மொத்த மக்கள்தொகை | |
---|---|
(~5000[1]) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மலாக்கா, சிங்கப்பூர் | |
மொழி(கள்) | |
மலாய், ஆங்கிலம், தமிழ் | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மலேசியத் தமிழர், சிங்கப்பூர் இந்தியர் |
சிட்டி அல்லது செட்டி (Chitty) எனப்படுவோர் முற்காலத்தில் இருந்தே மலாக்காவிலும் சிங்கப்பூரிலும் வாழும் தமிழர் ஆவர். இவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐயாயிரத்திற்கும் குறைவாக இருக்கலாம் மதிப்பிடப் படுகிறது.[2]
சிட்டி மக்கள் மலாய் மொழி பேசுகின்றனர். இவர்கள் பேசும் மலாயில் பல் தமிழ்ச் சொற்கள் கலந்து உள்ளன. இவர்களில் பெரும்பான்மையினர் தமிழில் சரளமாகப் பேசும் திறன் அற்றவர்களாக உள்ளனர்.. ஆயினும், அடிப்படையான தமிழ்ச் சொற்களையும் தமிழ் பக்திப் பாடல்களையும் அறிந்து உள்ளனர்.
மலாக்கா சுல்தானிய காலத்தில், சிட்டிகள் தமிழ்நாட்டில் இருந்து மலாக்காவிற்கு வந்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.[3] மலாக்காவில் குடியேறியபின், மலாய் மக்ககளையும் சீனர்களையும், பிற இந்தோனேசிய, மலேசியத் தீவுகளில் வாழ்ந்த மக்களையும் திருமணம் செய்து கொண்டனர். மலாக்கா சுல்தானிய காலத்திற்குப் பிறகு, தங்கள் தாயகத்துடனான தொடர்பை இழந்தனர்.[4]
ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தின் போது, சிட்டிகள் தங்களின் பழக்க வழக்கங்களை உள்ளூர்ச் சமூகத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டனர். இதனை, 1781-ஆம் ஆண்டின் போது, தெய்வநாயகர் சிட்டியால் கட்டப்பட்ட பொய்யாத மூர்த்தி கோயிலின் கட்டடக் கலையைக் கொண்டு அறியலாம்.
ஜாலான் காஜா பேராங் எனும் சாலை மருங்கிலும் மலாக்கா சிட்டிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வம்சாவளியைச் சேர்ந்த பலர், சிங்கப்பூரிலும், மலாக்காவின் பிற பகுதிகளிலும் வேலை செய்கின்றனர்.[5]
சிட்டிகளின் இன அடையாளம் அழிந்து வருகிறது. பெரும்பாலானோர், இந்திய, சீன, மலாய்ப் பண்பாட்டுடன் கலந்து வாழ்கின்றனர். பல நூற்றாண்டுகளாகத் தனித்து வாழ்ந்த இவர்களின் அடையாளம், தற்போது அழிந்து வருகிறது.
சிட்டிகள் கலப்பு இனத்தவர் ஆவர். இவர்கள் மனதளவில் தங்களைத் தமிழர் என்று அடையாளப் படுத்திக் கொண்டாலும், உடல் தோற்றத்தில் வேறுபட்ட தெற்காசிய தோற்றத்தினைக் கொண்டு உள்ளனர்.
இதன் மூலம், முதலில் குடியேறிய தமிழர்கள், தங்களுடன் மனைவியை அழைத்து வராததால் உள்ளூர் பெண்களைத் திருமணம் செய்து கொண்டுள்ளதை அறிய முடிகிறது. காலப் போக்கில், தமிழ் அடையாளங்களில் இருந்து மாறுபட்டு, மலாய் அடையாளங்களுடன் வாழ்கின்றனர்.
சிட்டிகள் இந்து சமயத்தினர் ஆவர். விநாயகரும் சிவனும் இவர்களின் கடவுள்கள் ஆவர். இவர்களுக்கு என்று மலாக்காவில் மூன்று கோயில்களைக் கட்டியுள்ளனர். இவர்களின் சடங்குகளில் சீன, இசுலாமியத் தொனியையும் காணலாம்.