அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா பதவி ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இவர் சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்தக் கால கட்டத்தில் மஜாபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அரசு ஏற்கனவே மஜாபாகித்தின் மீது சில தாக்குதல்களையும் நடத்தியுள்ளது. அந்தத் தாக்குதல்களுக்குப் பழி வாங்கும் படலமாக மஜாபாகித் அரசின் திடீர் தாக்குதல் அமைந்தது.
ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா என்பவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இவர் மஜாபாகித்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்க நினைத்தார். அதனால் சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார். ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் சென்றார். அதன் பின்னர் மலாக்கா நகரம் தோற்றுவிக்கப்பட்டது.
சுமா ஓரியண்டல் (Suma Oriental) எனும் பதிவு. 1513-ஆம் ஆண்டு பதியப்பட்டது. இதை எழுதியவர் தோம் பைரஸ் (Tom Pires). இவர் ஒரு போர்த்துக்கீசியர். மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றிய பின்னர் எழுதப்பட்டது. பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய வரலாற்றை இந்தப் பதிவு எடுத்துரைக்கின்றது.
பரமேசுவரா என்பவர் ஸ்ரீ விஜய பேரரசின் இளவரசர்; சிங்கப்பூரின் கடைசியான அரசர்; மலாயா தீபகற்பத்தின் மேற்கு கரை வழியாகப் பயணித்து மலாக்காவைத் தோற்றுவித்தார் என அந்தப் பதிவு சொல்கின்றது. மலாக்காவைச் செக்குயிம் டார்க்சா (Xaquem Darxa) என்றும் மொடவார்க்சா (Modafarxa) என்றும் தோம் பைரஸ் பதிவு செய்துள்ளார்.
1819-ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்த சர் இசுடாம்போர்டு இராஃபிள்சு, சிங்கப்பூர் தீவில் ஒரு வர்த்தக குடியேற்றத்தை நிறுவினார். அதில் இருந்து நவீன சிங்கப்பூரின் வரலாறும் தொடங்குகிறது.