அமைப்பு | மலாயா அவசர காலத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தை |
---|---|
இடம் | பாலிங் ஆங்கிலப்பள்ளி Government English School Baling |
முத்திரையிட்டது | 28 திசம்பர் 1955 |
முடிவுக்காலம் | 29 திசம்பர் 1955 |
மத்தியஸ்தர்கள் | டேவிட் மார்ஷல் |
பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் | துங்கு அப்துல் ரகுமான் [சின் பெங்]] |
தரப்புகள் | மலாயா அரசாங்கம் மலாயா கம்யூனிஸ்டு கட்சி |
மொழிகள் | ஆங்கிலம்; மலாய் மொழி |
பாலிங் | |
---|---|
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°21′36″N 100°32′59″E / 5.36000°N 100.54972°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
பாலிங் பேச்சு அல்லது பாலிங் பேச்சுவார்த்தை என்பது (மலாய்: Rundingan Damai Baling; ஆங்கிலம்: Baling Talks; சீனம்: 打包演講) மலேசியா, கெடா மாநிலத்தின் பாலிங் நகரத்தில், 1955 டிசம்பர் மாதம் 28 - 29-ஆம் தேதிகளில், மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்கும் (Communist Party of Malaya - CPM); மலாயா அரசாங்கத்திற்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையாகும். பாலிங் அரசாங்க ஆங்கிலப் பள்ளியில் (Government English School) நடைபெற்றது.[1]
மலாயா அவசரகால நிலைமையைத் தீர்க்கும் முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் மலாயா அரசாங்கத்தைப் பிரதிநிதித்து துங்கு அப்துல் ரகுமான், டத்தோ டான் செங் லோக், சிங்கப்பூர் முதலமைச்சர் டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.[2][3]
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சின் பெங்; அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் ரசீட் மைடின்; மத்திய பிரசார அமைப்பின் தலைவர் சென் தியென் கலந்து கொண்டனர்.[4]
ஒரு சுமுகமான முடிவு காண்பதே அந்த பாலிங் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்கு. ஆனால், சின் பெங் முன்வைத்தக் கோரிக்கைளை மலாயா அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
அதே சமயத்தில் சரணடைதல் விதிமுறைகளை மலாயா கம்யூனிஸ்டு கட்சியினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அதனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இரண்டாம் உலகப் போர் முடிவு அடைந்ததும் மலாயாவில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தலை தூக்கியது. ஜப்பானியர்களை எதிர்த்தப் போராளிப் படையினருக்குப் பிரித்தானியர்கள் ஏற்கனவே ஆயுதங்களை வழங்கி இருந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் பல கொரில்லா போராளிக் குழுக்கள் உருவாகின. அவற்றுள் ஒன்றுதான் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்.[5][6] இந்தக் கொரில்லா போராளிக் குழு பேராக், கெடா, சிலாங்கூர், பகாங், ஜொகூர், மலாக்கா மாநிலங்களில் பரவியிருந்தது.
தவிர, பேராக் மாநிலத்தில் தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், சுங்கை சிப்புட், சிம்மோர், தஞ்சோங் ரம்புத்தான், தம்பூன், கம்பார் நகரம் போன்ற இடங்கள்; கெடா மாநிலத்தில் பாலிங், கிரிக், குரோ, கூலிம் போன்ற இடங்கள்; பகாங் மாநிலத்தில் ரவுப், பெந்தோங், பிரேசர் மலை, போன்ற இடங்கள்; ஜொகூர் மாநிலத்தில் சிகாமட், குளுவாங், மூவார், பத்து பகாட் போன்ற இடங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது.
மலாயா அவசரகாலம் என்பது 1948-ஆம் ஆண்டில் இருந்து 1960--ஆம் ஆண்டு வரை மலாயா எனும் தற்போதைய மலேசியாவில் அமல் படுத்தபட்ட ஓர் ஒழுங்கு நடவடிக்கை காலம் ஆகும். மலாயா அவசரகாலத்தில் Malayan National Liberation Army (MNLA)[7] எனும் மலாயா தேசிய விடுதலை படையினருக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையே நடைபெற்ற ஒரு போரை மலாயா அவசரக் காலப் போர் என்றும் அழைக்கிறார்கள்.
மலாயா தேசிய விடுதலை படை என்பது மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் போர்ப் படை ஆகும். மலாயா காலனித்துவப் பிரித்தானியர்கள், மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் மீது தொடுத்த போரின் காலக் கட்டத்தை மலாயா அவசரகாலம் என்றும் அழைக்கின்றனர். ஆனால், மலாயா தேசிய விடுதலை படையினர் அந்தக் கால கட்டத்தைத் தேசிய பிரித்தானிய எதிர்ப்பு - விடுதலைப் போர் என்று அழைத்தனர்.(Anti-British National Liberation War)[8]
பிரித்தானியர்கள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்திய மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்; பின்நாட்களில் மலாயா கம்னியூஸ்டு கட்சி என்று மாற்றம் அடைந்தது.[9]
மலாயாக் கம்னியூஸ்டுக் கட்சி ஒட்டு மொத்த மலாயாவையும் ஒரு கம்னியூச நாடாக மாற்ற திட்டங்களை வகுத்தது.[10] மலாயாவைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வர பல நாச வேலைகளிலும் ஈடுபட்டது. அந்தக் கட்சிக்குச் சின் பெங் என்பவர் தலைமை வகித்தார்.
மலாயாவில் நடந்த இந்த உள்நாட்டுப் போரில், 1960-ஆம் ஆண்டில், மலாயா கம்யூனிஸ்டுகள் தோல்வி அடைந்தனர். இருப்பினும் அவர்களின் தலைவர் சின் பெங் 1967-ஆம் ஆண்டு அந்தச் சண்டையை மீண்டும் புதுப்பித்தார்.
அதற்கு முன்னரே ஆஸ்திரேலிய, பிரித்தானிய படைகள் அந்தப் போரில் இருந்து மீட்டுக் கொள்ளப்பட்டன. அதன் பின்னர் சின் பெங்கின் புதிய அணுகுமுறையும் தோல்வி கண்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மலாயாவின் பொருளாதாரம் மிக மோசமான பாதிப்பு நிலையை அடைந்தது. வேலையில்லாமை, குறைவான ஊதியம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவின. தொழிலாளர்களிடையே பரவலான அமைதியற்றத் தன்மை இருந்தது.
1946-இல் இருந்து 1948 வரை ஆங்காங்கே வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன. இந்தக் காலகட்டத்தில் பிரித்தானியர் மலாயாவின் பொருளாதாரத்தைச் செப்பனிட பலவகையான முயற்சிகளை மேற்கொண்டனர்.
1948 ஜூன் மாதம் 16-ஆம் தேதி பேராக், சுங்கை சிப்புட்டில் மூன்று ஐரோப்பிய தோட்ட நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அன்று காலை 8.30-க்கு சுங்கை சிப்புட், எல்பில் தோட்டத்தின் நிர்வாகி ஏ.இ.வால்கர் அவருடைய அலுவலக அறை மேசையில் சுட்டுக் கொல்லப் பட்டார்.
அதற்கு அடுத்து, முப்பது நிமிடங்கள் கழித்து இரண்டு கி.மீ. தொலைவில் இருந்த பின் சூன் தோட்ட நிர்வாகி ஜே.எம்.எலிசன் என்பவரும், அவருடைய துணை நிர்வாகி இயான் கிறிஸ்டியன் என்பவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.[11] இந்த அசம்பாவிதங்கள் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களை நிலை தடுமாறச் செய்தது.
கொலை செய்யப்பட்ட பிரித்தானிய நிர்வாகிகளின் உடல்கள் பத்து காஜாவில் உள்ள ஆங்கலிக்கன் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப் பட்டன. அதைத் தொடர்ந்து, பிரித்தானியர்கள் மலாயாவில் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்தனர்.
அதன் வழி மலாயா கம்யூனிஸ்டு கட்சி முற்றாகத் தடை செய்யப்பட்டது. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொதுமக்களும் கைது செய்யப்பட்டனர். விசாரனைகள் இல்லாத கைது நடவடிக்கை தீவிரமாக அமல் படுத்தப்பட்டது.[12]
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக சின் பெங் என்பவர் இருந்தார். மலாயா கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டதும் அக்கட்சியின் உறுப்பினர்கள் கிராமப்புறப் பகுதிகளில் அடைக்கலம் அடைந்தனர்.
மலாயா கம்யூனிஸ்டு கட்சி என்பது மலாயா மக்கள் விடுதலைப் படை என்று மாற்றம் கண்டது. மலாயா கம்யூனிஸ்டுகளினால் கிராமப்புற மக்களின் வாழ்வில் சித்ரவதைகளும் தொல்லைகளும் தொடர்ந்தன.[13]
ஜப்பானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது, மலாயா கம்யூனிஸ்டு கட்சி ஜப்பானியர்களை எதிர்த்து கொரில்லா போர் முறையில் களம் இறங்கியது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பிரித்தானியர்கள் ஏற்கனவே ஆயுதங்களை வழங்கி ஜப்பானியர்களை எதிர்க்கச் செய்தனர். மலாயா கம்யூனிஸ்டு கட்சியினருக்கு பிரித்தானியர்கள் ரகசியமான முறையில் இராணுவப் பயிற்சிகளையும் வழங்கி வந்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மலாயா கம்யூனிஸ்டு கட்சியினரின் ஆயுதஙளைப் பிரித்தானியரிடமே மீண்டும் ஒப்படைக்குமாறு கட்டளையிடப் பட்டது. இருப்பினும் அந்த ஆயுதங்களில் பெருவாரியான ஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. மலாயா கம்யூனிஸ்டு கட்சியினரே வைத்துக் கொண்டனர். பின்னர், அதே ஆயுதங்கள்தான் பிரித்தானியர்களுக்கு எதிராகவும் திசை திருப்ப பட்டன.[14]
மலாயா தேசிய விடுதலை படையினர் (Malayan National Liberation Army) கொரில்லா போர்த் தந்திரங்களைக் கையாண்டனர். மின்நிலையங்கள், நீர்த் தேக்கங்கள் போன்றவற்றைச் சேதம் அடையச் செய்தல், ரப்பர் தோட்டங்களில் தாக்குதல் நடத்துதல், பொது போக்குவரத்திற்கு குந்தகம் விளைவித்தல் போன்றவையே மலாயா தேசிய விடுதலை படையினர் கையாண்ட கொரில்லா போர் தந்திரங்களாகும்.[15]
அப்போது மலாயாவில் 3.12 மில்லியன் சீனர்கள் இருந்தனர். இவர்களில் ஏறக்குறைய 500,000 பேர் மலாயா தேசிய விடுதலை படையினருக்கு ஆதரவாக இருந்தனர். மலாய்க்காரர்களில் சிலரும் ஆதரவு வழங்கினர்.
1955 செப்டம்பர் 8-ஆம் தேதி மலாயா கம்யூனிஸ்டுகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப் படுவதாக மலாயாக் கூட்டரசு அரசாங்கம் அறிவித்தது.[16] இதே போன்ற ஓர் அறிவிப்பைச் சிங்கப்பூர் அரசாங்கமும் அறிவித்தது.
ஆனால், மலாயா தேசிய விடுதலை படையினருடன் எந்தவிதப் பேரமும் பேச முடியாது என்று அப்போதைய மலாயாவின் முதலமைச்சர் துங்கு அப்துல் ரகுமான் உறுதியாக அறிவித்தார். பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.
ஆனால், அது தொடர்பாக எந்தப் பேரமும் பேச முடியாது. இது அரசாங்கத்தின் தீர்க்கமான முடிவு என்று துங்கு அப்துல் ரகுமான் திடமாகச் சொல்லி விட்டார்.[17]
தன்னுடைய நோக்கம் வெற்றி பெறவில்லை என்பதை உணர்ந்த சின் பெங், ஆளும் பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்த அழைப்பு விடுத்தார். அந்தப் பேச்சு வார்த்தை மலேசிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றது. 1955 டிசம்பர் 28-ஆம் தேதி கெடா, பாலிங்கில் உள்ள பாலிங் அரசாங்க ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்றது.
சண்டை சச்சரவுகளுக்கு ஒரு சுமுகமான முடிவு காண்பதே அந்த பாலிங் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்கு ஆகும். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் சின் பெங் முன்வைத்தக் கோரிக்கைளை மலாயா அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இறுதியில் பாலிங் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
அடுத்தக் கட்டமாக நியூசிலாந்து தன்னுடைய இராணுவப் படையை மலாயாவுக்கு அனுப்பியது. பொதுநலவாய உறுப்பு நாடுகள் (Commonwealth Countries) தத்தம் படைகளையும் மலாயாவுக்கு அனுப்பி வைத்தன.
பாலிங் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததினால், 1956 பிப்ரவரி 8-ஆம் தேதி முதலமைச்சர் துங்கு பொது மன்னிப்பை மீட்டுக் கொண்டார். மலாயா கம்யூனிஸ்டுகளுக்கு ஐந்து மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் கம்யூனிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றும் உறுதியாகச் சொன்னார்.[19]
எனினும், மலாயா கம்யூனிஸ்டு கட்சி மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்த தன்னால் இயன்ற வரை முயற்சிகள் செய்து பார்த்தது. ஆனால், அனைத்தும் வெற்றி பெறவில்லை.
மலாயா சுதந்திரம் அடைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் கூட, ஆகக் கடைசியாக மலாயா கம்யூனிஸ்டு கட்சி இன்னொரு முயற்சி செய்து பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு கேட்டது. ஆனால், துங்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
1957 ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி மலாயா சுதந்திரம் அடைந்தது. மறு ஆண்டில் பேராக், தெலுக் இந்தானில் கம்யூனிஸ்டு கொரில்லாக்கள் கடைசியாக ஒரு தாக்குதல் நடத்தினர். அதுதான் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் கடைசி தாக்குதல்.
அந்தத் தாக்குதலில் வெற்றி பெற முடியாமல் போகவே, தாக்குதல் நடத்திய அனைவரும் அரசாங்கக் காவல் துறையிடம் சரண் அடைந்தனர்.
மலாயாவில் ஆங்காங்கே எஞ்சியிருந்த கம்யூனிஸ்டு கொரில்லாக்கள் தென் தாய்லாந்து எல்லையில் தஞ்சம் அடைந்தனர். 1960 ஜுலை 31-இல் அவசரகாலம் முடிவிற்கு வந்ததாக மலாயா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன் பின்னர் சின் பெங், தென் தாய்லாந்தில் இருந்து சீனா, பெய்ஜிங்கிற்குச் சென்றார். அவருடன் முக்கியமான சிலரும் சென்று சீனாவில் அடைக்கலம் அடைந்தனர். சின் பெங் 2013 செப்டம்பர் 16 ஆம் திகதி தாய்லாந்து தலைநகரமான பாங்காக்கில் காலமானார். பாங்கோக் போஸ்ட் நாளிதழ் செய்திகளின் படி, அன்றைய தினம் அதிகாலை மணி 6.20 மணியளவில் சின் பெங் வயது மூப்பு காரணமாகக் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு மலேசியா – தாய்லாந்து இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஹாட்யாய் ஒப்பந்தத்தின் படி, கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பலர் மலேசியாவிற்குத் திரும்பினர். ஆனால் சின் பெங்கை மட்டும் மலேசியாவிற்குள் நுழைய மலேசிய அரசாங்கம் தடை விதித்தது. அதனால் அவர் தன்னுடைய வாழ்நாளில் பல வருடங்களைத் தாய்லாந்திலேயே கழித்தார்.
மலாயா தேசிய விடுதலை படையினருக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையே நடைபெற்ற இந்த மலாயா அவசர காலப் போரில்...
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)