பாகநாத் கோயில் | |
---|---|
பாகேசுவரில் அமைந்துள்ள பாகநாத் கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தராகண்டம் |
மாவட்டம்: | பாகேசுவர் |
அமைவு: | பாகேசுவர் |
ஏற்றம்: | 1,004 m (3,294 அடி) |
ஆள்கூறுகள்: | 29°50′12″N 79°49′21″E / 29.83667°N 79.82250°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோயில் கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | இலட்சுமி சந்த் |
பாக்நாத் கோயில் (Bagnath Temple) என்பது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான கோவிலாகும். இது சரயு ஆறும் கோமதி ஆறும் சங்கமிக்கும் பாகேசுவர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. [1] [2] பாக்நாத் கோயில் அனைத்து அளவிலான மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், சுவாரஸ்யமான செதுக்கல்களையும் கொண்டுள்ளது. இது பாகேசுவர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கோயிலாகும். இங்கு மகா சிவராத்திரி விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. [3] பாகேசுவர் நகரம் இந்த கோயிலிலிருந்து அதன் பெயரைப் பெற்றது. [4]
பாகநாத் கோயில் 29,8370 ° வடக்கிலும், 79,7725 ° கிழக்கிலும் அமைந்துள்ளது [5] .கோவிலானது உத்தராகண்டம் மாவட்டத்தில் பாகேசுவர் மாவட்டத்தின் பாகேசுவர் நகரில் அமைந்துள்ளது. இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 1004 மீ உயரத்தில் உள்ளது.
இந்துப் புராணத்தின் படி, மார்க்கண்டேயர் இங்கு சிவனை வணங்கினார். [6] சிவன் புலி வடிவத்தில் இங்கு வந்து முனிவரை ஆசீர்வதித்தார். [6]
7 ஆம் நூற்றாண்டிலிருந்து கோயிலின் இருப்பு இருப்பதாக சில ஆதாரங்கள் கூறினாலும், நாகரா பாணியில் தற்போதுள்ள கட்டிடம் 1450 ஆம் ஆண்டில் சந்த் ஆட்சியாளரான இலட்சுமி சந்த் என்பவரால் கட்டப்பட்டது. [7] கோயிலில் உள்ள பல்வேறு சிலைகள் கி.பி 7ஆம் நூற்றாண்டு முதல் கிபி 16ஆம் நூற்றாண்டு வரையிலான் காலத்தைச் சொல்கின்றன. 1996ஆம் ஆண்டில், உத்தராகண்டம் மாநில தொல்பொருள் துறை கோயிலைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, பல கல்வெட்டுகளும் சிலைகளும் பாகுகாப்பில் வைக்கப்பட்டன. சிவன், விநாயகர், விஷ்ணு, நான்முக சிவன், மும்மூர்த்தி சிவன், பஞ்சமுக சிவன், மகிசாசுரமர்தினி, ஆயிரம் சிவலிங்கங்கள், முருகன், பஞ்சதேவபத், நவகிரகங்கள் போன்ற சிலைகளும் இதில் அடங்கும்.
கோயிலின் முக்கியத்துவம் கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து யாத்ரீகர்கள் இங்கு வழிபடுவதற்காக ஆண்டு முழுவதும் வருகை தருகிறார்கள். நகரத்தில், குற்றங்களைத் தடுப்பதற்காக கோயிலின் வளாகத்தில் 19 செப்டம்பர் 2016 அன்று ஒரு காவல் நிலையம் திறக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தில் மகர சங்கராந்தியை முன்னிட்டு உத்தராயணி திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. [8] [9] திருவிழாவின் மதச் சடங்கு சங்கமத்தில் பகல் நேரத்திற்கு முன்பு பக்தர்கள் புனித நீராடுவது வழக்கமாகும். [10] [11] பிறகு, கோவிலுக்குள் சிவபெருமானுக்கு அபிசேகம் நடைபெறும். அதிக மதரீதியான மனப்பான்மை உடையவர்கள், "திரிமாகி" என்று அழைக்கப்படும் இந்த நடைமுறையை மூன்று நாட்கள் அடுத்தடுத்து தொடர்கிறார்கள்.