சேது பார்வதிபாயி | |
---|---|
பிறப்பு | 7 நவம்பர் 1896 திருவிதாங்கூர் |
இறப்பு | 4 ஏப்பிரல் 1983 (அகவை 86) திருவனந்தபுரம் |
மூலம் திருநாள் சேது பார்வதி பாயி (Sethu Parvathi Bayi, 1896-1983) அல்லது அம்மா மகாராணி என்று சிறப்பாக அறியப்பட்டவர் திருவாங்கூரின் இளைய மகாராணி ஆவார். இவர் இந்திய பாரம்பரிய இசையை ஊக்குவித்தவர். இவர் திருவிதாங்கூரின் கடைசி மன்னரான சித்திரைத் திருநாள் பலராம வர்மரின் தாயார் ஆவார்.
சேது பார்வதிபாய் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தூரத்து சொந்தத்தில் நேரடி பெண் வாரிகள் வரிசையில் பிறந்தவர். திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு வாரிசுகள் இல்லாததைத் தொடர்ந்து, 1900 ஆம் ஆண்டில், இவர், இவரது மூத்த தாய்வழி உறவினர் சேது லட்சுமி பாயுடன், இவரது தாய்வழி பெரியம்மா, மூத்த மகாராணி லட்சுமி பாயால் தத்தெடுக்கப்பட்டார். ஐந்து வயதில், திருவிதாங்கூரின் இளைய மகாராணி ஆனார். கிளிமனூர் அரண்மனையைச் சேர்ந்த சிறீ பூரம் நாள் ரவி வர்மா தம்புரானை சேது பார்வதி பாய் தனது துணைவராக தேர்வு செய்தார். இவர்களது திருமணம் 1907 இல் நடந்தது. 1912 ஆம் ஆண்டில், பதினைந்து வயதில் வாரிசாக சிறீ சித்திரைத் திருநாளை பெற்றெடுத்த பிறகு, இவர் அம்மா (தாய்) மகாராணி (ராணி) அல்லது திருவிதாங்கூர் இராஜ மாதா ஆனார்.
சேது பார்வதி பாய் ஒரு திறமையான வீணை இசைக் கலைஞர். மற்றும் கருநாடக இசை மற்றும் பிற கலைகளை ஊக்குவித்தவர் ஆவார். திருவிதாங்கூரைச் சேர்ந்த தனது மூதாதையர் மகாராஜா சுவாதித் திருநாள் ராம வர்மாவின் இசையமைப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். [1] இவரும் இவரது உறவினரான சேது லட்சுமி பாயியும் புகழ்பெற்ற இந்திய கலைஞரான ரவி வர்மாவின் பேத்தி மகள்கள் ஆவர்.
சேது பார்வதி பாய் 1896 நவம்பர் 7 ஆம் நாள் பிறந்தார். இவர் மாவேலிகரை அரச இல்லத்தின், உற்சவமடம் கிளையின் மகளான திருவதிரை நாள் பகீரதி பாயி உமா கொச்சுகுஞ்சி அம்மா தம்புராட்டி மற்றும் பாளையக்கார கிழக்கு அரண்மனை ஸ்ரீ திருவோணம் நாள் கேரள வர்மா தம்புரான் ஆகியோரின் மகளாகப் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். இவரது இரண்டு சகோதரிகள், ஸ்ரீமதி அவிட்டம் நாள் பவானி அம்மா தம்புராட்டி (கலைஞர் மற்றும் விளக்குநர்) மற்றும் ஸ்ரீமதி மாகிராம் நாள் ராஜம்மா அம்மா தம்புராட்டி (அம்மா தம்புரான் என்ற பெயரிலான இயற்கைக்காட்சி கலைஞர்) ஆகிய கலைஞர்கள் ஆவர். சேது பார்வதி பாயின் பாட்டி திருவிதாங்கூரில் உள்ள கோலத்துநாடு அரச இல்லத்தைச் சேர்ந்தவர். சேது பார்வதி பாயின் பாட்டியான ஸ்ரீமதி மகாயிராம் நாள் ராஜம்மா அம்மா தம்புரட்டியின் பேத்தியான லேகா வர்மாவும் 1996 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரச இல்லத்தால் தத்தெடுக்கப்பட்டார்.[2]
கிளிமானூர் அரண்மனையைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஓவியக் கலைஞரான ஸ்ரீ ராஜா ரவி வர்மாவின் இளைய பேத்திதான் சேது பார்வதி பாயி. 1858 ஆம் ஆண்டில் திருவாங்கூரின் அப்போதைய மூத்த மற்றும் இளைய அரசிகள், திருவாங்கூர் அரச குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டதால், மாவேலிக்கரா அரச வீடானது திருவாங்கூர் அரச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்தது. திருவாங்கூர் மன்னர் கேரள வர்மா வல்லிய கோயில் தம்புரானை மணந்த மூத்த ராணி லட்சுமி பாயிக்கு குழந்தை இல்லாத நிலையில், இளைய ராணி பார்வதி பாயிக்கு மகன்கள் மட்டுமே இருந்தனர். திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் அரச உரிமையானது தாய்வழி உறவு முறையில் பின்பற்றப்படுவதால் (மருமக்கதாயம்), வம்சத்தைத் தொடர பெண் பிள்ளைகள் இருப்பது அவசியம். 1893 மற்றும் 1895 க்கு இடையில் இளைய ராணி மற்றும் அவரது மகன்கள் இறந்தவுடன், அரச குடும்பம் மகாராஜா மூலம் திருநாள், மூத்த ராணி லட்சுமி பாய் மற்றும் அவரது இரண்டு மருமகன்களை மட்டுமே கொண்டிருந்தது. இதனால் மாவேலிக்கரை வீட்டைச் சேர்ந்த இரு ராஜகுமாரிகளான சேது லட்சுமி பாய் மற்றும் சேது பார்வதி பாய் ஆகிய இருவரையும் தத்தெடுக்க முடிவு செய்தனர்.
இதன்படி 1900 ஆம் ஆண்டில், மகாராணி லட்சுமி பாய், மகாராஜா மூலம் திருநாள் ஆகியோர் இந்த இருவரையும் தத்தெடுத்தனர். இதனால், இவர் திருவிதாங்கூரின் முதல் இளவரசி மூலம் திருநாள் சேது பார்வதி பாய் ஆனார். இந்த தத்தெடுப்புக்கு கோலத்துநாடு குடும்பத்தின் பிற கிளைகளிடமிருந்து சில எதிர்ப்புகளை எதிர்கொண்டது, அவர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்து பெண்களை பரிந்துரைத்தனர். முதல் இளவரசர் சத்தம் திருநாள் ராம வர்மாவிடமிருந்தும் ஆட்சேபனைகள் எழுந்தன, ஆனால் திருவிதாங்கூர் மூத்த ராணியின் வற்புறுத்தலால் இவை முறியடிக்கப்பட்டன. ஒரு ஆண்டு கழித்து மூத்த ராணி லட்சுமி பாய் 1901 இல் இறந்தார்.