டி. சுப்பராமி ரெட்டி | |
---|---|
ஆந்திராவின் மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 10 ஏப்ரல் 2002 – 09 ஏப்ரல் 2020 | |
சுரங்கத் துறை | |
பதவியில் 2006–2008 | |
நாடாளுமன்ற உறுப்பினர் - மாநிலங்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1996 1998 2002 | |
தொகுதி | விசாகப்பட்டினம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1943 செப்டம்பர் 17 நெல்லூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பிள்ளைகள் | சந்தீப் ரெட்டி & பிங்கி ரெட்டி |
உறவினர் |
|
வாழிடம் | இந்தியா |
வேலை | அரசியல்வாதி தொழிலதிபர் திரைப்படத் தயாரிப்பளர் பரோபகாரி |
டி. சுப்பராமி ரெட்டி (T. Subbarami Reddy, பிறப்பு 17 செப்டம்பர் 1943) ஒரு இந்தியத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளரும், அறப்பணிகளை செய்து வருபவருமாவார். 1993ஆம் ஆண்டில் இவர் பகவத் கீதை என்ற சமசுகிருதத் திரைப்படத்தைத் தயாரித்தார். இது 40வது தேசிய திரைப்படப் விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான தேசியத் திரைப்பட விருதைப் பெற்றது.[1][2]
இவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருக்கிறார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மாநிலங்களவையில் ஆந்திராவை பிரதிநிதித்துவப்படுத்தினார். விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலிருந்து 1996 மற்றும் 1998 ஆண்டுகளில் இரண்டு முறை 11 மற்றும் 12 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2002இல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது முறையாகவும் தொடர்ந்து இருந்தார்.
இவர் பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராக இருந்தார். 2006 -2008க்குமிடையில் சுரங்க அமைச்சகத்தில் மாநில அமைச்சராகவும் இருந்தார்.2012 சூன் 12 அன்று, இவர் நெல்லூர் தொகுதிக்கான தேர்தலில் மேகபதி இராஜ்மோகன் ரெட்டியிடம் தோற்றார்.[3]
டி. பாபு ரெட்டி, இருக்மிணி அம்மா ஆகியோருக்கு ஆந்திராவின் நெல்லூரில் பிறந்தார். ஐதராபாத்தின் நிசாம் கல்லூரியில் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். தெலுங்குத் திரையுலகில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த இரமண ரெட்டி இவரது மாமா ஆவார். திரைப்படத் தயாரிப்பாளர் டி. பட்டாபிராம ரெட்டியும் உறவினராவார்.
இவரது மனைவி டி. இந்திரா சுப்பராமி ரெட்டி, இவர் நிறுவிய காயத்ரி ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.[4]
1967ஆம் ஆண்டில் ஆந்திராவில் அப்போதைய உலகின் மிகப் பெரிய அணையான நாகார்ஜுன சாகர் அணைத் திட்டத்தை நிர்மாணிப்பதில் இவர் செய்த பங்களிப்புக்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடமிருந்து தங்கப்பதக்கம் பெற்றார். இந்த அணையின் மண் ஒப்பந்தக்காரராக ரெட்டி இருந்தார்.
2004 முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராகவும், 1992இல் தேசிய பனோரமா விழா குழு, 1994 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில் தேசிய திரைப்பட விருது நடுவர் மன்றம், 1994இல் ஆந்திரப் பிரதேச கலாச்சார கூட்டமைப்பு ,1983-85 வரைமத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.