டூசுன் துவா | |
---|---|
Dusun Tua | |
ஆள்கூறுகள்: 3°8′N 101°50′E / 3.133°N 101.833°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | உலு லங்காட் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
டூசுன் துவா (ஆங்கிலம்: Dusun Tua; மலாய்: Dusun Tua; Kampung Batu 16;) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்புற நகரம் ஆகும். இந்த நகரத்தின் பெயர் மலேசியா முழுமைக்கும் நன்கு அறியப்பட்ட பெயராகும். இந்தக் கிராமப்புறத்தைச் சுற்றிலும் பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அத்துடன் இரண்டு வெப்ப நீர் குளங்களும் உள்ளன.[1][2]
இங்குதான் மலேசியாவின் இளைஞர் பயிற்சி மையம் (Institut Kemahiran Tinggi Belia Negara Dusun Tua - National Youth High Skills Institute) (IKBN) அமைந்துள்ளது. அதனால் இந்த கிராமத்தைப் பற்றி பலருக்கும் தெரியும்.
1969-ஆம் ஆண்டில், உலு லங்காட் சாலையின் 25-ஆவது கி.மீட்டர் பகுதியில்; மலேசியாவின் இளைஞர் பயிற்சி மையம் உருவாக்கப்பட்டது. இந்த மையம் 81 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1941-ஆம் ஆண்டில், இந்தப் பகுதி ஜப்பானிய இராணுவ மருத்துவமனையின் தலைமையகமாக இருந்தது. பின்னர் அது பிரித்தானிய இராணுவப் பயிற்சி மையமாகப் பயன்படுத்தப்பட்டது.[3]
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, இந்த இடம் வனக் காவல் படைக்கான பயிற்சி மையமாகவும் பயன்படுத்தப்பட்டது. 1966 ஆம் ஆண்டில், மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் தேசிய முன்னோடி இளைஞர் இயக்க மையம் என்று அறியப்பட்டது. 1969-இல் அதன் பெயர் டூசுன் துவா இளைஞர் பயிற்சி மையம் (Pusat Latihan Belia Dusun Tua) என மாற்றம் செய்யப்பட்டது. 1991-இல் மீண்டும் தேசிய இளைஞர் திறன் மையம் (National Youth Skills Institute) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது 5 துறைகளில்; அதாவது தானுந்து துறை, எந்திரதுறை, பொதுப் பொறியியல், மின்சார துறை மற்றும் மின்மவியல் துறை ஆகிய துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.