ஜோசப் பைரின் கித்திங்கான் Joseph Pairin Kitingan | |
---|---|
7-ஆவது சபா முதலமைச்சர் | |
பதவியில் 22 ஏப்ரல் 1985 – 17 மார்ச் 1994 | |
ஆளுநர் | முகமட் அட்னான் ரோபர்ட் முகமட் சாயிட் கெருவாக் |
முன்னையவர் | அரிஸ் சாலே |
பின்னவர் | சக்காரான் டன்டாய் |
கெனிங்காவ் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 3 ஆகஸ்டு 1986 – 9 மே 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Joseph Pairin Kitingan 17 ஆகத்து 1940 பாப்பார், பிரித்தானிய வடக்கு போர்னியோ (தற்போது சபா, மலேசியா) |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | சபா மக்கள் ஐக்கிய முன்னணி (BERJAYA) (1976–1984) ஐக்கிய சபா கட்சி (PBS) (தொடக்கம் 1985) |
பிற அரசியல் தொடர்புகள் | காகாசான் ராக்யாட் (GR) (1990–1996) பாரிசான் நேசனல் (BN) (1986–1990, 2002–2018) சபா மக்கள் கூட்டணி (GRS) (தொடக்கம் 2020) |
துணைவர் | ஜெனீவ் லீ |
உறவுகள் | ஜெப்ரி கித்திங்கான் (சகோதரர்) மெக்சிமஸ் ஒங்கிலி (மருமகன்) ஜேம்ஸ் பீட்டர் ஒங்கிலி (மருமகன்) |
பிள்ளைகள் | அலெக்சாண்டர் டேனியல் |
முன்னாள் கல்லூரி | அடிலெயிட் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நிறுவனர்; முதல் தலைவர் ஐக்கிய சபா கட்சி (PBS) |
டான் ஸ்ரீ ஜோசப் பைரின் கித்திங்கான் (ஆங்கிலம்; Joseph Pairin Kitingan; மலாய்: Tan Sri Datuk Seri Panglima Joseph Pairin Kitingan) (பிறப்பு: 17 ஆகஸ்டு 1940) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; ஏப்ரல் 1985 முதல் மார்ச் 1994 வரை, மலேசியா, சபா மாநிலத்தின் 7-ஆவது முதலமைச்சராகவும்; மார்ச் 1994 முதல் மே 2018 வரை மலேசியா, சபா, கெனிங்காவ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் பணியாற்றியவர் ஆவார்.
சபாவில் நீண்ட காலம் மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகச் சேவை செய்தவர் என்றும் அறியப்படுகிறார். இவர் ஐக்கிய சபா கட்சியின் (United Sabah Party) (PBS) நிறுவனர்; தலைவர்; மற்றும் ஜெப்ரி கித்திங்கானின் சகோதரரும் ஆவார்.
ஜெப்ரி கித்திங்கான் என்பவர் தற்போது சபா மாநிலத்தின் இரண்டாம் துணை முதலமைச்சர்; சபா அமைச்சரவையில் விவசாயம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்; மற்றும் தாயக ஒற்றுமைக் கட்சியின் (Homeland Solidarity Party) (STAR) தலைவரும் ஆவார்.[1]
ஜோசப் பைரின் கித்திங்கான் சபா மாநிலத்தின் பாப்பார் நகரில் பிறந்தார். ஆனாலும் அவரின் சொந்த ஊர் தம்புனான் மாவட்டம் எனும் உள் மாவட்டத்தில் உள்ளது. தந்தையின் பெயர் டத்தோ பிரான்சிஸ் சேவியர் கித்திங்கான் சோபுனாவ் (Francis Xavier Kitingan Sobunau); ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. தாயாரின் பெயர் லூசியா லைமா இம்பாயான் (Lucia Laimah Imbayan).
அவர் கோத்தா கினபாலு தஞ்சோங் அரு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஆண்களுக்கான கத்தோலிக்க பள்ளியான லா சாலே மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அதற்கு முன், செயின்ட் டேவிட் தொடக்கப்பள்ளி, டோபோ செயின்ட் தெரசா தொடக்கப்பள்ளி, டோண்டுலு தொடக்கப் பள்ளி, பாப்பார் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படித்தார்.[2]
பின்னர் இவர் கொழும்பு திட்ட உதவித்தொகையைப் பெற்று அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார். தன் சட்டப் படிப்பை முடித்தவுடன், சபாவிற்கு வந்து சபா சட்டத்துறையில் அரசு ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் அவர் துணை அரசு வழக்கறிஞராகப் பதவி உயர்த்தப்பட்டார்.[3][4][5][6]
ஜோசப் பைரின் கித்திங்கான் 1975-இல் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். முதலமைச்சர் அரிஸ் சாலே தலைமையிலான சபா மக்கள் ஐக்கிய முன்னணி (BERJAYA) கட்சியின் கீழ், 1976-இல், தம்புனான் தொகுதிக்கான சபா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985-இல் ஆளும் கட்சியின் அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[7]
காலப்போக்கில், ஜோசப் பைரின் கித்திங்கான் பெர்ஜாயா கட்சியின் தலைமையின் மீது வெறுப்படைந்தார். மேலும் கட்சியின் சில கொள்கைகளை எதிர்த்தார். பெர்ஜாயா கட்சி அதன் அசல் போராட்டத்தில் இருந்து விலகிவிட்டதாக உணர்ந்தார். இருப்பினும், அவர் கட்சியில் உறுதியாக இருந்தார். பின்னர், அவர் 1984-இல் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
1984 டிசம்பரில், தம்புனான் இடைத்தேர்தலில், ஆளும் கட்சிக்கு எதிராகச் சுயேட்சை வேட்பாளராகத் தேர்தலில் நின்றார். அந்தத் தேர்தலில் அவர் குறிப்பிடத்தக்க பெரும்பான்மையுடன் எளிதில் வெற்றி பெற்றார். மார்ச் 1985-இல், ஐக்கிய சபா கட்சியை (Parti Bersatu Sabah) உருவாக்கினார்.
1985-ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலில், ஜோசப் பைரின் கித்திங்கானின் ஐக்கிய சபா கட்சி 48 இடங்களில் போட்டியிட்டது. 25 இடங்களில் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றது. ஜோசப் பைரின் கித்திங்கான், சபா மாநிலத்தின் ஏழாவது முதலமைச்சராகப் பதவியேற்றார். அவர் ஏப்ரல் 1985 முதல் மார்ச் 1994 வரை சபா முதல்வராகப் பதவி வகித்தார்.[8]
1994-ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலிலும், ஜோசப் பைரின் கித்திங்கானின் ஐக்கிய சபா கட்சி வெற்றி பெற்றது. இருப்பினும் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஐக்கிய சபா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய அனைத்து உறுப்பினர்களும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு கட்சி தாவினர். அதனால் ஜோசப் பைரின் கித்திங்கான் முதலமைச்சராகப் பதவியேற்க அனுமதிக்கப்படவில்லை. அம்னோவின் துன் சக்காரான் டன்டாய் சபாவின் எட்டாவது முதலமைச்சராகப் பதவியேற்றார்.