பர்வேசு சாகிப் சிங் | |
---|---|
![]() | |
உறுப்பினர்-தில்லி சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 பிப்ரவரி 2025 | |
முன்னையவர் | அரவிந்த் கெஜ்ரிவால் |
தொகுதி | புது தில்லி |
பதவியில் 2013–2014 | |
முன்னையவர் | யோகானந் சாசுதிரி |
பின்னவர் | நரேஷ் யாதவ் |
தொகுதி | மகரவுலி |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2014–2024 | |
முன்னையவர் | மகாபால் மிசுரா |
பின்னவர் | கமல்ஜீத் செர்வாத் |
தொகுதி | மேற்கு தில்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 நவம்பர் 1977 தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுவாதி சிங் (தி. 2002) |
உறவுகள் | விக்ரம் வர்மா (மாமா) |
பிள்ளைகள் | 1 மகன், 2 மகள்கள் |
பெற்றோர் |
|
முன்னாள் மாணவர் | தில்லி பல்கலைக்கழகம் (இளங்கலை வணிகவியல்) போர் மேலாண்மை பள்ளி(முதுகலை வணிக மேலாண்மை) |
மூலம்: [1] |
பர்வேசு சாகிப் சிங் (Parvesh Sahib Singh Verma)(பிறப்பு: நவம்பர் 7, 1977) என்பவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புது தில்லி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தில்லி சட்டமன்ற உறுப்பினராக தற்பொழுது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மேற்கு தில்லியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] மேற்கு தில்லியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு முறை பணியாற்றினார். 2014ஆம் ஆண்டில், இவர் முதன்முதலில் 16 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2019ஆம் ஆண்டில் 17ஆவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தில்லி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 578,486 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பர்வேசு நாடாளுமன்றத்தின் இரண்டு உயர்மட்டக் குழுக்களான நிதிக் குழு, மதிப்பீட்டுக் குழுவில் உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகளுக்கான கூட்டுக் குழுவிலும் உறுப்பினராகப் பணியாற்றினார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராக முதல் பதவிக்காலத்தில் நகர்ப்புற மேம்பாடு குறித்த நிலைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் 2013 சட்டமன்றத் தேர்தலில் மெக்ராலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, தில்லி சட்டமன்ற சபாநாயகரான எம். பி. யோகானந்த் சாசுதிரியை தோற்கடித்தார். பர்வேசு வர்மா, தில்லியின் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகன் ஆவார்.[2][3]
பர்வேசு லக்ரா, தில்லியின் முன்னாள் முதலமைச்சரான சாகிப் சிங் வர்மாவிற்கும் சாகிப் கவுருக்கும்[3] மகனாக நவம்பர் 7, 1977 அன்று இந்து ஜாட் குடும்பத்தில் பிறந்தார். வர்மாவுக்கு ஒரு சகோதரனும் மூன்று சகோதரிகளும் உள்ளனர்.[4]
வர்மா இராதகிருஷ்ணநகரில் உள்ள தில்லி பொதுப் பள்ளியிலும், கிரோரி மால் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[3] இவர் போர் மேலாண்மைப் பள்ளியில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார். இவரது மாமா ஆசாத் சிங் வடக்கு தில்லி மாநகராட்சியின் மாநகரத் தந்தையாக இருந்தார். மேலும் 2013 சட்டமன்றத் தேர்தலில் பாஜக டிசார்பில் முண்ட்கா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.
பர்வேசு 2013 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தலில் தில்லி பாஜக தேர்தல் குழுவின் உறுப்பினராக இருந்தார்.[5]
2009 இந்தியப் பொதுத் தேர்தலில் மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வர்மா ஆர்வமாக இருந்தார். ஆனால் கட்சித் தலைவர்களிடமிருந்து அவரது கோரிக்கை பரீசிலிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட போதிலும், கட்சியால் அவருக்கு சீட்டு மறுக்கப்பட்டது.[6] மாறாக ஜனக்புரி சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஷ் மூகி மேற்கு தில்லியில் போட்டியிட்டார்.[6][7] மார்ச் 22, 2009 அன்று துவாரகாவில் நடைபெற்ற ஒரு கிராம ஊராட்சி, "பர்வேசுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜகவின் முடிவைக் கண்டித்தது.[8]
நவம்பர் 7, 2013 அன்று, 2013 சட்டமன்றத் தேர்தலுக்கான மெக்ராலி சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளராக வர்மாவை கட்சி அறிவித்தது. தெற்கு தில்லி மாநகராட்சி தந்தை சரிதா சவுத்ரி, 2008 தேர்தலில் மெக்ராலி தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட மூத்த பாஜக தலைவர் சேர் சிங் தாகர் இருவரும் இதே இடத்தில் போட்டியிட விரும்பினர். இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் வர்மா போட்டியிட எதிர்ப்புத் தெரிவித்தனர்.[9] தில்லி பாஜக தலைமையகத்திற்கு வெளியே சவுத்ரியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வர்மாவை "வெளியாட்கள்" என்று அழைத்தனர். இவரது தாயாரும் மனைவியும் இவருக்காக பிரச்சாரம் செய்தனர். இவர் ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாம் இடத்தைப் பிடித்த நரிந்தர் சிங் சேஜ்வாலை 4,564 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மேலும் தில்லி சட்டமன்ற அப்போதைய சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான யோகானந்த் சாசுதிரியையும் தோற்கடித்தார்.[10] 2014 இந்திய பொதுத் தேர்தலில், மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் வர்மா 2,68,586 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்கு தில்லியில் வர்மா இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக 5.78 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரசின் மகாபல் மிசுராவை 2,87,162 வாக்குகள் பெற்று வீழ்த்தினார்.[11]
தில்லியில் அதிக வெற்றி வித்தியாசம், இந்தியாவில் 6வது அதிகபட்ச வெற்றி வித்தியாசத்திற்கான தனது சொந்த சாதனையை வர்மா முறியடித்தார்.
2019 பொதுத் தேர்தலில், இந்தத் தொகுதியில் பதிவான மொத்த 14,41,601 வாக்குகளில் வர்மா 8,65,648 வாக்குகளைப் பெற்றார். தில்லி வரலாற்றில் எந்தவொரு மக்களவை வேட்பாளரும் இதுவரை வென்றிராத அதிகபட்ச வாக்கு வித்தியாசம் இதுவாகும்.[12][13][11][14] நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கான கூட்டுக் குழுவிலும், நகர்ப்புற மேம்பாட்டுக்கான நிலைக்குழுவிலும் உறுப்பினரானார். புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (நிர்வாகக் குழுவிலும் பணியாற்றினார். இவர் மதிப்பீட்டுக் குழு மற்றும் நாடாளுமன்ற நிதிக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
பர்வேசு 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டமன்றத் தேர்தலில் புது தில்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[15] இத்தேர்தலில் பர்வேசு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தோற்கடித்தார்.
வர்மா, முன்னாள் மத்திய அமைச்சரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவருமான விக்ரம் வர்மாவின் மகள் சுவாதி சிங்கை மணந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டு மகள்கள், ஒரு மகன். இவர்களில் மூத்தவர் சனிதி சிங். அவரைத் தொடர்ந்து பிரிசா சிங், மகன் சிவான் சிங் ஆவார். இவர் ராஷ்ட்ரிய ஸ்வாபிமான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.[16]