தமிழ்ப் படம் | |
---|---|
இயக்கம் | சி. எஸ். அமுதன் |
தயாரிப்பு | தயாநிதி அழகிரி |
கதை | சி. எஸ். அமுதன் சந்துரு |
இசை | கண்ணன் |
நடிப்பு | சிவா திஷா பாண்டே |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | டி. எஸ். சுரேஷ் |
கலையகம் | கிளவுட் நைன் மூவீஸ் |
விநியோகம் | வை நொட் ஸ்டூடியோஸ் |
வெளியீடு | 29 சனவரி 2010 |
ஓட்டம் | 160 நிமி. |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | $1 மில். |
மொத்த வருவாய் | $3 மில். |
தமிழ்ப் படம் 2010 ஆம் ஆண்டில் வெளியான பகடித் திரைப்படம். தயாநிதி அழகிரியின் "கிளவுட் நைன் மூவீஸ்" நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் இத்திரைப்படத்தை சி. எஸ். அமுதன் இயக்கியிருந்தார். சிவா கதாநாயகனாகவும், திஷா பாண்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நகைச்சுவைப் படமான இதில் வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம். எஸ். பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோரும் நடித்தனர். கண்ணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.[1][2][3]
கிராமத்தில் ஆண் குழந்தை யார் வீட்டில் பிறந்தாலும் அதைக் கள்ளிப்பால் தந்து கொன்று விடவேண்டும் என்பது பஞ்சாயத்துத் தீர்ப்பு. அதை மீறுபவர்கள் ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்படுவார்கள். அவர்களோடு தொடர்பு வைத்தால், அந்த நடிகரின் படத்தை நூறு முறை பார்ப்பது தான் தண்டனையாம். இப்படித் துவங்குகிறது படம். ‘கருத்தம்மா’ பெரியார்தாசன் (இதில் அவர் பெயர் மொக்கை) தனக்குப் பிறக்கும் ஆண் குழந்தையைக் கொன்றுவிட பரவை முனியம்மாவுக்குக் கட்டளையிட, பிறந்த குழந்தையின் வேண்டுகோள்படி குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிவிடுகிறார். குழந்தை சிறுவனாக இருக்கும்போது சந்தையில் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்க விரும்புகிறான். பாட்டி முனியாம்மாவோ அவனுக்கு பத்து வயதுதான் ஆகிறது என்று சொல்ல, சிறுவன் நான் எப்படிப் பெரியவனா ஆகிறது? என்று கேட்கிறான். பாட்டி சொல்கிறாள், “நீ போய் அந்த சைக்கிள் பெடலைச் சுற்று!”