சுரிந்தர் வாசல் (Surinder Vasal) ஓர் இந்திய மரபியல் நிபுணர் ஆவார். தாவர வளர்ப்பாளராக செயற்பட்ட இவர் பயன்படுத்தக்கூடிய புரதத்தின் அதிக உள்ளடக்கம் கொண்ட மக்காச்சோள வகையை உருவாக்குவதில் ஈடுபட்டதற்காக நன்கு அறியப்பட்ட்டார். [1] இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் 12 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று பிறந்தார். மரபியல் மற்றும் தாவர வளர்ப்பில் முனைவர் பட்டம் பெற்றார். [2]
1970 ஆம் ஆண்டுகளில் புரதச் செறிவூட்டப்பட்ட மக்காச்சோளத்தை உருவாக்குவதற்காக உயிர் வேதியியலாளர் எவாஞ்சலினா வில்லேகாசுடன் இணைந்து சுரிந்தர் 35 ஆண்டுகள் பணியாற்றினார். [3] குறைந்த ஊட்டச்சத்துள்ள சோளத்தில் புரதத்தைச் சேர்ப்பதன் மூலம் தரமான புரத மக்காச்சோளம் உருவாக்கப்பட்டது. இன்று சீனா, மெக்சிகோ, மத்திய அமெரிக்காவின் சில பகுதிகள் மற்றும் ஆப்பிரிக்காவில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதில் இதன் பங்கு காரணமாக அதிசய மக்காச்சோளம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மக்காச்சோளத்தின் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துவதோடு, அதன் உற்பத்தித்திறனும் அதிகரித்தது. மெக்சிகோவில் உள்ள பன்னாட்டு சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையத்தில் தரமான புரத மக்காச்சோளத்தை மேம்படுத்தியதற்காக 2000 ஆம் ஆண்டில் உலக உணவுப் பரிசு இவர்களுக்கு கூட்டாக வழங்கப்பட்டது. [4]
சுரிந்தர் வாசல் தேசிய வேளாண் அறிவியல் அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார். [2]