பாரா கமான் | |
---|---|
பாரா கமான் சிர்காவின் 1870 ஆண்டைய ஒளிப்படம் | |
வகை | முடிக்கப்படாத கல்லறை கட்டடம் |
கட்டிட முறை | இந்தோ-இசுலாமிக் |
பாரா கமான் (Bara Kaman, பொருள்: பன்னிரண்டு வளைவுகள்) என்பது இந்தியாவின் கர்நாடகத்தின், பிஜாப்பூரில் உள்ள இரண்டாம் அலி அடில் ஷாவின் முடிக்கப்படாத கல்லறை கட்டடம் ஆகும்.
அடில் சாகி வம்சத்தைச் சேர்ந்த அலி அடில் ஷா, நிகரற்ற கட்டடக்கலைத் தரத்தோடு ஒரு கல்லறையைக் கட்ட விரும்பினார். அலி அடில் ஷாவின் கல்லறையைச் சுற்றிலும் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் பன்னிரண்டு வளைவுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், அறியப்படாத காரணங்களினால் கட்டுமான வேலை முழுமையடையாமல் விடப்பட்டது: இரண்டு வளைவுகள் மட்டுமே செங்குத்தாக கட்டப்பட்டன. கல்லறைக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டால் அதன் நிழல் கோல் கோம்பாசைத் தொடும் என்பதால் அதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டதாக வதந்தி பரவியது. கிடைமட்டமாக அமைக்கப்பட்ட பன்னிரண்டு வளைவுகளின் எச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன.
இந்த இடம் இந்தியத் தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
பாரா கமான் கி.பி 1672 இல், இரண்டாம் அலி அடில் ஷாவால் கட்டப்பட்டது. இது அரசரும் அவரது மனைவிகளும் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்க வேண்டும். பாரா கமானில் இரண்டாம் அலி அடில் ஷா, அவரது மனைவி சந்த் பீபி மற்றும் அவரது மகள்களின் கல்லறைகள் உள்ளன. [1]
பாரா கமானின் கட்டிடக் கலைஞர் மாலிக் சண்டால் என்பவர் ஆவார். இந்த கட்டட அமைப்பில் வளைவுகளின் அடிப்புறம் சுவர்கள் அமைக்கப்பட்டன. வளைவுகள் அமைக்கப்பட்ட பிறகு, உள் வளைவுச் சுவர்கள் அகற்றப்பட்டு, வெளிப்புற வளைவுகள் மட்டுமே விடப்பட்டுள்ளன. இதில் காரை பயன்படுத்தப்படவில்லை, அதற்கு பதிலாக கற்களை ஒன்றிணைக்க இரும்பு வளையங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. [1]