துன் துன்

துன் துன்
பிறப்புஉமா தேவி
(1923-07-11)11 சூலை 1923
ஐக்கிய மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு24 நவம்பர் 2003(2003-11-24) (அகவை 80)
மும்பை, இந்தியா
பணிபாடகர்
நடிகை-நகைச்சுவை நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1946–1990

துன் துன் ( Tun Tun )[1] (11 ஜூலை 1923-24 நவம்பர் 2003)[2] என்பது இந்திய பின்னணி பாடகியும், நடிகையும் மற்றும் நகைச்சுவை நடிகையுமான உமா தேவி என்பவரின் திரைப்பெயர் ஆகும். இவர் “இந்தித் திரைப்படங்களின் முதல் நகைச்சுவை நடிகை” என்று அழைக்கப்பட்டார்.[2]

இளமைப்பருவம்

[தொகு]

உமா 1923 இல் இந்தியாவின் தற்போதைய உத்தரப் பிரதேசத்தின் அம்ரோகா மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோரும் சகோதரரும் நிலம் சம்பந்தமான தகராறில் கொலை செய்யப்பட்டனர். அபோது இவருக்கு இரண்டரை வயதே ஆகியிருந்தது. பின்னர் தனது உறவினர்களிடம் பணிப்பெண்ணாக வளர்ந்தார்.

உமா தேவியின் குழந்தைப் பருவம் ஏழ்மையில் இருந்தது. பின்னர் இவர் கலால் வரி ஆய்வாளரான அக்தர் அப்பாஸ் காசி என்பவரைச் சந்தித்தார். அவர் இவருக்கு உதவியும் ஊக்கமும் அளித்தார். இந்தியப் பிரிப்பின் போது, காசி பாக்கித்தானின் இலாகூருக்கு குடிபெயர்ந்தார். இந்தச் சூழ்நிலையில் உமா தேவி, திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்புத் தேடி மும்பை வந்தார். காசியும் இறுதியில் மும்பை வந்து சேர்ந்து கொண்டார். அங்கு இவர்கள் 1947 இல் திருமணம் செய்துகொண்டனர்.

தொழில்

[தொகு]

உமா 23 வயதில் இசையமைப்பாளர் நௌசாத்திடம் பாடுவதற்கு வாய்ப்புக் கேட்டார். அவர் நசீரின் இயக்கத்தில் வெளியான வாமிக் அஸ்ரா (1946) படத்தில் தனிப் பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்தார்.[3][4] தயாரிப்பாளர்-இயக்குநர் ஏ. ஆர். கர்தாருடன் பணி செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கர்தார் தனது படங்களில் நௌசாத்தை இசையமைப்பாளராகப் பயன்படுத்தினார். உமாதேவி நூர்ஜஹான், ராஜ்குமாரி துபே, குர்சித் பானு மற்றும் சோராபாய் அம்பலேவாலி போன்ற பாடகிகளுக்கு மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

1947 ஆம் ஆண்டில், கர்தாரின் தார்த் (1947) படத்தில் இடம்பெற்ற நடிகை முனாவர் சுல்தானாவுக்காக இவர் பாடிய "அஃப்சானா லிக் ரஹி ஹூன் தில்-இ-பேகாரர் கா", "யே கவுன் சலா மேரி ஆன்கோன் மே சமா கர்" மற்றும் "ஆஜ் மச்சி ஹை தூம் ஜூம் குஷி சே ஜூம்" போன்ற பாடல்கள் மூலம் பெரும் புகழ் பெற்றார். பின்னர் மீண்டும் நௌசாத்தின் இசை இயக்கத்தில், சுரையாவுடன் சேர்ந்து "பேதாப் ஹை தில் தர்த்-இ-மொஹபத் கே அசர் சே" என்ற ஒரு பாடலையும் பாடினார்.[5]

நடிப்பு

[தொகு]

சென்னை, ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த இயக்குநர் சுப்பிரமணியம் சீனிவாசன் என்கிற எஸ். எஸ். வாசனின் சந்திரலேகாவில் (1948) பாடகியாக உச்சத்தை எட்டினார்.[4] "சாஞ்ச் கி பேலா" போன்ற வெற்றிப் பாடல்களை உள்ளடக்கிய இவரது ஏழு பாடல்கள் இவரது பாடும் வாழ்க்கையில் அவரது மிகச் சிறந்த படைப்பாகவே இருந்து வருகின்றன. இருப்பினும் திரைப்படத்தில் நடிக்க கையெழுத்திட்டது தயாரிப்பாளர்-இயக்குநர் கர்தார் உடனான ஒப்பந்தத்தை மீறியது போன்ற செய்கையால் தொழில்துறையில் இவரது செல்வாக்கு வீழ்ச்சியடைய வழிவகுத்தது.

மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில், இவரது பழைய பாடும் பாணி மற்றும் குறைந்த குரல் வரம்பு காரணமாக, இவர் வளர்ந்து வரும் பாடும் நட்சத்திரங்களான லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே ஆகியோருடன் போட்டியிடுவது கடினமாக இருந்தது. இறுதியில், நௌசாத் இவரை நடிப்பைத் தேர்தெடுக்கும்படி பரிந்துரைத்தார், ஏனெனில் இவர் மிகவும் பருமனாக ஒரு நகைச்சுவை தோற்றத்தைக் கொண்டிருந்தார். இவரது தோற்றத்தைக் கண்ட திலிப் குமார் தனது முதல் படத்திலேயே இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினர். நர்கிசு முன்னணி வேடத்தில் நடித்த பாபுல் (1950) படத்தில் இவரது உருவத்திற்கு ஏற்ற ஒரு பாத்திரத்தை வழங்கினார். மேலும் இவருக்கு "துன் துன்" என்றும் மறுபெயரிட்டார்.[6] இந்தப் பெயர் இவருடன் கடைசிவரை நிலைத்து நின்றது.

பின்னர், இவர் குரு தத்தின் திரைப்படங்களான ஆர் பார் (1954), மிஸ்டர் & மிஸஸ் '55 (1955) மற்றும் பியாசா (1957) ஆகியவற்றில் நடித்தார்.[7] 1960கள் மற்றும் 1970களில், இவர் பல பாலிவுட் படங்களில் நிரந்தர நகைச்சுவை நடைகையாக இருந்தார்; சில வருடங்கள் கழித்து, இவர் மிக முக்கியமாக அமிதாப் பச்சனுடன் நமக் ஹலால் (1982), பிரகாஷ் மெஹ்ரா போன்ற படங்களில் நடித்தார்.[3]

ஐந்து தசாப்தங்கள் நீடித்த இவரது திரை வாழ்க்கையில், இவர் இந்தி/உருது மற்றும் பஞ்சாபி போன்ற பிற மொழிகளில் சுமார் 198 படங்களில் நடித்தார். தனது காலத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர்களான பகவான் தாதா, ஆகா, சுந்தர், முக்ரி, துமால், ஜானி வாக்கர் மற்றும் கெஷ்டோ முகர்ஜி ஆகியோருடனும் இணைந்து நடித்தார். இவர் கடைசியாக கசம் தண்டே கி (1990) என்ற இந்தி படங்களில் தோன்றினார்.

இவரது பிரபலத்தின் காரணமாக, துன் துன் என்ற பெயர் இந்தியாவில் பருமனான பெண்களுக்கு ஒத்ததாகிவிட்டது.

இரண்டாவது திருமணம்

[தொகு]

புது தில்லியைச் சேர்ந்த மோகன் என்பவர் இவரது பாடலால் மிகவும் ஈர்க்கப்பட்டார். இவர்கள் இருவரும் மும்பையில் திருமணம் செய்து கொண்டனர், தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர். இவரது கணவர் மோகன் 1992 இல் இறந்தார்.[8]

இறப்பு

[தொகு]

நீடித்த நோய்க்குப் பிறகு, இவர் 23 நவம்பர் 2003 அன்று மும்பையின் அந்தேரியில் தனது 80 வயதில் இறந்தார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ...THE DEATH OF ACTRESS TUN TUN Press Release, Ministry of Information & Broadcasting, 25 November 2003.
  2. 2.0 2.1 Pandya, Haresh (2004-01-08). "Obituary: Tun Tun" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/news/2004/jan/08/guardianobituaries.india. 
  3. 3.0 3.1 Obituary: Uma Devi The Independent (London), 17 December 2003.
  4. 4.0 4.1 Obituary – Tun Tun தி கார்டியன், 8 January 2004.
  5. யூடியூபில் "Afsana Likh Rahi Hoon"
  6. Kaur, Devinder Bir (7 December 2003). "Hindi cinema's first-ever comedienne". Spectrum. The Tribune. Archived from the original on 2003-12-22.
  7. Unfair fun The Tribune, 27 August 2006.
  8. Tun Tun (Uma Devi)—a tribute பரணிடப்பட்டது 28 மார்ச்சு 2008 at the வந்தவழி இயந்திரம் The Tribune, 13 December 2003.
  9. Tun Tun பரணிடப்பட்டது 30 நவம்பர் 2020 at the வந்தவழி இயந்திரம் lifeinlegacy.com.

வெளி இணைப்புகள்

[தொகு]