தெபே நாரேஞ்சு, தெபபே-இ நரேஞ்சு, ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு அருகிலுள்ள ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு புத்த மடாலயத்தின் எச்சங்களுக்கான தொல்பொருள் களமாகும். ஜாபர் பைமான் (ஆங்கிலம்: Zafar Paiman) தலைமையில் இந்த இடம் அகழப்பட்டுள்ளது. [1]
புத்த துறவியான சாங்சங் (ஆங்கிலம்: Xuanzang) ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து திரும்பும் போது மடாலயத்திற்கு வருகை தந்தார். மேற்கு வட்டாரங்களின் தலைசிறந்த டாங் பதிவுகள் (ஆங்கிலம்: Great Tang Records on the Western Regions) என்ற தனது படைப்பில் அந்தப் பகுதியின் புவியியல் மற்றும் கலாச்சாரத்தை ஆவணப்படுத்தினார். [2] கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் படிமங்கள், அப்பகுதியில் தாந்த்ரீக பௌத்தத்தின் (ஆங்கிலம்: Tantric Buddhism) செயல்பாடுகளை நிரூபிக்கிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படைகள் மடத்தை அழித்ததாகவும், சோவியத்-ஆப்கான் போரைத் தொடர்ந்து மோதலுக்குப் பிந்தைய அகழ்வாராய்ச்சிகள் வரை மறக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஆங்கிலம்: Afghan Archaeological Research Institute) மற்றும் ஜப்பானின் கலாச்சார பண்புகளுக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (ஆங்கிலம்: Japan's National Research Institute for Cultural Properties) இணைந்து நடத்திய கூட்டு ஆய்வின் மூலம் களத்திற்கான அடித்தளங்கள் (ஆங்கிலம்: Foundations for the site) கண்டறியப்பட்டன.
இத்தளம் ஒரு மலையை ஒட்டி அமைந்துள்ளது. இது 250 மீட்டர் நீளம் கொண்டது. [3] காபூலுக்கு தெற்கே, கோல்-இ ஹெஷ்மத்கான் ஏரிக்கு தெற்கே அமைந்துள்ளது. நவீன காவல் நிலையத்தின் அடிமட்டத்தில் கண்டறியப்பட்டது. இந்த மடாலயம் தியானத்திற்காக ஐந்து சிறிய தூபிகளையும் ஐந்து சிறு மடாலய அறைகளையும் கொண்டுள்ளது. 2005 [4] ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு கோடைகாலத்திலும் ஆப்கானிஸ்தான் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஒரு மாதத்திற்கு அந்த இடத்தில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி செய்து வருகிறது. இந்த களம் 2008 ஆம் ஆண்டு இன்னலில் உள்ள முதல் 100 களங்களில் பட்டியலிடப்பட்டது.
குஷானர்கள் முதல் இந்து ஷாஹிகள் வரையிலான நாணயங்கள் அந்த இடத்தில் கண்டறியப்பட்டன. [5]
களத்தில் உள்ள பொருள் மற்றும் தளம் திறந்த வெளியாய் உள்ளதால், இது அரிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளது. இக்களத்தில் காணப்படும் சிற்பம் "களிமண் பூசிய துணியால் (ஆங்கிலம்: clay overlaid with fabric) மூடப்பட்டு குழைகாரை (ஆங்கிலம்: Stucco) பூசப்பட்டிருக்கும்". [6]
அண்மைய அரசியல் நிகழ்வுகள், கொள்ளையடிப்பவர்களால் ஏற்படும் சேதம், ஆயுத மோதல்கள் மற்றும் போதுமான நிர்வாகமின்மை ஆகிய காரணிகளால் இக்களம் தொடர்ந்து மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டுள்ளது.