டி. வி. சந்திரன் | |
---|---|
பிறப்பு | 23 நவம்பர் 1950 தலச்சேரி, மலபார் மாவட்டம், சென்னை மாநிலம், இந்தியா (தற்போதைய கேரளம், இந்தியா) |
பணி | திரைப்ப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர். |
செயற்பாட்டுக் காலம் | 1975 முதல் தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ரேவதி |
பிள்ளைகள் | யாதவன் சந்திரன் |
வலைத்தளம் | |
tvchandran.com |
டி.வி.சந்திரன்(T. V. Chandran) (பிறப்பு:23 நவம்பர் 1950) திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் நடிகருமான இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படங்களில் பணிபுரிகிறார். தலச்சேரியில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்த சந்திரன், திரையுலகில் நுழைவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ஊழியராகப் பணியாற்றினார். பி. ஏ. பேக்கரின் உதவி இயக்குநராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
பேக்கரின் மிகவும் பாராட்டப்பட்ட அரசியல் நாடகமான கபானி நதி சுவண்ணப்போல் (1975) படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணன் குட்டி (1981) என்ற வெளியிடப்படாத திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ஹேமாவின் காதலர்கள் (1985) என்ற தமிழ் திரைப்படத்தில் பணியாற்றினார். லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் சிறுத்தை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அலிசிண்டே அன்வேசனம் (1989) என்ற படத்திற்குப் பிறகு சந்திரன் முக்கியத்துவம் பெற்றார். இதைத் தொடர்ந்து இவரது மிகவும் பிரபலமான படம் பொந்தன் மடா (1993) என்பது வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறார். வரலாறு, அரசியல் மற்றும் பெண்ணியத்தின் குறிப்புகளைக் கொண்ட கலைப்படங்களுக்காக சந்திரன் மிகவும் பிரபலமானவர். கதவாசேசன் (2004), விலபங்கல்கப்புரம் (2008) மற்றும் பூமியுடே அவகாசிகல் (2012) ஆகிய படங்களில் 2002 குஜராத் கலவரங்களை அடிப்படையாகக் கொண்ட தனது முத்தொகுப்புக்காகவும் அறியப்படுகிறார். மங்கம்மா (1997), டேனி (2001) மற்றும் பாதம் ஒன்னு: ஒரு விலாபம் (2003) ஆகியவை இவரது மிகவும் புகழ்பெற்ற படங்களில் அடங்கும்.
சந்திரன் இந்தியத் திரைப்படத்துறையின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். மேலும் இவரது சிக்கலான-கட்டமைக்கப்பட்ட கலைப்படங்களுடன் இணை சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர். சந்திரன் ஆறு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பத்து கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல திரைப்பட விருதுகளை வென்றுள்ளார் . இவை தவிர, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
டி. வி. சந்திரன், கேரளாவின் மலபார் மாவட்டம், (முந்தைய சென்னை மாகாணம்), தற்போதைய கண்ணூர் மாவட்டத்தில் தலச்சேரி என்ற இடத்தில் நாராயணன் மற்றும் கார்த்தாயினி அம்மா ஆகியோருக்கு பிறந்தார்.[1] இரிஞ்சாலகுடா கிறித்துவக் கல்லூரி,[2] மற்றும் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாரூக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு,[3] இவர் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ஊழியராக ஒரு தொழிலைத் தொடங்கினார்.[4] தனது கல்லூரி நாட்களில், சந்திரன் நக்சலைட்டு சித்தாந்தத்திற்கு ஆதவாக இருந்துள்ளார். மேலும் பொதுவுடைமைக் கட்சியுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்.
சந்திரனின் மகன் யாதவன் சந்திரன், சகோதரர் சோமன் ஆகியோரும் திரைப்படத் தயாரிப்பாளர்களாக உள்ளனர். யாதவன் ஆவண-படங்களை இயக்கியுள்ளார். சந்திரனுக்கு அவரது பல படங்களில் உதவியுள்ளார். சோமன் தனது முதல் படத்திலிருந்தே சந்திரனுடன் உதவியாளராக பணிபுரிகிறார்.[5][6] 1980களில் நைஜீரியாவில் இறந்த இவரது மற்ற சகோதரருடனான சந்திரனின் தொடர்பு பின்னர் சங்கரனும் மோகனனும்என்றப் படத்திற்கு உத்வேகம் அளித்தது [7]
டி. வி. சந்திரனுக்கு திரைப்பட தயாரிப்பில் முறையான பயிற்சி இல்லை.[4] பி.ஏ. பேக்கரின் கபானி நாடி சுவண்ணப்போல் (1975) என்றத் திரைப்படத்தில் நடிகராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். நெருக்கடி நிலைக் காலங்களில் வெளிவந்த இடதுசாரி அரசியல் திரைப்படமான இது கேரள மாநில திரைப்பட விருதுகளில் இரண்டாவது சிறந்த படமாக அறிவிக்கப்பட்டது. பி.ஏ. பேக்கருக்கு அறிமுக இயக்குனருக்கான சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களில் டி. வி. சந்திரன், இரவீந்திரன், ஜே. சித்திகி மற்றும் சாலினி ஆகியோர் அடங்குவர்.[8][9]