சீன இராசமுத்திரை (Imperial Seal of China) என்பது சீனத்தின் பழங்கால அரச முத்திரையாகும். இது ஒரு பச்சை மாணிக்கக்கல்லில் செதுக்கப்பட்டதாகும்.
இந்த முத்திரையானது கி.மு. 221இல் சின் சி ஹுவாங் காலத்தில் செதுக்கப்பட்டது. அப்போதிருந்து அதற்கு பின்வந்த அரச மரபுகளின் கைகளில் மாறிவந்து கடைசியாக போரிடும் நாடுகள் காலம்வரை இருந்தது. சீனப் பேரரசர் சின் சி ஹுவாங் பல சிற்றரசுகளை தன் பேரரசுடன் இணைத்தபோது, சிற்றரசான சாவோ என்ற சிற்றரசையும் தன் பேரரசுடன் இணைத்தார். அப்போது அந்த இராச்சியத்துக்கு சொந்தமாக இருந்த புகழ்மிக்க பச்சை மாணிக்கக் கல்லானது பேரரசரின் கைகளுக்கு வந்தது. சிறப்பான இந்தக் கல்லைக் கண்ட பேரரசர் இக் கல்லில் பேரரசின் இராச முத்திரையை செதுக்க உத்தரவிட்டார். அவ்வாறே முத்திரை செதுக்கப்பட்டது. முத்திரையில், " சொர்க்கத்தில் இருந்து பெறப்பட்ட கட்டளை, (பேரரசர்) நீண்ட ஆயுளுடன் , வளமோடும் வாழ வேண்டும்." ( 受命 于 天, 既 壽 永昌 ) என்ற பொருளுடன் சீன எழுத்துகள் பொறிக்கப்பட்டன. இந்த வாசகமானது முதலமைச்சரான லி சியால் எழுதப்பட்டு, சன் சோ என்ற கலைஞரால் செதுக்கப்பட்டது.
குன் பேரரசின் மூன்றாம் பேரரசரான சியிங் காலத்துடன் இம்மரபின் ஆட்சி முடிவுக்கு வந்தது, இதையடுத்து இம்முத்திரையானது ஆன் வம்சத்தின் கைவசமாகி அப்பேரரசின் முத்திரையாக அறியப்பட்டது. கி.மு. 9-ல் இந்த முத்திரையானது மேற்கு ஆன் அரசமரபின் மன்னரான வாங் மேங் கைகளுக்குச் சென்றது. ஒரு சமயம் கோபத்தில் இருந்த பேரரசி முத்திரையை தரையில் வீசினார். இதனால் முத்திரையின் ஒரு மூலையானது சேதமுற்றது. இதையடுத்து அந்த சேதமுற்ற பகுதியை தங்கத்தினால் சரிசெய்ய பேரரசர் வாங் மேங் உத்தரவிட்டார்.
சீனாவில் பழைய அரச வம்சங்கள் வீழ்ந்து புதிய அரச வம்சங்கள் எழுந்ததன. இவ்வாறான காலங்களில் இந்த இராசமுத்திரையானது அவர்களின் கைகளில் மாறியபடி வந்துள்ளது. மூன்று இராச்சியங்கள் காலம் போன்ற கொந்தளிப்பான காலங்களில், முத்திரையைக் கைப்பற்ற ஆயுத மோதல்கள் போன்றவை ஏற்பட்டன. முத்திரை வைத்திருக்கும் இராச்சியங்கள் தாங்களைத் தாங்களே சட்டபூர்வ ஆட்சியாளர்களாக அறிவித்துக் கொண்டன. 3 ஆம் நூற்றாண்டில் ஆன் வம்சத்தின் முடிவு காலத்தில் தளபதி சன் ஜியன் இந்த இராச முத்திரையைக் கைப்பற்றி, தன் மன்னரான யுவான் ஷுவிடம் ஒப்படைத்தார். இதையடுத்து யுவான் ஷு தன்னைப் பேரரசராக அறிவித்துக் கொண்டார். இதை எதிர்துது சில போர்களும் நடந்தன.
முத்திரையானது வெய் வம்சம், யின் வம்சம், பதினாறு இராச்சியங்களின் காலம், தெற்கு, வடக்கு வம்சங்கள் காலம், சுயி வம்சம், தாங் வம்சம் ஆகிய இராஜ்சியங்களின் கைகளில் மாறிக்கொண்டே வந்ததது. ஆனால் இது ஐந்து ராஜ வம்சங்கள் மற்றும் பத்து ராஜ்ஜியங்கள் காலத்துக்குப் (907-960) பிறகு வரலாற்றில் இருந்து காணாமல்போனது.
ஐந்து அரச வம்சங்கள் மற்றும் பத்து ராஜ்ஜியங்கள் காலத்தின்போது கடைசியாக இந்த முத்திரை குறித்த பதிவுகள் கிடைத்துள்ளன. அதற்குப் பின்பு முத்திரை குறித்த பதிவுவுகள் கிடைக்கவில்லை.[1]