பாக்கா; (ஆங்கிலம்: Paka; மலாய்: Paka) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், டுங்குன் மாவட்டத்தில் (Dungun District) உள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து தெற்கில் 134 கி.மீ.; கோலா டுங்குன் (Kuala Dungun) நகரில் இருந்து 22 கி.மீ. தெற்கில் உள்ளது.[2]
இந்த கிராமப்புற நகரம் தென் சீனக் கடல் கரையோரத்தில் கெர்த்தே நகரத்திற்கு வடக்கில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய மீன்பிடி கிராமம் ஆகும். கடற்கரை மட்டும் இல்லாமல் இருந்தால்; மர வீடுகள், ஒரு படகு துறை மற்றும் சில மீன்பிடி படகுகளைக் கொண்ட ஒரு பொதுவான மீன்பிடி கிராமமாகவே இருந்து இருக்கும்.[3]
ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. அருகில் இருக்கும் கெர்த்தே நகரின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடுகளினால் (Natural Gas Activity) பாக்கா கிராமம் துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது.
இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் (World Wide Fund for Nature) (WWF) ஆமைகள் சரணாலயம் (WWF Turtle Sanctuary Paka) பக்காவிற்கு அருகில் செயல்படுகிறது.[4] பாக்கா ஆமைகள் சரணாலயத்தை மலேசியாவின் கடலாமை பாதுகாப்பு சங்கம் (Turtle Conservation Society of Malaysia) (TCS) கண்காணித்து வருகிறது.
இந்தச் சங்கம் 2011-இல் நிறுவப்பட்டது. இது மலேசியாவில் நன்னீர் ஆமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட முதல் அரசு சாரா; இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.[5]
மலேசியாவில் குறைநது வரும் கடலாமைகள் (Sea Turtles) மற்றும் நன்னீர் ஆமைகள் (Freshwater Turtles) ஆகியவற்றின் எண்ணிக்கையை மீட்டெடுப்பதே இந்தச் சங்கத்தின் நோக்கமாகும். சூலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் கடல் ஆமைகள் முட்டையிடும் பருவம் உச்சமாக இருக்கும். கடல் ஆமைகள் எப்போதும் சூரியன் மறைந்த பிறகு முட்டைகள் இடுவதற்காக கடற்கரைகளுக்கு வரும்.[6]
கடலாமைகளைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் மென்மையாகப் பேச வேண்டும்; அத்துடன் பிரகாசமான ஒளி; கடல் ஆமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால், பார்வையாளர்கள் பிரகாசமான ஒளி விளக்குகளைப் பயன்படுத்துவதற்கு தடைசெய்யப்பட்டு உள்ளது.
கெர்த்தே நகரில் (Kerteh Town) பெட்ரோலியம் பதப்படுத்தும் ஆலைகளை (Petroleum Processing Plants) இரவு நேரத்தில் கடந்து செல்வது ஓர் அற்புதமான அனுபவம் என்று சொல்லப்படுகிறது.
வானத்தின் நடுவில் ஒரு விண்மீன் நகரம் (Star City in the Middle Sky) தோன்றுவது போல, பிரகாசமாக ஒளிரும் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை (Huge Refinery Plant) கெர்த்தே நகரில் உள்ளது. ஒரு வெற்று நிலத்தில் திடீரென்று ஒரு விண்மீன் தோன்றுவது போல காட்சிகள் அமைகின்றன என்றும் சொல்லப்படுகிறது.[3]
மலேசியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான சுல்தான் இசுமாயில் மின் நிலையம் (Sultan Ismail Power Station) கெர்த்தே நகரில் உள்ளது. அதனால் பாக்கா நகரமும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த மின் நிலையம், தேசிய மின் நிறுவனமான தெனகா நேசனல் (Tenaga Nasional) மூலம் நடத்தப்படுகிறது.
எரிசக்தி துறைக்குச் சேவை செய்யும் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் புலம்பெயர் வெளிநாட்டினர் பாக்கா நகரில் வசிக்கின்றனர். 2013-ஆம் ஆண்டில், மலேசியாவில் அதிக வாழ்க்கைச் செலவைக் கொண்ட மூன்றாவது இடமாக பாக்கா இடம்பெற்று உள்ளது.