தைவானில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy in Taiwan) வளங்களைப் பயன்படுத்தி 2013 ஆம் ஆண்டு முடிவில் மொத்த தேசிய மின் உற்பத்தியில் 8.7% மின்சாரம் நாட்டிற்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது[1]. 2013 ஆம் ஆண்டின் இறுதியில் தைவானில் நிறுவப்பட்ட மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 3.76 ஜிகா வாட் ஆகும்.[2][3]
நவம்பர் 2003 ஆம் ஆண்டில் , புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள தைவான் அரசாங்கம் விலைக்கு உத்தரவாதம் அளித்தது[4] மேலும் 2009 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுச் சட்டமும் இயற்றியது. நிறுவப்பட்டுள்ள மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 9.95 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது[3] . சூரிய ஒளி, கடல் அலை, நீர் ஆற்றல், உயிர்த்திரள் போன்ற மூலங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட விலை நிர்ணயம் பொருந்தும்.
பைங்குடில் வளிமம் குறைத்தல் மற்றும் மேலாண்மை என்னும் புதியச் சட்டத்திற்கு, 2015 ஆம் ஆண்டு சூன் 15 இல் தைவானின் ஓரவை முறைமை பின்னேற்பு வழங்கியது. மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியிலான அடிப்படை நடவடிக்கைகளை அரசு வழங்கும் என்று 2015 ஆம் ஆண்டு சூலை முதல் நாளில் குடியரசுத்தலைவர் மா இங் சியோ பிரகடனம் செய்தார். சரக்கு, பதிவு, ஆய்வு, மேலாண்மை, திறன் தரங்கள் மற்றும் மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகம் கட்டுப்பாட்டு இலக்குடன் படிப்படியான செயல்முறை என்ற முறையில் அளவீட்டு நடவடிக்கைகள் ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்[5].
1905 ஆம் ஆண்டு சப்பானிய ஆட்சிக் காலத்தில், தைவான் நாட்டில் முதல் நீர்மின் ஆலை தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்வைத்து நாட்டில் பெரிய நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கான திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை. இதனால் தொடர்ந்து சிறு நீர்மின் சக்தி உற்பத்தி நிலையங்களே கட்டப்படும் போக்கு தொடர்ந்தது. 1995 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பொருளாதார விவகாரங்கள் அமைச்சகத்தின் தாய்லாந்து ஆற்றல் மற்றும் நீர் மேலாண்மை நிறுவனம், தைவானின் நீர்மின் ஆற்றல் திறன் தொடர்பான ஆய்வை நிறைவு செய்து உறுதிபடுத்தியது. 11730 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியங்கள் நாட்டில் இருந்தாலும் 5000 மெகாவாட் மின்சரமே உற்பத்தி செய்யப்படுகிறது என்ற முடிவை மேற்கண்ட ஆய்வு தெரிவித்தது. 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக நீர்மின் ஆலை மூலமாகக் கிடைக்கும் மின் உற்பத்தியின் அளவும் குறைந்து விட்டது.[6]
2005 ஆம் ஆண்டு இறுதியில், தைவான் நாட்டின் மொத்த நீர் மின் உற்பத்தி திறன் அளவு 4,539.9 மெகாவாட் ஆகும். இதில் 2,602 மெகாவாட் அளவு மின்சாரம் உந்தப்பட்ட-சேமிப்பு நீர் மின்சார கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரமாகும்.
தைவான் நாட்டின் மிகப்பெரிய நீர் மின் சக்தி உற்பத்தி நிலையம் 1995 இல் திறக்கப்பட்ட மிங்டன் உந்தப்பட்ட-சேமிப்பு நீர் மின்சார உற்பத்தி நிலையமாகும். இந்த ஆலை, நாண்டௌ மாவட்டத்திலுள்ள சுயிலி நகரியத்தில் அமைந்துள்ளது. 1602 மெகாவட் திறன் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய உந்தப்பட்ட-சேமிப்பு நீரை கிடங்கில் வைத்து செயல்படும் திறன் கொண்டது ஆகும்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தைவானின் சூவொயிங் மாவட்டத்தில் கௌசியுங் நகரத்தில் தேசிய விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது. இவ்வரங்கம் ஓர் ஒளி மின்னழுத்த மின் உற்பத்தி நிலையமாகவும் செயல்பட்டது. இவ்வமைப்பில் 141 சூரியவொளித் தகடுகள் பொருத்தப்பட்டு 1 மெகாவாட் மின் உற்பத்திதிறன் உற்பத்தியாகுமாறு நிறுவப்பட்டிருந்தது[7]. 2013 இல் தைவானின் சூரிய ஒளி ஆற்றல் அளவு 14 சதவீதம் ஆகும்.