பாபாசு எண்ணெய் (Babassu oil) அல்லது கூசி எண்ணெய் (cusi oil) என்பது தென் அமெரிக்காவின் அமேசான் பகுதியில் வளரும் பாபாசு பனை (அட்டலியா ஸ்பெசியோசா) விதைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு தெளிவான வெளிர்-மஞ்சள் நிறமுடைய தாவர எண்ணெய் ஆகும். இது உணவு, தூய்மிப்புப் பொருள் மற்றும் தோல் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஓர் உலரா எண்ணெய் ஆகும். இந்த எண்ணெயின் பண்புகள் தேங்காய் எண்ணெய் போலவே உள்ளதால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படும் அதே சூழலில் இதுவும் பயன்படுத்தப்படுகிறது. அண்மைக்காலங்களில் இது தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பாபாசு எண்ணெயில் 70% கொழுப்புகள் உள்ளன. அவை பின்வரும் அளவில் காணப்படுகின்றன.[1]
கொழுப்பமிலம் | விழுக்காடு |
---|---|
லாரிக் அமிலம் | 50.0% |
மைரிஸ்ட்டிக் அமிலம் | 20.0% |
பாமிட்டிக் அமிலம் | 11.0% |
ஓலியிக் அமிலம் | 10.0% |
ஸ்டியரிக் அமிலம் | 3.5% |
பாபாசு எண்ணெயிலிருக்கும் லாரிக், மைரிஸ்ட்டிக் அமிலங்களின் உருகு வெப்பநிலை மனிதர்களின் இயல்பு உடல்வெப்பநிலைக்கு அருகிலுள்ளது, எனவே பாபாசு எண்ணெயை திண்ம வடிவில் தோலில் இடும்போது உடற்சூட்டினால் கரைந்துவிடுகிறது. அவ்வேளையில் ஏற்படும் வெப்பப் பரிமாற்றமானது குளிர்ச்சியான உணர்வைக் கொடுக்கிறது. இது ஒரு திறம்மிக்க மென்மையாக்கு களிம்பாகப் பயன்படுகிறது.
2008-ம் ஆண்டு பிப்ரவரியில் விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தின் நல்கையில் உயிரி எரிபொருள் வெள்ளோட்டத்தின் ஒரு பகுதியாக பாபாசு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்ட கலவை, போயிங் 747-ன் ஒரு பொறியைப் பகுதியளவில் இயக்கப் பயன்பட்டது.[2]