கருநாடக இசையில் பயின்று வரும் உருப்படிகள் பலவற்றுள் காணப்படும் உறுப்புக்களுள் பல்லவி என்பதும் ஒன்று. அனுபல்லவி, சரணம் என்பன பொதுவாகக் காணப்படும் ஏனைய இரண்டு உறுப்புக்கள். கருநாடக இசையின் உருப்படிகளான கீர்த்தனை, கிருதி, பதம், சுரசதி, சதிசுரம், வண்ணம் முதலிய இசைப் பாடல்களில் இவ்வுறுப்பு காணப்படுகிறது. [1] கருநாடக இசை உருப்படிகளில் மட்டுமின்றித் தற்காலத்தில் மெல்லிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், திரைப் பாடல்கள் போன்றவற்றிலும் பல்லவி என்னும் உறுப்பு உள்ளது. பொதுவாக மேற்குறிப்பிட்ட உருப்படிகளில் பல்லவி முதல் உறுப்பாக வரும். இதனாலேயே தமிழில் இதை எடுப்பு, முதல்நிலை, முகம் ஆகிய சொற்களால் குறிப்பிடுவர்.[2] இந்துஸ்தானி இசையில் இதை ஸ்தாயி என்பர். [3] ஓர் இசைக்கலைஞரின் கற்பனையை பல்லவி தெளிவுபடுத்தும்.
பல்லவி பாடல்களில் முதல் உறுப்பாக வரும் அதேவேளை, அனுபல்லவி, சரணம் ஆகிய உறுப்புக்களுக்குப் பின்னரும் திரும்பத் திரும்பப் பாடப்படுவது உண்டு. பல்லவி பொதுவாக ஒரு தாள வட்டணை (ஆவர்த்தம்) நீளம் கொண்டதாக இருக்கும். இரண்டு அல்லது நான்கு தாள வட்டணைகளைக் கொண்டு அமைவதும் உண்டு. பக்கவாத்தியம் வாசிப்பவர்கள், எடுத்துக்கொண்ட தாளத்தின் தன்மையை அறிந்துகொள்ள இது உதவியாக உள்ளது. பாடும்போது, பல்லவியை இரண்டு தடவைகள் அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் பாடுவதும் உண்டு.
அலைபாயுதே ... என்று தொடங்கும் கீர்த்தனையில் முதல் இரண்டு வரிகள் பல்லவி ஆகும்.
பல்லவி
அனுபல்லவி
சரணம்