பொக்காரா சாந்தி தூபி (Pokhara Shanti Stupa), நேபாள நாட்டின் மத்திய-மேற்கில் இமயமலை பகுதியில் உள்ள காஸ்கி மாவட்டத் தலைமையிட நகரமான பொக்காராவிற்கு அருகே உள்ள ஆனந்தா மலையில், உலக அமைதிக்காக நிறுவப்பட்ட பௌத்தத் தூபி ஆகும். இத்தூபி பௌத்தக் கட்டிட கலையில், அடுக்குத் தூபி (பகோடா) வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. [1].
நிப்போன்சாங்-மையோகோஜி மடாலயத்தை நிறுவிய பௌத்த பிக்கு நிசிதாத்சு பியூஜியின் ஆலோசனையின் படி, மொரியோகா சோனின் என்ற பௌத்த பிக்கு, உள்ளூர் மக்களின் உதவியுடன், பொக்காராவில் உலக அமைதிக்கான தூபியை நிறுவினார்.
சமசுகிருத மொழியில் சாந்தி என்பதற்கு அமைதி, சமாதானம் என்பர். உலக அமைதியை வேண்டி, இத்தூபி பொக்காராவில் நிறுவப்பட்டதால், இதனை பொக்காரா உலக அமைதிக்கான தூபி என்பர்.
நேபாளத்தின் பொக்காரா நகரத்திற்கு அருகமைந்த இமயமலைத் தொடரில் உள்ள 1,100 மீட்டர் உயர ஆனந்தா மலையில், சாந்தி தூபி நிறுவுவதற்கு கட்டுமான அடிக்கல் நாட்டு விழா, பௌத்த பிக்குவும், அறிஞருமான நிசிதாத்சு பியூஜியால் 12 செப்டம்பர் 1973 அன்று மேற்கொள்ளப்பட்டது.[1][2]
உலகின் அமைதிக்கான அடுக்குத் தூபிகளில் இரண்டு நேபாளத்தில் உள்ளது. ஒன்று கௌதம புத்தர் பிறந்த லும்பினியிலும் மற்றொன்று பொக்காராவிலும் உள்ளது. பன்னாட்டு சுற்றுத்தலமான பொக்காரா அருகே இமயமலையின் அன்னபூர்ணா 1 கொடுமுடியும், மனதைக் கவரும் பேவா ஏரியும் அமைந்துள்ளது.[3]
பொக்காராவில் உலக அமைதியின் சின்னமாக, தூபியை நிறுவ முன்னோடியாக இருந்தவர், திபெத்திய பௌத்த பிக்கு நிசிதாத்சு பியூஜி ஆவார். [4]பௌத்த அறிஞர் நிசிதாத்சு பியூஜியின் ஆலோசனையின் படி, பொக்காராவின் நிப்போன்சாங்-மையோகோஜி பௌத்த மடாலயம் மற்றும் உள்ளூர் மக்களின் துணையோடு, பௌத்த பிக்கு மொரியோகா சோன் என்பவர் உலக அமைதிக்கான தூபியை நிறுவினார். இப்பணிக்கு உறுதுணையாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பொக்காராவின் தர்மசில்லா விகாரையின் தலைமைப் பிக்குணி மற்றும் நேபாள அரசின் துணை பாதுகாப்பு அமைச்சருமான மின் பகதூர் குரூங் ஆவர்.
இத்தூபியின் துவக்க கட்டுமானத்தின் போது நேபாள அரசு, பல குற்றச்சாட்டுகளை எழுப்பி, கட்டுமானத்தில் ஈடுபட்டவர்களை பல முறை கைது செய்தது.[2] மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள அரசின் முதல் துணை பாதுகாப்பு அமைச்சராக இருந்த மின் பகதூர் குரூங், உலக அமைதிக்கான தூபி கட்டுமானத்திற்கான நிலத்தை நன்கொடையாக வழங்கியதால், அவரது நற்பணியை பாராட்டும் விதமாக, மின் பகதூர் குரூங் உருவச் சிலையை, உலக அமைதிக்கான தூபிக் கோயிலுக்கு முன் நிறுவப்பட்டது.[1] 28 நவம்பர் 1973ல் கௌதம புத்தரின் உருவச் சிற்பத்துடன் கூடிய தியான மண்டபம், விருந்தினர் மாளிகை கட்டி முடிக்கப்பட்டது.
உள்ளூர் கிராம வளர்ச்சி குழுவின் அனுமதியின்றி கட்டப்பட்ட, உலக அமைதிக்கான பகோடா 35 அடி உயரம் வரை கட்டிக் கொண்டிருக்கையில், நேபாள மன்னர் அரசும், உள்ளூர் கிராமிய வளர்ச்சிக் குழுவும் சேர்ந்து, பாதுகாப்பு காரணங்களால் தூபியின் கட்டுமானத்தை நிறுத்தினர். மேலும் இதுவரை மேற்கொண்ட கட்டுமானப் பணிகளையும் இடித்து அகற்றினர்.[2]
21 மே 1992 அன்று நேபாள பிரதம அமைச்சரும், நேபாளி காங்கிரசு கட்சியின் தலைவருமான, கிரிஜா பிரசாத் கொய்ராலா பொக்காராவின் ஆனந்தா மலையில், உலக அமைதிக்கான தூபியை மீண்டும் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். உள்ளூர் மக்களின் ஆதரவுடனும், பிக்குகள் துணையுடனும் அமைதிக்கான தூபியின் கட்டுமானப் பணி எவ்வித தடையின்றி தொடரப்பட்டு, முடிக்கப்பட்டது. கிரிஜா பிரசாத் கொய்லாரா முன்னிலையில், 30 அக்டோபர் 1999 அன்று உலக அமைதிக்கான தூபியின் திறப்பு விழா நடைபெற்றது. [2]
பொக்காராவின் சாந்தி தூபி, நேபாளத்தின் முதல் உலக அமைதிக்கான அடுக்குத் தூபி ஆகும். இது திபெத்திய பௌத்த மடலாயமான நிப்போன்சாங்-மையோகோஜி மடாலயத்தைத்தின் தலைமை பிக்குவான நிசிதாத்சு பியூஜியின் ஆலோசனையின் படி, பிக்கு நிப்போன்சான் மொரியோகா சோன் குழுவினரால் 30 அக்டோபர் 1999 அன்று கட்டி முடிக்கப்பட்டது.
115 அடி உயரம் மற்றும் 344 அடி சுற்றளவுடன், வெள்ளை நிறத்தில் அமைந்த உலக அமைதிக்கான இந்த தூபி, இரண்டு தளங்களுடன் கூடியது.[1]இரண்டாவது தளத்தில், ஜப்பான், இலங்கை, தாய்லாந்து மற்றும் லும்பினி எனும் நான்கு இடங்களிலிருந்து பெறப்பட்ட புத்தரின் நான்கு மாதிரி உருவச் சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. [1][5]அடுக்குத் தூபியின் உச்சியின் கூரான பகுதியில், பிறவிச் சுழற்சி, தரும நெறிகள் மற்றும் புத்தரின் நற்செய்திகளை நினைவுபடுத்தும் விதமாக தங்கத்தில் தர்மச் சக்கரத்தை நிறுவியுள்ளனர். தர்மசக்கரத்தின் மேல் உள்ள தூய்மையான படிகக் கல், அறிவு மற்றும் கருணை ஆகிய நெறிகளை அடையாளப்படுத்துகிறது. இப்படிகக் கல் இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்டது. [1]
உலக அமைதிக்கான தூபியின் அருகே உள்ள தம்மா மண்டபத்தில் கௌதம புத்தரின் சிலை உள்ளது. இம்மண்டபத்தில் பௌத்த பிக்குகள், பிக்குணிகள் மற்றும் உபாசகர்கள் தங்கள் சமயச் சடங்குகளை மேற்கொள்கின்றனர். [6]
பொக்காரா சாந்தி தூபிக்கு அருகே பொக்காரா, பேவா ஏரி, அன்னபூர்ணா 1 போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளது. [7]
உலக அமைதிக்கான தூபிகளில் சிலவற்றின் காட்சிகள்: