பன்னாட்டு நச்சுயியல் சங்கம் (International Society on Toxinology) என்பது நச்சுயியல் சார்ந்த பன்னாட்டு விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ உலக சமூகத்தினரின் அமைப்பாகும். இவர்கள் நஞ்சு மற்றும் நச்சுபொருள் குறித்த ஆய்வினை மேற்கொள்பவர்கள் ஆவார். விலங்கு, தாவர மற்றும் நுண்ணுயிர் விடங்கள் மற்றும் நச்சுப்பொருட்கள் பற்றிய அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இச் சங்கம் 1962இல் நிறுவப்பட்டது.[1]
1664ஆம் ஆண்டில் ஒரு இத்தாலியப் பல்துறை அறிஞர் ஃபிரான்செஸ்கோ ரெடி தனது முதல் நூலான ஒஸ்ஸர்வாஜியோனி இன்டர்னோ அலே வைப்பர் (விரியன் பாம்புகள் பற்றிய அவதானிப்புகள்) எழுதினார். இதில் இவர் பாம்புக் கடி மற்றும் விரியன் பாம்பின் விசத்தின் விஞ்ஞான அடிப்படையை முதலில் தெளிவுபடுத்தினார். விசம் பாம்பின் மாற்றியமைக்கப்பட்ட உமிழ்நீர்ச் சுரப்பியிலிருந்து விசப்பல் வழியாக வெளியாகிறது என்றும், இந்த விசம் இரத்த ஓட்டத்தில் கலக்கும் போது ஆபத்தினை விளைவிக்கும் என்று கூறினார்.[2] காயத்திற்கு முன் இறுக்கமான தசைநார் மூலம் கட்டும்போது இரத்தத்தில் விசம் கலக்கும் செயல் குறைகிறது என்பதையும் அவர் நிகழ்த்திக் காட்டினார். இந்த ஆய்வுகளே நச்சுயியல் ஒரு தனித்துறையாகத் துவங்க ஆதாரமாக அமைந்தது.[3]
1962ஆம் ஆண்டில், நச்சுயியலில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்த விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் குழு பன்னாட்டுச் சங்கத்தினைத் தோற்றுவிக்க இணைந்தனர். இச்சங்கம் முதல் பன்னாட்டுச் சந்திப்பை 1966இல் அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரில் நடத்தியது. பின்ட்லே ஈ. ரசல்சு இச்சங்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்தார்.[1][4]
நச்சுகள் மற்றும் நச்சு எதிர் பொருட்களின் பண்புகள் குறித்த அறிவை மேம்படுத்துவதும், இந்த துறையில் ஆர்வமுள்ள அறிஞர்களை ஒன்றிணைப்பது இந்தச் சங்கத்தின் நோக்கமாகும். நச்சுயியலில் சிறப்பான ஆய்வுகளைக் கட்டுரைகளாக வெளியிட்டவர்கள் இச்சங்கத்தில் உறுப்பினராக முழுத்தகுதி உடையவர்கள் ஆவார்கள். அதே நேரத்தில் உறுப்பினர் பதவிக்குத் தகுதி இல்லாத ஆனால் நச்சுயியல் துறையில் ஆர்வமுள்ள நபர்கள் இணை உறுப்பினர்களாகத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். மாணவர் உறுப்பினர்களும் உள்ளனர். இந்தச் சங்கத்தின் பிரிவுகள் (ஐரோப்பா, பான்-அமெரிக்கன், ஆசியா-பசிபிக்) சங்கத்தின் உலக மாநாடுகள் மற்றும் நச்சுயியல் ஆராய்ச்சியின் முடிவுகளைப் பரிமாற்றம் செய்வதற்கும் தொடர்ந்து கூட்டங்களை ஏற்பாடு செய்கின்றன. சங்கத்தின் பொறுப்பாளர்கள், தலைவர் மற்றும் செயலாளர்-பொருளாளர், ஒரு குழுவின் உதவியுடன் செயல்படுகின்றனர். இவர்கள் அனைவரும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[1]
நச்சுயியல் துறையில் சிறப்பான பணிகளைச் செய்யும் அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களை கெளரவிப்பதற்காக ரெடி விருதை இச்சங்கம் நிறுவியது. நச்சுயியலில் உலகின் மிக மதிப்புமிக்க விருது இதுவாகும். 1967 முதல் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த சங்க கூட்டத்தின் போது விருது வழங்கப்படுகிறது.[2] [5]
2008 டிசம்பரில் வியட்நாமில் நடந்த ஆசிய-பசிபிக் பிரிவு மாநாட்டில், பன்னாட்டு நச்சுயியல் சங்கத்தின் உத்தியோக பூர்வ முன்முயற்சியாக உலகளாவிய பாம்புக்கடி முறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் டேவிட் வாரல் (ரெடி விருது 2012 பெறுநர்) முன்வைத்தார். இது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மார்ச் 2009இல் பிரேசிலின் ரெசிஃபில் நடந்த உலக மாநாட்டில் உறுதிப்படுத்தப்பட்டது. புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களில் ஒன்றாகப் பாம்புக் கடித்தல் குறித்த உலக சுகாதார அமைப்பின் திட்டத்தைப் பின்பற்றுவதே உலக பாம்புக்கடி விழிப்புணர்வின் முன்முயற்சியாகும்.[6]
டாக்ஸிகான் என்பது இந்த சங்கத்தின் சார்பில் வெளிவரும் அதிகாரப்பூர்வ ஆய்விதழ் ஆகும். இது 1963இல் தொடங்கப்பட்டது. இப்போது எல்செவியர் வெளியீட்டு நிறுவனத்தினால் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது.[7][8]