இஸ்கான் புதிய விருந்தாவனம் | |
---|---|
இணைக்கப்படாத பகுதி | |
![]() பொன் மாளிகை | |
ஆள்கூறுகள்: 39°57′53″N 80°36′23″W / 39.96472°N 80.60639°W | |
Country | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | மேற்கு வர்ஜீனியா |
கவுண்டி | மார்சல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.9 sq mi (4.8 km2) |
• நிலம் | 1.8 sq mi (4.7 km2) |
• நீர் | 0.04 sq mi (0.1 km2) |
ஏற்றம் | 1,175 ft (358 m) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 352 |
• அடர்த்தி | 190/sq mi (73/km2) |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
அஞ்சல் குறியீட்டு எண் | 26041 |
இடக் குறியீடு | 304/681 |
GNIS feature ID | 1717344 [1] |
புதிய விருந்தாவனம் (New Vrindaban) என்பது அமெரிக்காவின், மேற்கு வர்ஜீனியா மாநிலம், மார்ஷல் கவுண்டியின் அமைதி தவழும் அப்பலாச்சிய மலைத்தொடரின் மடியில், ஒஹையோ பள்ளத்தாக்கின், கிராமத்துச் சூழலில் அமைந்துள்ள இஸ்கான் (கிருஷ்ண விழிப்புணர்விற்கான பன்னாட்டு சமூகம்) (அரே கிருஷ்ணா) பன்னாட்டு சமூகம் ஆகும்.[2][3]
புதிய விருந்தாவனம் ஒரு புனிதத் தலமாகவும், மேற்கில் ஒரு ஆன்மீக சுற்றுலாத் தலமாகவும் இருக்கிறது. அனைத்து பின்னணியினைக் கொண்ட மக்களுக்கு, பக்தி யோகம் எனப்படும் அன்பு மற்றும் பக்தியுடன் கூடிய மனநிலையில் கடவுளுடன் இணைவதற்கான வாய்ப்பை இவ்வமைப்பு வழங்குகிறது. கலைநயமிக்க இராதா விருந்தாவன சந்திர கோவில், பசு பாதுகாப்பு சரணாலயம், அழகான ரோஜா பூங்கா, தாமரை நிரம்பிய ஏரிகள், மயிலாடும் நடைபாதைகள் என அனைத்தும் அமைதியான ஆன்மீக சூழலை உருவாக்குகின்றன.[2]
புதிய விருந்தாவனம் பிலடெல்பியாவிலிருந்து 348 மைல் தொலைவிலும், பால்டிமோரிலிருந்து 291 மைல் தொலைவிலும், வாசிங்டன் டி .சி யிலிருந்து 278 மைல் தொலைவிலும், கொலம்பசிலிருந்து 141 மைல் தொலைவிலும், பிட்சுபர்க்கிலிருந்து 64.3 மைல் தொலைவிலும், வீலிங் (Wheeling) நகரிலிருந்து 16.7 மைல் தொலைவிலும், மவுண்ட்சுவில்லில் இருந்து 11.5 மைல் தொலைவிலும், மக்கிரியரி ரிட்ஜ் சாலையிலிருந்து 1.9 மைல் தொலைவிலும், அமைந்துள்ளது. இதன் புவியமைவிடம் 39°57'59.72" N அட்சரேகை 80°36'23.08" W தீர்க்க ரேகை ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1,175 அடி (358 மீ) உயரத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த புனித கிராமமான விருந்தாவனத்தின் பெயரால் 'புதிய விருந்தாவனம்' அமைந்துள்ளது. இஸ்கான் அமைப்பின் நிறுவுனரான பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் தொடக்ககால சீடர்களான, கீர்த்தானந்தா சுவாமி, மற்றும் அயகிரீவா சுவாமி ஆகியோரின் முயற்சியால், பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் வழிகாட்டுதல்களோடு, இந்தச் சமூகம், 1968 ஆண்டு உருவானது.[2][4] இதனை அமெரிக்காவின், முதல் அரே கிருஷ்ணாவின், தன்னிறைவு பெற்ற சமூகமாகவும் உருவாக்கியுள்ளார்.
1970 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இந்த சமூகத்தின் மக்கள் தொகை நூற்றுக்கு மேல் பெருகியது. முதல் பத்து ஆண்டுகளில் (1968 முதல் 1978 வரை), இங்கு வாழ்க்கை சிக்கனமாக இருந்தது; எனினும் உற்சாகம் அதிகமாக இருந்தது. இக்காலகட்டத்தில் நிறைய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அரே கிருஷ்ண பக்தர்கள் இரண்டு கோவில்களைக் கட்டினார்கள். பசுப் பாதுகாப்புத் திட்டம் நிறுவப்பட்டது. உணவுக்காக நிலத்தில் பயிரிட்டனர். ஒரு பள்ளியைத் தொடங்கினர். முதல் விருந்தினர் மாளிகையைக் கட்டினார்கள். முத்தாய்ப்பாக பிரபுபாதாவின் பொன் மாளிகையைக் கட்டத் தொடங்கினர்.[4]
1980 ஆம் ஆண்டுகளில் இச்சமூகத்தின் மக்கள் தொகை 500 மேல் இருந்தது. 1988 ஆம் ஆண்டளவில் சமூகத்தின் மக்கள் தொகை 600 ஆக உயர்ந்தது. புதிய விருந்தாவனம் 2,500 ஏக்கர் பரப்பளவில் பரவியது.பிரபுபாதாவின் பொன் மாளிகை கட்டுமானம் நிறைவடைந்தது. வர்ணாசிரமக் கல்லூரி, விருந்தாவனம் பரிசுக் கடை, கோவிந்தா உணவகம் மற்றும் கோவர்தன் பால் பண்ணை ஆகிய அமைப்புகள் உருவாயின. மேற்கு வர்ஜீனியா மாநிலம் புதிய விருந்தாவனை ஓர் இணைக்கப்படாத நகரமாக (Unincorporated town) அங்கீகரித்துள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறை இந்த நகரத்தை அதிகாரப்பூர்வ மாநில வரைபடத்தில் சேர்த்தது.[4]
இந்தப் பதின்ம ஆண்டின் இறுதியில், முதிர்ச்சியடையாத மற்றும் அனுபவமற்ற தலைவர்களின், மாறுபட்ட யோசனைகளும், நடைமுறைகளும் புதிய விருந்தாவனத்திற்குப் பல சிக்கல்களை ஏற்படுத்தின. 'புதிய விருந்தாவனம்,' இஸ்கான் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்களும் இங்கிருந்து வெளியேறினர். வேறு இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த பக்தர்களின் முயற்சியால் புதிய விருந்தாவனம் மீண்டெழுந்தது. ரூபனுகா வேதக் கல்லூரி, பசுப் பாதுகாப்புக்கான இஸ்கான் சமூகம், குருகுல மறுசந்திப்பு (Gurukuli reunion) மற்றும் சூழலியல் சார்ந்த விருந்தாவனம் ஆகிய அமைப்புகள் உருவாயின. இஸ்கான் அமைப்பு மீண்டும் புதிய விருந்தாவனை முற்றிலும் ஏற்றுக்கொண்டது.[4]
அடுத்த பதின்ம ஆண்டுகளில் பிரபுபாதாவின் பொன் மாளிகை புதுப்பிக்கப்பட்டது. இராதா கோபிநாதன் கோவில் கட்டப்பட்டது. யோகமையம் உருவானது. ஹோலி, மலர் அபிசேகத் திருவிழா, இரதயாத்திரை போன்ற விழாக்கள் நிகழ்த்தப்பட்டன. 2018 ஆம் ஆண்டில் புதிய விருந்தாவனின் பொன் விழா கொண்டாடப்பட்டது.[4]
இறைச்சி உண்ணுதல் எதிர்மறை கர்மாவை உருவாக்குகிறது எனும் கருத்தில் இந்த சமூகத்தினர் சைவ உணவு மட்டும் உண்கிறார்கள். இவ்வளாகத்தில் மதுபானங்கள், மற்றும் பிற சட்டவிரோதப் போதைப் பொருட்கள் (மருந்துகள் போன்றவை) தடைசெய்யப்பட்டுள்ளன.[2]
இராதா விருந்தாவன் சந்திரா கோவில் ஆண்டின் 365 நாட்களும் திறந்திருக்கும். காலை 05.00 மணிக்கு வழிபாடு தொடங்கி, நாள் முழுக்க தொடர்ந்து நடைபெறுகிறது. ஆன்மீகப் பயணிகள் எந்த நேரம் வேண்டுமானாலும் இந்த வழிபாடுகளில் கலந்துகொள்ளலாம்.[5]
கோவிலின் நுழைவாயிலில் இரண்டு துவாரபாலர்களின் சிற்பத்தைக் காணலாம். கோவிலின் மிகப்பெரிய மரபார்ந்த மண்டபத்தின் உள்ளே, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்த 24 நான்கு தூண்களின் தலைப்பில் சிங்கங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கூரையிலும் நேர்த்தியான மர வேலைப்பாடுகளைக் காணலாம். உருளை வடிவிலான (barrel shaped) மண்டபத்தின் முற்றம் (Atrium) வண்ணக் கண்ணாடி ஓவியங்களால் (Stained glass painting) அலங்கரிக்கப்பட்டுள்ளன. மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலவர் சன்னதியில் (Main Altar) பொன் இழைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் மூலவரான இராதா விருந்தவன் சந்திரா இச்சன்னதியில் காட்சி தருகிறார். சிறீ சிறீ கௌர நிதய் (16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு தெய்வீக ஆளுமைகள்: சைதன்யா மற்றும் நித்தியானந்தா), விருந்தாவன மாதவன், துளசி தேவி, சிறீ. கோபிநாத்ஜி, கிரிராஜ கோவர்தனன், சிறீல பிரபுபாதா ஆகிய தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன. ஜெகந்நாத சன்னதியில் ஜகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்திரை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிறீ நரசிம்மர் சன்னதியில் சிறீ நரசிம்மர், பிரகலாதர், இலக்குமி நரசிம்ம சாளக்கிராம சிலைகள் ஆகிய தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. மைய சன்னதியின் வலப்புறம் இந்தியாவில், விருந்தாவனத்தில் வாழ்ந்த, ஆறு கோசுவாமிகளின் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. மண்டபத்தின் இடது பக்கச் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் சிறீல பிரபுபாதாவின் திருவுருவச்சிலை இடம்பெற்றுள்ளது.[2][5]
காலை 05.00 மணி: குரு வழிபாடு; பிரேம தொனி வழிபாடு; நரசிம்ம வழிபாடு; துளசி பூசை; வாழ்த்தும் வணக்கமும். காலை 05.45 மணி முதல் 07.30 மணி வரை: ஜெபமாலையுடன் ஜெபம்; காலை 07.30 மணி: பிரம்ம சம்கிதை பாராயணம் காலை 07.40 மணி: குரு பூசை காலை 08.00 மணி: பகவத் கீதை வகுப்பு மதியம் 12.30 மணி: நண்பகல் ஆரத்தி மாலை 04.30 மணி: பிற்பகல் ஆரத்தி மாலை 07.00 மணி: மாலை வழிபாடு[2]
நித்தியானந்த திரயோதசி, கவுர பூர்ணிமா, பலராம பூர்ணிமா, இராமநவமி, பசுக்களுக்கான விழா, நரசிம்ம சதுர்தசி, ஸ்நான யாத்திரை, மலர் திருவிழா, கிருட்டிண செயந்தி, இராதா அட்டமி, ஓலி (Holi), தீபாவளி, கார்த்திகை மாத விழா, கோவர்தன / கோ பூசை, நன்றி நவிலும் விழா (Thanks Giving Day), கீதா செயந்தி, அன்னப்படகு திருவிழா (தெப்பம்), சிறீல பிரபுபாதரின் பிறந்த தினம், சிறீல பிரபுபாதரின் இறந்த தினம்,[6] ஆகிய பண்டிகைகளும், விழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.
அமெரிக்காவில் பார்க்க வேண்டிய எட்டு மத அதிசயங்களில் ஒன்று என்று கருதப்படும் பொன் மாளிகை (Palace of Gold) ஒரு கலைப்பொக்கிசம் ஆகும். அமெரிக்காவில் பார்க்க வேண்டிய மிக அழகான 30 இடங்களில் ஒன்று - பிசினஸ் இன்சைடர்.[7] ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை மதிக்கும் வகையில் இம்மாளிகை கட்டப்பட்டது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மேல்தளம், குவிமாடங்கள், நுணுக்கமாக செதுக்கப்பட்ட தேக்கு மர அலங்காரக் கூரைகள், உத்தர வளைவுகள், மற்றும் தூண்கள், கையால் செய்யப்பட்ட ஆஸ்திரிய கிரிஸ்டல் சரவிளக்குகள், 52 வகையான பளிங்கு மற்றும் ஓனிக்ஸ் கற்களைப் பயன்படுத்தி நேர்த்தியான வேலைப்பாடு, கண்கவர் வண்ணக் கண்ணாடி கலை வேலைப்பாடு, 8000 சதுர அடிக்கு மேல் 22 காரட் தங்க-இழை இழைத்த வேலைப்பாடு, அசல் ஓவியங்கள், மற்றும் நூறு வகை ரோஜா பூக்களுடன் வண்ணப் பூந்தோட்டம்[8] மற்றும் பட்டுக்கம்பளப் புல்வெளிகள், தாமரைக் குளம், என்று இந்தப் பொன் மாளிகை மிளிர்கிறது. இப்போது தேசிய வரலாற்று இடங்களின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.[3][7][9]
பசுக்களைப் பாதுகாப்பது புதிய விருந்தாவன சமூகத்தின் மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும். 1969 ஆம் ஆண்டு முதல், புதிய விருந்தாவன சமூகம் பசு பாதுகாப்பு சரணாலயமான கோசாலையில் உள்ள பசுக்களைப் பாதுகாத்து சேவை செய்து வருகிறது. அதற்கு ஈடாக, பசுக்கள் வழங்கும் சுவையான பால், கோவிலில் உள்ள இறைவனுக்கு தினமும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இன்று வரை புதிய விருந்தாவன சமூகம் கோசாலை பணியை இடைவிடாது நடத்தி வருகிறது. இங்குள்ள பசுக்களுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இங்கு வரும் ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் இந்த சரணாலயத்திற்கு வந்து பசுக்களை வாஞ்சையுடன் தொட்டுக் கட்டிப்பிடித்து மகிழ்கிறார்கள்.[10]
இங்குள்ள மாளிகை தங்கும் விடுதியில் (The Palace Lodge) கட்டண வீதம்: ஒற்றைப் படுக்கை ($77.28), இரட்டைப் படுக்கை - க்வீன் எல் ($110.88), இரட்டைப் படுக்கை - க்வீன் ஜி ($134.40), இரட்டைப் படுக்கை கிங் ஜி அறை ($134.40) மற்றும் இரட்டை படுக்கைகள் - டி அறை ($123.08) ஆகியவற்றில் 280 பேர் வரை வசதியாகத் தங்க முடியும். இவை தவிர, வனப்பகுதி அல்லது ஏரிக்கரைப் பகுதியில் பல குடில்கள் (Cabins) அமைக்கப்பட்டுள்ளன. குடில் விவரம்:- வனக்குடில் மூன்று படுக்கை ($196), வனக்குடில் மாடியுடன் ($196), ஏரிக்குடில் மாடியுடன் ($196), குடில் 12 ($196), வாடகைக்குக் கிடைக்கின்றன.[11]
கோவிந்தா உணவகம் (Govinda’s Restaurant), ஓஹியோ பள்ளத்தாக்கில் உள்ள முன்னணி சைவ உணவகமாகும், இங்கு பல்வேறு சுத்த சைவம் (Vegetarian) மற்றும் நனி சைவ (Vegan) உணவுகள் இரவு உணவாகப் பரிமாறப்படுகின்றன.[12]
புதிய விருந்தாவனத்தின் யோக மையம், மரங்கள் அடர்ந்து, நீர்ததும்பும் ஏரிக்கரையில், அமைந்துள்ளது. அமைதி தவழும் இச்சூழலில், தியானம், யோகாசனங்கள், போன்ற மரபார்ந்த உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.[13]
புதிய விருந்தாவனத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் புல்வெளிகள், பள்ளத்தாக்குகள், மண்மேடுகள், அடர்ந்த மரங்கள் நிறைந்த மலைகள் என்று வியக்க வைக்கும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது. இந்த வளாகத்தைச் சுற்றி மேற்கொள்ளும் நடைப்பயிற்சிக்கு "மயில் நடைப்பயிற்சி" (Peacock Walk) என்று பெயர். கோவிலுக்கு அருகில் உள்ள பெரிய குளத்தைச் சுற்றி நடை பயிலலாம். வழியெங்கும் மயில்கள், அன்னப்பறவைகள், மற்றும் சிறப்பு இன வாத்துகள் சுற்றித் திரிவதைக் காணலாம்.[14]
இங்குள்ள பரிசுக் கடையில், இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்திய ஆடைகள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், பொம்மைகள், அலங்காரப் பொருட்கள், ஆன்மீகக் கலைப்பொருட்கள், நகைகள், தேன், நெய், இஸ்கான் வெளியீட்டு நூல்கள் போன்ற பல்வேறு பரிசுப்பொருட்களை வாங்கலாம்.[15]
பகுப்பு:மேற்கு வர்ஜீனியா