சுவேதா திரிபாதி சர்மா | |
---|---|
2019இல் சுவேதா திரிபாதி | |
பிறப்பு | சுவேதா திரிபாதி 6 சூலை 1985 புது தில்லி, இந்தியா |
கல்வி | தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2009–தற்போது வரை |
அறியப்படுவது | மிர்சாப்பூர் (தொலைக்காட்சித் தொடர்) |
வாழ்க்கைத் துணை | சைதன்யா சர்மா (தி. 2018) |
சுவேதா திரிபாதி சர்மா (Shweta Tripathi Sharma) (பிறப்பு 6 சூலை 1985) ஓர் இந்திய நடிகை ஆவார். 2018இல் ஒளிபரப்பப்பட்ட, மிர்சாபூர் என்ற தொலைக்காட்சித் தொடரில் கோலு குப்தாவின் கதாபாத்திரத்திற்காக பிரபலமாக அறியப்பட்டவர். தயாரிப்பு உதவியாளராகவும் உதவி இயக்குனராகவும் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் பாலிவுட் திரைப்படத் துறையிலும், வலைத் தொடர்களிலும் தனது நடிப்பிற்காக பரந்த அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெற்றார். குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் மசான் (2015), ஹராம்கோர் (2017) ஆகியவை அடங்கும்.[1][2][3]
சுவேதா திரிபாதி 6 சூலை 1985 அன்று புது தில்லியில் பிறந்தார்.[4] இவரது தந்தை இந்திய ஆட்சிப் பணியில் பணிபுரிகிறார். இவரது தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய தந்தையின் வேலை காரணமாக குடும்பம் நிறைய நகரங்களுக்கு நகர்ந்தது. திரிபாதி தனது குழந்தைப் பருவத்தை அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும், மகாராட்டிராவில் மும்பையிலும் கழித்தார்.[4] அந்தமானில் தனது மகிழ்ச்சியான நேரத்தை இவர் விவரிக்கிறாள்: "அப்போதுதான் நான் பயணம் செய்வதையும், வெளியில் இருப்பதையும் விரும்புனேன். ஒவ்வொரு வார இறுதியும் ஒரு புதிய தீவில் சுற்றுலாவாக இருந்தது. அது ஒரு வளமான அனுபவமாக இருந்தது ".[5]
சுவேதா திரிபாதி இடைநிலைக் கல்வியைத் தொடர புது தில்லிக்குச் சென்றார். ஆர்.கே.புரத்தில் அமைந்துள்ள தில்லி பொதுப் பள்ளியில் பயின்றார். பின்னர் இவர் தேசிய உடையலங்கார தொழிழ் நுட்பக் கல்லூரியில் கல்லூரியில் உடையலங்காரத்தில் தொடர்பியலில் பட்டம் பெற்றார்.[6]
இவர் நடிகரும் ராப் பாடகருமான சைதன்யா சர்மாவை சூன் 29, 2018 அன்று திருமணம் செய்து கொண்டார்.[7]
சுவேதா பெரும்பாலும் மசான் படத்தில் நடித்ததற்காக அறியப்படுகிறார். டிஸ்னி இந்தியாவின் கியா மஸ்த் ஹே லைஃப் என்ற நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடரில் ஆண் கதாபாத்திரமான ஜெனியா கான் வேடத்திலும் இவர் நடித்தார்.[8][9] டாட்டா ஸ்கை, மெக்டொனால்ட்சு, வோடபோன் போன்ற நிறுவனக்களின் விளம்பரங்களிலும் இவர் தோன்றினார். டாட்டா ஸ்கை பதிவிறக்கம், மெக்டொனால்ட்சு, தனிஷ்க் நகைக் கடை சமீபத்தில் டாட்டா தேனீர் போன்ற விளம்பரங்களிலும் இவர் தோன்றுகிறார்.[10] பெமினா என்ற மகளிர் இதழின் புகைப்பட ஆசிரியராகவும் இருந்தார். கியா மஸ்த் ஹே லைஃப் தொடருக்கு முன், இவர் மும்பையில் பணிபுரிந்தார். ஆல் மை டீ புரொடக்ஷன்ஸ் என்ற நாடக நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
இந்தியாவின் தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஸ்டார் இந்தியாவுக்கு சொந்தமான "பிண்டாஸ்" என்ற கட்டணத் தொலைக்காட்சியின்[11] ஒரு பகுதியாக இருந்தார். சரவண ராஜேந்திரன் இயக்கிய "மெஹந்தி சர்க்கஸ்" மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.[12] ஐ-போனில் எடுக்கப்பட்ட "விலங்கியல் பூங்கா" (Zoo) என்ற இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இவர் இருந்தார்.[13] மிர்சாபூர் என்ற வலைத் தொடரில் [14] சுய இன்பம் அனுபவித்து பெண்களின் பாலுணர்வை வெளிப்படையாக சித்தரித்த கோலு குப்தா பாத்திரம் பாராட்டப்பட்டது. இந்தத் தொடர் மிக உயர்ந்த தரவரிசையில் இருந்தது.[15] திரிபாதியின் சமீபத்திய படமான கோன் கேஷ் இவரது இலட்சியப் படமாகும். இதில் இவர் இளம் பருவ நடனக் கலைஞராக நடித்தார். இதில் இவர் தனது தலை முடியை முழுவதும் கத்தரித்துவிட்டு சுய மரியாதையை இழந்து நிற்பவராக நடித்திருந்தார்.[16]