மயூராக்சி ஆறு | |
மோர் ஆறு | |
River | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலங்கள் | ஜார்கண்ட், மேற்கு வங்காளம் |
கிளையாறுகள் | |
- வலம் | கோபை ஆறு, பிரம்மானி ஆறு, துவாரகா ஆறு, பக்ரேசுவர் ஆறு |
நகரங்கள் | துங்கா, சூரி, சைந்தியா |
அடையாளச் சின்னங்கள் |
மசஞ்சோர் அணை, Tilpara Barrage |
உற்பத்தியாகும் இடம் | திரிகுற் மலை |
நீளம் | 250 கிமீ (155 மைல்) |
மயூராக்சி ஆறு இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு பெரிய ஆறு ஆகும். இது மோர் ஆறு எனவும் அறியப்படுகிறது. இவ்வாற்றில் பல வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. இதன் தோற்றுவாய் ஜார்கண்ட் மாநிலத்தின் தியோகர் நகரிலிருந்து 16 கிலோமீட்டர்கள் (10 mi) தூரத்தில் உள்ள திரிகுற் மலை ஆகும்.[1] இது ஜார்கண்ட் ஊடாகப் பாய்ந்து மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டம் மற்றும் முர்சிதாபாத் மாவட்டங்கள் ஊடாகச் சென்று ஊக்லி ஆற்றில் கலக்கிறது. இது ஏறத்தாழ 250 கிலோமீட்டர்கள் (160 mi) நீளமானது.[2]
மயூரம் என்றால் மயில்; அக்சி என்றால் கண். மயூராக்சி என்பது மயிலின் கண் எனப் பொருள்படுகின்றது. மயிலின் தோகையில் உள்ள இறகுகளுக்கு ஒப்பிட்டு இந்தப் பெயர் உருவானது. இது பருவமழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பெருக்கெடுத்துப் பெரும் அழிவுகளை உருவாக்குகிறது.
சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தில் இருந்து உற்பத்தியாகும் நதிகள் பெரும்பாலும் பருவமழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகின்றன. இந்த ஆற்றின் நீரேந்து பிரதேசங்களில் கிடைக்கும் ஆண்டு மழைவீழ்ச்சி 765 மில்லிமீற்றர் முதல் 1607 மில்லிமீற்றர் ஆகக் காணப்படுகிறது. சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 1200 மில்லிமீற்றர் ஆகும். மழைவீழ்ச்சியின் 80% பருவ மழைக் காலமான சூலை முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியிலேயே கிடைக்கிறது.[3] 1787, 1806 மற்றும் 1902இல் பெரும் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன. செப்டெம்பர் 1902இல் பிரம்மானி ஆறும் மயூராக்சி ஆறும் பெருக்கெடுத்து கரைகளிலுள்ள ஊர்களை நீரில் மூழ்கடித்தன. சில இடங்களில் வெள்ளம் சுமார் 4 முதல் 6 மீட்டர் வரை மூடியது.[4] 1955இல் மயூராக்சி ஆற்றுக்குக் குறுக்கே மசஞ்சோர் அணை கட்டப்பட்டது. இது கனடாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டு கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் லெஸ்டர் பி பியர்சன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.[5] இந்த அணை 47 மீட்டர் உயரமானதும் 660 மீட்டர் நீளமானதும் ஆகும். இதன் நீர்த்தேக்கம் 67.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையதுடன் 620,000,000 கனமீட்டர் கொள்ளளவு உடையது. இந்த அணை கட்டுவதற்கு ரூபா 16.10 கோடி செலவானது.[2]
இந்த அணை கட்டப்பட்டாலும் 1960இற்கும் 2000இற்கும் இடையில் ஐந்து ஆண்டுகளைத் தவிர ஒவ்வோர் ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 1978இல் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் பின்னர் 1998, 1999, 2000 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் அடுத்தடுத்து வெள்ளப்பெருக்கு காரணமாக மேற்கு வங்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 1978இல் பாகீரதி நதியின் நீரேந்து பிரதேசங்களில் 72 மணித்தியாலங்கள் நீடித்த தொடர் மழை காரணமாக நாடியா மாவட்டம், முர்சிதாபாத் மாவட்டத்தின் பெரும்பகுதி, வடக்கு 24 பர்கானாசு மாவட்டம் ஆகியன நீரில் மூழ்கின. இந்த வெள்ளம் வடிவதற்கு நீண்ட காலம் எடுத்தது.
மசஞ்சோர் அணை மூலம் 2,400 சதுரகிலோமீட்டர் பரப்பளவுக்கு நீர்ப்பாசனம் செய்ய முடிகிறது. இதன் பயனாக உணவுப்பொருட்கள் உற்பத்தி ஆண்டுக்கு 400,000 தொன்களால் அதிகரித்தது.[6] இந்த அணை மூலம் 2000 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.[7]
கோபை ஆறு, பிரம்மானி ஆறு, துவாரகா ஆறு மற்றும் பக்ரேசுவர் ஆறு ஆகிய கிளை ஆறுகள் மயூராக்சி ஆற்றில் வந்து கலக்கின்றன.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)