சீன உடைகள், காலத்தாலும் பிரதேசத்தாலும் வேறுபட்டு, தொன்மையானவையும் நவீனமானவையுமான பல்வேறு உடை வகைகளை உள்ளடக்குகின்றது. இவ்வாறான ஆடைகள் பற்றிய தகவல்கள் சீனப் பண்பாட்டுக்குரிய கலைப்பொருட்களிலும், பிற கலை வடிவங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீன ஆடைகள், இயங்குநிலையில் உள்ள சீன மரபினாலும், வெளியார் செல்வாக்கினாலும் மாற்றமடைந்து செல்கின்றன.[1] சீனப் பண்பாட்டின் மரபுவழியான பாங்குகளைச் சீன உடைகள் வெளிக்காட்டுவதுடன், சீன நாகரிகத்தின் முக்கியமானதொரு பகுதியாகவும் அவை விளங்குகின்றன.[2]
'ஆன்ஃபு' அல்லது மரபுவழி ஆன் (Han) உடைகள், மிங் வம்சம் வரையான 3000 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த ஆன் சீனர்களின் எல்லா வகையான மரபுவழி உடைகளையும் உள்ளடக்குகின்றது. பழங்காலச் சீனாவில், வெவ்வேறு சமூக வகுப்புக்கள் அவற்றின் தகுதி நிலைக்கு ஏற்ப வேறுபட்ட வகையிலான உடைப் பாங்குகளைப் பின்பற்றின. பெரும்பாலான ஆண்கள் கறுப்பு நிறப் பருத்திக் காலணிகளை அணிந்தனர். வசதி படைத்த உயர் வகுப்பு ஆண்கள், முக்கியமான நிகழ்வுகளில் கருநிறத் தோலால் ஆன காலணிகளைப் பயன்படுத்தினர். பெரும் பணக்காரர்களான ஆண்கள் பிரகாசமான வண்ணங்களில் அமைந்த பட்டுக் காலணிகளை அணிந்தனர். இப்பட்டுக் காலணிகளின் உட்புறம் தோலால் ஆனதாக இருப்பது உண்டு. பெண்கள் பட்டுக் காலணிகளை அணிவது வழக்கம். பாத வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வழக்கத்தைக் கைக்கொள்ளும் பணம் படைத்த பெண்கள் தாமரைக் காலணிகளை அணிவர். இது அவர்களின் சமூகத் தகுதியைக் காட்டும் ஒன்றாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிவரை நீடித்திருந்தது. பெண்களின் காலணிகள் ஆண்களுடைய காலணிகளைவிட நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடியவையாக இருந்தன.
அக்காலத்துச் சீனக் குடிசார் அதிகாரிகளும், படைத்துறை அதிகாரிகளும் தமது பதவி நிலைகளைப் பல்வேறு விதங்களில் வெளிக்காட்டினர். இவற்றுள் பெரிதும் அறியப்படுவது 'மான்டரின் சதுரம்' எனப்படும் பதவி நிலைப் பட்டை ஆகும். தொப்பியின் மேலே பொருத்தப்படும், பல நிறங்களில் அமைந்த தொப்பிக் குமிழ்கள் சமூகத் தகுதியையும் குடிசார் பதவி நிலையையும் காட்டும் இன்னொரு வழியாகப் பயன்பட்டன. ஒன்பது வகையான குடிசார் மற்றும் படைத்துறைப் பதவி நிலைகளைக் குறிக்க 12 வகையான தொப்பிக் குமிழ்கள் பயன்பட்டன.
மாஞ்சுக்களின் சிங் வம்சத்தின் எழுச்சியுடன், பிரபுக்களும், அதிகாரிகளும் பல வழிகளிலும் புதிய பாணிகளிலான ஆடைகளை அணியவேண்டி இருந்தது. காலப்போக்கில் மேற்குறித்த பாணிகள் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாகப் பயன்பட்டது. ஆண்கள் அணியும் 'சாங்சான்' எனப்படும் உடையையும், பெண்கள் அணியும் சிப்பாவோ என்னும் உடையையும் உள்ளடக்கிய 'தாங்சுவாங்', இக்காலத்தில் புதிதாக உருவான உடைப் பாணி. மாஞ்சு அலுவலர்களின் தலைப்பாகைகள் மின் வம்சத் தலைப்பாகைகளில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டன. எனினும் மான்டரின் சதுரம் என்னும் பதவிநிலைப் பட்டை தொடர்ந்தும் பயன்பாட்டில் இருந்தது. இக்காலத்திலேய பெண்களின் பாத வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வழக்கம் பிரபலமானது.
1912 இல் ஏற்பட்ட பேரரசுவாதச் சீனாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உடைகளிலும், பிற பழக்க வழக்கங்களிலும் உடனடியான தாக்கங்கள் ஏற்பட்டன. தூக்கி எறியப்பட்ட சிங் வம்சத்தின் உத்தரவு காரணமாக ஆன் சீனர்கள் வளர்த்துவந்த 'கியூ' என அறியப்பட்ட தலைமுடி வளர்ப்பை அவர்கள் கைவிட்டனர். நாட்டின் தலைவர் சுன்-யாட்-சென் புதிய பாணியிலான ஆண்கள் உடையொன்றைப் பிரபலம் ஆக்கினார். முன்னர் அணிந்த நீளமான உடைக்குப் பதிலாக, இது ஒரு மேலாடையையும், நீளக் காற்சட்டையையும் கொண்டிருந்தது.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link)