சுங்கை பீசி | |
---|---|
Sungai Besi | |
கோலாலம்பூர் | |
ஆள்கூறுகள்: 3°03′N 101°42′E / 3.050°N 101.700°E | |
நாடு | மலேசியா |
கூட்டரசு நிலப்பகுதி | கோலாலம்பூர் |
நகர்ப்புறம் | சுங்கை பீசி |
நாடாளுமன்றத் தொகுதி | பண்டார் துன் ரசாக் |
அரசு | |
• நகராண்மை | கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 57000 |
மலேசியத் தொலைபேசி எண் | +6-03 22 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | W V |
இணையதளம் | www.dbkl.gov.my |
சுங்கை பீசி, (மலாய்: Sungei Besi; ஆங்கிலம்: Sungei Besi; சீனம்: 新街場; ஜாவி: سوڠاي بسي); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் (Federal Territory of Kuala Lumpur) உள்ள புறநகரம். கோலாலம்பூரின் தெற்கில், நகர மையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் கூச்சாய் லாமா, சாலாக் சவுத் மற்றும் புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
சுங்கை பீசி எனும் பெயர் இரு சொற்களால் ஆனது. மலாய் மொழியில் சுங்கை (Sungei) என்றால் ஆறு; பீசி அல்லது ’பெசி’ (Besi) என்றால் இரும்பு; ஆங்கிலத்தில் இரும்பு ஆறு (Steel River) என்றும் பொருள் படும்.
கோலாலம்பூரின் தொடக்கக் காலத்தில் வளர்ச்சி அடைந்த பகுதிகளில் சுங்கை பீசியும் ஒன்றாகும். அதன் பொருளாதாரத் தூண்களாக ஈயச் சுரங்கங்கள் இருந்தன. அந்த நேரத்தில் உலகின் மிகப்பெரிய திறந்தவெளி ஈயச் சுரங்கம் (Sungei Besi Tin Mine) இங்குதான் இருந்தது.[1]
தற்போது பெரும் கோலாலம்பூர் பகுதியின் பொருளாதார மையமாக மாற்றம் அடைந்துள்ளது. இரும்புத் தளவாடப் பொருள்கள் தயாரித்தல்; கனரக இயந்திரங்கள் தயாரித்தல் போன்ற தொழில்களுக்கு முக்கியத்துவம் வழங்கப் படுகிறது. சுங்கை பீசி உள்ளூர் பகுதியில் கைவிடப்பட்ட ஏராளமான ஈயச் சுரங்கங்கள், இப்போது செயற்கைச் சுரங்க ஏரிகளாக மாற்றம் கண்டுள்ளன.[2]
19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, சுங்கை பீசி புறநகர்ப் பகுதி, தீபகற்ப மலேசியாவில் ஈயம் உற்பத்தி செய்யும் ஒரு முக்கியமான நகரமாக விளங்கியது.
சாங் உகாய் (Zhang Yucai) மற்றும் சென் சென்யாங் (Chen Zhenyong) ஆகிய இருவரும் ஓங்பா ஈயச் சுரங்க நிறுவனத்தை (Hongfa Tin Mining Co., Ltd.) நிறுவினர். இந்த நிறுவனம் முதலில் ஜிஞ்சாங்கில் நிறுவப்பட்டது. பின்னர் அதன் கட்டுப்பாடு சுங்கை பீசி வரை விரிவானது. மேலும் அந்த நேரத்தில் சுங்கை பீசியில் உலகின் மிகப் பெரிய திறந்தவெளி சுரங்கம் தோண்டப்பட்டது.
அந்தச் சுரங்கம் 1,000 மீ. நீளம், 400 மீ. அகலம், 103 மீ. ஆழம் கொண்டது. 30.6 மில்லியன் கன மீட்டர் மண் தோண்டப்பட்டது. ஈயத் தொழில்துறை தீவிர வளர்ச்சி கண்டது. அதன் பின்னர் கோலாலம்பூரின் தெற்கில் செர்டாங் மற்றும் பூச்சோங் உட்பட பல இடங்களில் ஈயச் சுரங்க குடியிருப்புகள் உருவாகின.[3]
பிப்ரவரி 1, 1974-இல், இந்தச் சுங்கை பீசி புறநகர்ப் பகுதி, பெட்டாலிங் ஜெயா நியூடவுன், கெப்போங், டாமன்சாரா, செதாபாக் மற்றும் கோலாலம்பூர் ஆகியவை சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கூட்டாட்சி பிரதேசமாகப் பிரகடனம் செய்யப்பட்டன.[4]
சுங்கை பீசி நகரம் இன்னும் அதன் அசல் அமைப்புகளில் உள்ளது. கிராமக் கட்டமைப்புகள் ஆரம்ப நாட்களில் இருந்தவை போலவே இன்றும் உள்ளன. பெரும்பாலான கட்டடங்கள் மரத்தால் கட்டப்பட்டவை; மற்றும் பாதைகள் பழைய நிலையில் குறுகலாக உள்ளன.
1901-இல் நகரப் பகுதிக்குள் நிறுவப்பட்ட நூற்றாண்டு பழைமையான சின் சி சி சீனர்க் கோயில் (Sin Si Shi Ye Temple; 仙四師爺廟) இன்றும் உள்ளது. அந்த இடத்திற்கு சன் சாலைச் சந்தை (Sun Street Market) என்று பெயர்.
சுங்கை பீசியின் பரபரப்பான கடைப் பகுதிகளுக்குள் ஒரு காவல் நிலையம் அமைந்துள்ளது. சுங்கை பீசியில், சாலையோர விற்பனையாளர்கள் பலரும்; காய்கறிச் சந்தை வணிகர்கள் பலரும்; பெரும்பாலும் உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களை விற்கிறார்கள்.
சுங்கை பீசி ஈயச் சுரங்கத் தளம் (Sungei Besi Tin Mines), ஒரு காலத்தில் உலகின் மிக ஆழமான; மிகப்பெரிய திறந்தவெளி வண்டல் ஈயச் சுரங்கமாக இருந்தது. பழைய ஈயச் சுரங்கங்களின் சில பகுதிகளில் 100 மீட்டர் ஆழமான ஏரிகள்; ஆபத்தான நிலச் சரிவுகளுடன் இன்றும் உள்ளன. இன்று அந்த ஈயச் சுரங்கத் தளத்தின் மீது மைன்சு வெல்னசு சிட்டி (Mines Wellness City) எனும் ஒரு புதிய நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது.[5]
2018-ஆம் ஆண்டு வரையில், சுங்கை பீசியில் அரச மலேசிய விமானப் படையின் இராணுவ வானூர்தி நிலையம் இருந்தது. இந்த வானூர்தி நிலையத்தை பழைய விமான நிலையம் (Old Airport) என்றும்; சுங்கை பீசி விமான நிலையம் (Sungai Besi Airport) என்றும் அழைப்பது உண்டு. மலேசியாவில் கட்டப்பட்ட மிகப் பழைமையான வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த வானூர்தி நிலையம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் என்ற பெயரில் 1952-ஆம் ஆண்டு முதல் 1965-ஆம் ஆண்டு வரை கோலாலம்பூரின் முக்கிய விமான நிலையமாகச் செயல்பட்டது. அனைத்துலக விமானப் போக்குவரத்து சுபாங் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மாற்றப்படும் வரை, இந்த சுங்கை பீசி வானூர்தி நிலையம் தான் முதன்மையான நிலையமாகப் பயன்படுத்தப்பட்டது.
அத்துடன், இந்த விமான நிலையமே கோலாலம்பூருக்குச் சேவை வழங்கிய முதல் விமான நிலையமாகும். மேலும் தற்போது கோலாலம்பூர் எல்லைக்குள் அமைந்துள்ள ஒரே விமான நிலையமாகவும் அறியப்படுகிறது.[6]
முன்பு ஐக்கிய இராச்சியத்தின் அரச விமானப் படை நிலையம் (Royal Air Force) என அறியப்பட்டது. அதன் பின்னர் அரச மலேசிய விமானப் படை (ஆங்கிலம்: Royal Malaysian Air Force; மலாய்: Tentera Udara Diraja Malaysia); அரச மலேசிய போலீஸ் படை (Royal Malaysian Police); மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (Malaysian Fire and Rescue Department); போன்ற அரசு சார்ந்த அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டது.
ஒரு வீட்டு மனை திட்டத்திற்காக இந்த விமான நிலையம் இடிக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் ஏதோ சில காரணங்களினால் ரத்து செய்யப்பட்டது. இப்போது இந்த விமான நிலையம் அவ்வப்போது விமானப் படையின் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த விமான நிலையம் 2018 மார்ச் 16-ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாகச் செயல்படுவதை நிறுத்திக் கொண்டது.[7][8][9]
சுங்கை பீசி நகர்ப் பகுதியில் சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி எனும் பெயரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 157 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 18 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[10][11]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
WBD0193 | சுங்கை பீசி Sungai Besi |
SJK(T) Sg Besi | சுங்கை பீசி தமிழ்ப்பள்ளி | 57000 | கோலாலம்பூர் | 157 | 18 |
{{cite web}}
: CS1 maint: url-status (link)