அமைவிடம் | பந்தல், தெலுங்கானா, இந்தியா |
---|---|
இணையத்தளம் | www |
சுரேந்திரபுரி (Sudendrapuri) என்பது ஒரு மதச் சுற்றுலாத் தலமாகும். இது இந்தியாவின் ஐதராபாத்து அருகே உள்ள யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1] சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இந்த தலத்தில் குந்தா சத்யநாராயண கலதம் - இந்தியாவின் முதல் புராண அருங்காட்சியகம், பஞ்சமுக அனுமதீசுவர கோயில், நவக்கிரகக் கோயில்கள், நாககோட்டி சிலை மற்றும் சுரேந்திரபுரியின் சின்னமாக இரு பக்க பஞ்சமுக அனுமான் - சிவன் கோயில் ஆகியவை அமைந்துள்ளது. [2]
சுரேந்திரபுரி சத்தியநாராயண குந்தா என்பவரால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இது மே, 2003 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. இது புவனகிரி இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும், யாதாத்ரி பேருந்து முனையிலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. யாதாத்திரியின் இலட்சுமி நரசிம்ம கோயில், போங்கிர் கோட்டை மற்றும் கோலானுபக கோயில் போன்றவை சுரேந்திரபுரிக்கு அருகிலுள்ள பிற பிரபலமான சுற்றுலா தலங்களாகும்.
சத்தியநாராயண கலாதமத்தை உருவாக்கிய சத்தியநாராயண குநதா என்பவருடைய பெயரே இதற்கு சூட்டப்பட்டது. இது ஒரு இந்திய புராண அருங்காட்சியகமாகும். இது ஆந்திராவின் முன்னாள் ஆளுநராக இருந்த திவாரியால் பிப்ரவரி 2009ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. [3] கலாதமம் அருங்காட்சியகத்தில் உள்ள 3 கி.மீ பாதை 3,000க்கும் மேற்பட்ட சிலைகளையும், சிற்பங்களையும் மற்றும் கட்டமைப்புகளையும் உள்ளடக்கியது. மேலும் இவை இந்திய கோயில்கள், இந்திய காவியங்கள், புராணங்கள் மற்றும் சப்தலோகங்கள் ஆகிய நான்கு வகைகளில் ஒன்றாகும். [மேற்கோள் தேவை]
குந்தா சத்தியநாராயண கலாதமம் 100 இந்திய கோயில்களின் கட்டிடக்கலை வாழ்க்கையை பிரதிகளின் வடிவத்தில் காட்சிப்படுத்துகிறது. இந்த தொகுப்பில் இந்தியாவின் மிகவும் பிரபலமான புனித ஆலயங்களாக கருதக்கூடிய அமிருதசரசு, பொற்கோயில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில், புரி ஜெகன்நாதர் கோயில், கொல்கத்தாவின் காளி கோயில், குசராத்தின் சோம்நாதர் கோயில், உத்தராகண்டம் கேதார்நாத் கோயில், திருப்பதி வெங்கடாசலபதி கோயில், குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் ஆகியவை அடங்கும்.
இந்த அருங்காட்சியகத்தில் இந்திய காவியங்களான இராமாயணம், மகாபாரதம், பாகவதம், புத்தசரித்திரம் போன்றவற்றின் முக்கிய காட்சிகள், சிலைகள் மற்றும் சிற்பங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்து புராணங்களின் முக்கிய நிகழ்வுகளாக கருதக்கூடிய திருப்பாற்கடல், கஜேந்திரமோட்சம், குருச்சேத்திரப் போர் போன்றவை அருங்காட்சியகத்திற்குள் சிற்பங்களாகவும், சுவரோவியங்களாகவும் வைக்கப்பட்டுள்ளன.
இந்து புராணங்களின் சப்தலோகங்கள் அல்லது 7 வான உலகங்கள், சிற்பங்கள் மற்றும் செதுக்கல்கள் மூலம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் பண்டைய நூல்களின்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.
கலாதமத்திற்குள் உள்ள கண்காட்சிகள் அங்குள்ள பிரதிகளின் அளவு மற்றும் சித்தரிக்கப்பட்ட புராணக் காட்சிகளைப் பொறுத்து திறந்தவெளி மற்றும் உட்புறங்களில் அமைந்திருக்கும்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காஞ்சி காமகோடி பீடம் இதனுடன் தொடர்புடையது. சுரேந்திரபுரியின் பஞ்சமுக அனுமதீசுவர தேவஸ்தானம் இந்த கோயிலின் முழு கட்டுமானமும் வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஆகமசாத்திரம் ஆகியவற்றிற்கு ஏற்ப அமைக்கப்பட்டது. இந்த கோயிலின் கோபுரங்கள் வட மற்றும் தென்னிந்திய கட்டிடக்கலைகளின் கலவையாகும். காஞ்சியில் உள்ள கறுப்புக் கல்லிலிருந்து வெட்டப்பட்டு கொண்டு வரப்பட்ட 16 அடி பஞ்சமுக அனுமான் சிலை இதன் கருவறையில் உள்ளது. இந்த வளாகத்திற்குள் நேபாளத்தின் பசுபதிநாத் கோவில்|பசுபதிநாத் கோவிலுக்கு]] ஒத்த பஞ்சமுக பரமேசுவரனின் (சிவன்) சிவலிங்கத்தின் தரிசனமும், வெங்கடேசுவரர் தரிசனமும், இலட்சுமி தேவியின் தரிசனமும் பக்தர்களுக்கு கிடைக்கிறது.
இந்த கோவில் வளாகத்தில் நவக்கிரகக் கோயில்களும் உள்ளன. அவற்றுக்கு தலைமை தாங்கும் நவக்கிரக தெய்வங்களும் அவற்றின் துணைவியாரும் தலா ஒரு பிரத்யேக ஆலயத்தைக் கொண்டுள்ளனர்.
நாகாத்ரி மலையின் மேல் அமைந்துள்ள 101 அடி சிவலிங்கம் மாபெரும் பாம்பான காலசர்ப்பத்தால் சூழப்பட்டுள்ளது. எறும்பு சேற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட 10 மில்லியன் சிறிய சிவலிங்கம் நாககோட்டி, நாகதோசம், குலதோசம் மற்றும் காலசர்ப்ப தோசம் ஆகியவற்றின் மோசமான விளைவுகளிலிருந்து காக்கிறது என்ற நம்பிக்கையில் பக்தர்கள் இதனை வணங்குகின்றனர்.
சுரேந்திரபுரியின் நுழைவாயிலில் அதன் பழமையான ஈர்ப்பு, பஞ்சமுகத்தின் 60 அடி உயர இரட்டை பக்க சிலை அல்லது ஐந்து முகம் கொண்ட அனுமான் மற்றும் சிவன்(பின்புறம்)சிலை உள்ளது.