நந்தினி ஸ்ரீகர் | |
---|---|
பிறப்பு | 10 ஆகத்து 1969[1] ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் |
இசைத்துறையில் | 1997 – தற்போது வரை |
நந்தினி ஸ்ரீகர் ( Nandini Srikar ) (பிறப்பு 10 ஆகஸ்ட் 1969) ஒரு இந்தியப் பாடகியும், கலைஞரும் ஆவார்.[2] பாலிவுட்டின் ஷாங்காய் திரைப்படத்தில் இடம் பெற்ற ஜோ பேஜி தி துவா, ரா.வன் படத்தின் "பரே நைனா" மற்றும் றெக்க படத்தில் இடம் பெற்ற "கண்ணம்மா" ஆகியவை இவரது பிரபலமான பாடல்களில் அடங்கும்.
இவர் இந்தியாவின் ஐதராபாத்தில் பிறந்து அங்கேயே தனது கல்வியைக் கற்றார். இவரது தாயார், சகுந்தலா செல்லப்பா, ஒரு கர்நாடக இசை பாடகரும், இந்துஸ்தானி சித்தார் கலைஞரும் ஆவார். குழந்தையாக இருக்கும்போதே பாரம்பரிய இசையை பயின்றார், மூன்று வயதில் வீணை வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் சித்தார் மற்றும் கித்தார் மற்றும் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். உசுமானியா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலைப் பட்டமும், தகவல் அமைப்பு மேலாண்மையில் பட்டமும் பெற்றார்.
நந்தினி பட்டப்படிப்பு முடிந்து புனேவில் பென்பொருள் துறையில் துறையில் பணியாற்றினார். முதலில் தொழில்முறை இசைக்கலைஞராகும் எண்ணம் இல்லாமல் இருந்தார்.
1997 ஆம் ஆண்டில், பின்னணிப் பாடகர் ஹரிஹரன் இவரது பாடலைக் கேட்டு, இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் உயிரோடு உயிராக திரைப்படத்தில் பாடுவதற்கு பரிந்துரைத்தார்.[3] இப்படத்தில், கிருஷ்ணகுமார் குன்னத்துடன் சேர்ந்து "ஐ லவ் யூ" என்ற பாடலை பாடினார். அந்த பாடல் வெற்றி பெற்றது.[4] பின்னர் தனது வேலையை விட்டுவிட்டு இசையில் கவனம் செலுத்தினார். ரஞ்சித் பரோட், திரிலோக் குர்து மற்றும் வாலி படாரூ ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். விளம்பரத்திற்கான பாடல்களையும் எழுத ஆரம்பித்தார். 2001 இல், மஹ்மூத் கானின் பனா என்ற இசைத் தொகுப்பில் தோன்றினார்.[1]
2008 ஆம் ஆண்டில், துரோணாவின் பாடல்களுக்கான குரல் அமைப்பு மற்றும் இசையமைப்புடன் இசையமைப்பாளர் துருவ் கானேகருடன் இணைந்து பணியாற்றினார். இவரது முதல் தனி இசைத் தொகுப்பான பீட் பால் 2011 இல் வெளியிடப்பட்டது. அதில் இவர் அனைத்து பாடல்களையும் இசையமைத்து, நிரலாக்கம் செய்து, தயாரித்து நடித்திருந்தார்.[3]
2016 ஆம் ஆண்டில், ஒரு பாக்கித்தானின் ஹிஜ்ரத் படத்திலும் பணியாற்றினார். அதில் "சலி ரே சலி" என்ற குத்துப் பாடலைப் பாடினார். பிரபலமான பாக்கித்தானின் நடிகை சனா நவாஸ் அந்த பாடலில் தோன்றினார்.[5]