திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில் | |
---|---|
![]() திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில் | |
பெயர் | |
பெயர்: | திருப்போரூர் கந்தசாமி திருக்கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | செங்கல்பட்டு மாவட்டம் |
அமைவு: | திருப்போரூர் |
ஆள்கூறுகள்: | 12°43′31″N 80°11′20″E / 12.72528°N 80.18889°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | பல்லவர் கட்டிடக்கலை |
இணையதளம்: | www |
திருப்போரூா் கந்தசுவாமி கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும் ஒரு முருகன் கோயில் ஆகும். இக்கோயில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.[1][2][3]
திருப்போரூா் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியில் திருப்போரூா் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் "புனிதப் போரின் இடம்" என்பது ஆகும்.
இன்று இங்குள்ள கோயிலும் குளமும் முந்நூறு வருஷங்களுக்குள் உருவானவைதான். என்றாலும் இந்த இடத்தில் ஒரு பழைய முருகன் கோயில் இருந்திருக்க வேண்டும் எனப்படுகிறது. பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்தக் கோயில் எழுந்ததாக வரலாறு உள்ளது. பதின்மூன்றாவது நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டில், இவ்வூர் தொண்டை நாட்டில் ஆமூர் கோட்டத்தில் உள்ள ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று குறித்திருக்கிறது.
விக்கிரம சோழன் ஏற்படுத்திய நிவந்தங்களையும், விஜய கண்டதேவர் நந்தா விளக்குக்காகப் பொன் கொடுத்ததையும் அறிவிக்கும் கல்வெட்டுகள் எல்லாம் இங்குள்ள தெய்வயானையார் கோயில் சுவர்களில் சிதைந்து காணப்படுகின்றன. இவைகளே இக்கோயில் பழமையானது என்பதற்குச் சான்றுகள்.
இந்த ஊருக்கு அந்த நாளிலே சமரபுரி என்ற பெயரும் இருந்திருக்கிறது. இந்தக் கோயிலை விட, இங்குள்ள முருகனைப் பற்றிச் சிதம்பர சுவாமிகள் பாடிய 'திருப்போரூர் சந்நிதி முறை' என்ற பிரபந்தம் சிறந்த இலக்கியப் பிரசித்தி உடையது. இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்தவரும் அவரே.
கந்த புராணக் கூற்றுப்படி முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம்,திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக நம்பப்படுகிறது.
பின்பு பல நாட்களாக இத்தலம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. திருக்கோவில் வரலாற்றுப்படி, முருகப்பெருமான் மதுரை மாநகரிலிருந்த சிதம்பரம் அடிகளாரின் கனவில் தோன்றியதாகவும், தான் திருப்போரிலுள்ள பனை மரத்தினடியில் கேட்பாரற்று இருப்பதாக கூறி மறைந்ததாகவும், கடவுள் உரைத்தபடியே சிதம்பரம் அடிகளார் திருப்போரூர் வந்தடைந்து முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுத்து திருக்கோவில் அமைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.[4]
கருவறையில் உள்ள முருகன் கிழக்கு நோக்கியிருந்தாலும் கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இந்த வாயிலைக் கடந்து, வெளிப் பிராகாரத்தில் உள்ள கோபுர வாயிலையும் கடந்தே முருகன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும் . மூல மூர்த்தி பனையடியில் புதைந்திருக்கிறார். ஆதலால் புற்றிடங் கொண்ட அந்தப் பெருமானுக்கும் அவன் துணைவியாருக்கும் புனுகுச் சட்டமே சாத்தி அலங்கரிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது, உருவங்களும் மொழு மொழு வென்றே இருக்கும்.
இந்த மூல மூர்த்திகளுக்கு முன்னால் மிகச் சிறிய வள்ளி தெய்வயானை சமேதனாகக் கந்தனை உருவாக்கி நிறுத்தி யிருக்கிறார்கள். இந்தக் கந்தன் கரங்களிலே உடம்பிடி, குலிசை முதலிய ஆயுதங்கள் இல்லை. தூக்கிய திருக்கரங்களிலே ஜபமாலையும் கமண்டலமுமே காணப்படுகின்றன. இங்குள்ள முருகன், பிரணவப் பொருள் அறியாத பிரமனைச் சிறையில் அடைத்த பின், தானே சிருஷ்டித் தொழிலை மேற்கொண்டிருக்கிறான்.
இங்கே வள்ளியையும் தெய்வயானையையும் உடன் உள்ளனர் என்றாலும், அவர்களுக்குத் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. இக் கோயிலில் இருபத்து நாலு தூண்களோடு கூடிய ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. ஒவ்வொரு தூணிலும் ஒரு கையில் கேடயமும், ஒரு கையில் வாளும் உடைய நவவீரர் முதலியோரது உருவங்கள் உண்டு. இது போர் ஊர் அல்லவா? சூரபதுமனின் துணைவர்களான அசுரர்கள் போருக்கு எழுந்த போது, அவர்களை இங்குதான் சமர் புரிந்து வென்றார் என்பதுதானே வரலாறு. ஆகையால் சமரபுரி முருகன் சந்நிதியில் இவ்வீரர்களை யெல்லாம் உருவாக்கி நிறுத்தியிருக்கின்றனர்.
[1] பரணிடப்பட்டது 2014-04-24 at the வந்தவழி இயந்திரம்